Breaking News :

Saturday, May 03
.

பெரியவா சொன்ன 13 வயதில் எற்பட்ட துறவு வாழ்க்கை!


மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!’

( எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்திருந்த பிரார்த்தனை )

பெரியவா அவர் வாயால் சொன்ன தன் பதின்மூன்று வயதில் எற்பட்ட துறவு வாழ்க்கை

1907-ம் வருடம் ஆரம்பம். தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள திண்டிவனத்தில் கிறிஸ்துவ மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முந்தின வருடம் எங்கள் டவுனுக்கு வந்திருந்த காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள், கலவை கிராமத்தில் சித்தி அடைந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆற்காட்டிலிருந்து 10 மைல் தொலைவிலும் காஞ்சியிலிருந்து 25 மைல் தொலைவிலும் இருப்பது அந்தக் கிராமம்.

என் தாய் வழி சகோதரான ஒருவர், சிறிது காலம் ரிக் வேதம் அத்யயனம் செய்தபின், ஆசாரிய சுவாமிகளின் முகாமில் சேர்ந்திருந்தார். அவரை பீடாதிபதியாக ஆக்கியிருந்ததாய்ச் செய்தி வந்தது. என் தாயாரின் ஒரே சகோதரி விதவை, திக்கற்றவள். அவளுடைய ஒரே மகன் அவர். முகாமில் அவளைத் தேற்றுவதற்கு ஒரு ஆத்மாவும் கிடையாது.

அந்தச் சமயம், என் தந்தை திண்டிவனம் தாலுகாவில் பள்ளிக்கூட சூபர்வைசராக இருந்து வந்தார்.

திண்டிவனத்திலிருந்து 60 மைல் தூரத்திலிருந்த கலவைக்கு, தமது மாட்டு வண்டியில் குடும்பத்தோடு செல்வதென்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சிராப்பள்ளியில் ஒரு கல்வி மாநாடு இருந்ததால், அத்திட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று.

மகன் சன்னியாச ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டது குறித்து, தன் சகோதரியைத் தேற்றும் பொருட்டு என் அம்மா, என்னையும் மற்றக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள். ரயிலில் காஞ்சிபுரம் சென்று, அங்குள்ள சங்கராச்சாரியர் மடத்தில் தங்கினோம். குமார கோஷ்டி தீர்த்தத்தில் என் அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டேன்.

ஆசாரிய பரம குரு சித்தியடைந்த பத்தாம் நாளன்று மகா பூஜை நடத்துவதற்காகச் சாமான்கள் வாங்க வேண்டி, கலவையிலிருந்து சிலர் மடத்து வண்டியில் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், பரம்பரையாக வந்த மடத்து மேஸ்திரி, என்னை கூட வருமாறு அழைத்தார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனியே பின்னால் வர ஒரு வண்டி அமர்த்தப்பட்டது.

பிரயாணத்தின்போது அந்த மேஸ்திரி, நான் திரும்பி வீட்டுக்குப் போக இயலாமல் போகக் கூடுமென்றும், என் எஞ்சிய வாழ்க்கை மடத்திலேயே கழிய வேண்டியிருக்கலாம் என்று, ஜாடையாகக் குறிப்பிட்டார். என் ஒன்றுவிட்ட சகோதரர் மடாதிபதியாகிவிட்டதால், நான் அவருடன் வசிக்க வேண்டுமென, அவர் விரும்புகிறார் போலிருக்கிறது என்று முதலில் எண்ணினேன். அப்போது எனக்கு வயது பதின் மூன்றுதான். எனவே, மடத்தில் அவருக்கு என்ன விதத்தில் உதவியாக இருக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால், வண்டி ஓட ஓட மேஸ்திரி பக்குவமாக விஷயத்தை விளக்கினார். பூர்வாசிரமத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரராக இருந்த ஆசாரிய சுவாமிகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு ஜன்னி கண்டுவிட்டதாம். அதனால்தான் என்னைச் சீக்கிரமாய்க் கலவைக்கு அழைத்துச் செல்வதற்காக, குடும்பத்திலிருந்து என்னைப் பிரித்துத் தனியே கூட்டிச் செல்கிறார்களாம்.

என்னை அழைத்து வருவதற்காகத் திண்டிவனத்துக்கே அவர் போக விருந்ததாயும், அதற்குள் காஞ்சிபுரத்திலேயே என்னைச் சந்தித்துவிட்டதாயும் சொன்னார்.
இந்த எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்திருந்த பிரார்த்தனை.

என் அம்மாவும் மற்றக் குழந்தைகளும் கொஞ்ச நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். பாவம் என் அம்மா. சகோதரியைத் தேற்றுவற்காகப் புறப்பட்டு வந்தவள், தன்னையே பிறர் தேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தாள்.

நானாகத் துறவு பூண்டு சன்னியாச ஆடை அணியவில்லை. கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிட்டியதில்லை.; சன்னியாசம் ஏற்ற முதல்நாளே ஒரு மாபெரும் சமஸ்தானத்தின் வசதிகளும் பொறுப்புகளும் என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டன.

நான் சன்னியாச ஆசிரமம் ஏற்றபோது, தும்முலூர் ராமகிருஷ்ணய்யாவும் அடைப்பாளையம் பசுபதி ஐயரும் கலவையில் இருந்தார்கள். இருவரும் தென்னாற்காடு ஜில்லா கோர்ட்டில் பணியாற்றி வந்தார்கள். என் குருவின் குருவுக்கு அத்தியந்த சீடர்களாக விளங்கியவர்கள் அவர்கள். என் இளமை வாழ்வை உருவாக்குவதில் உதவுவதென்று இருவரும் உறுதியாயிருந்தார்கள் என்று பிற்பாடு தெளிவாய்த் தெரிந்தது.

பசுபதி அடிக்கடி என்னைத் தனியே சந்திப்பார்.

இடைக்காலத்தில் என்னிடம் என்னென்ன பலவீனத்தைக் கவனித்திருந்தாரோ, அதையெல்லாம் சுட்டிக் காட்டுவார். அவைகளை வெல்லுவதற்குத் தாம் கூறும் யோசனைகளைக் கேட்கும்படி மன்றாடுவார். சில சமயம், அவர் என்னிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அப்போது, சன்னியாச ஆசிரமத்திலிருக்கும் என்னிடம், தாம் செய்யும் அபராதங்களுக்காக, பிற்பாடு பிராயச்சித்தம் செய்து விடுவதாகக் கூறுவார்.வாழ்க்கை எனக்குக் கற்பித்திருப்பது இதைத்தான். ‘மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!’

நன்றி: பவன்ஸ் ஜர்னல் & பால ஹனுமான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub