Breaking News :

Tuesday, April 15
.

மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?


மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடை பிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.

"அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே" என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன் போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக் கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

மனைவி செய்யும் அனைத்து நல்ல விஷயங்கள் அனைத்தும் காலபோக்கில் மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்படுத்தி விடும்.

இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை, வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கவியரசர் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டால் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும்கூறுகிறார் கவியரசர் கண்ணதாசன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.