இது உனக்கான கவிதை
உன் மனைவியிடம் சொல்லக்கூடாதென்று
நான்
உனக்காக எழுதும் கவிதை
இது அவளுக்கான கவிதை அவளைப் பற்றிய ரகசியங்களை உன்னிடம் சொல்ல வேண்டாமென
கேட்டுக் கொள்ளும் கவிதை
சரி
வாசிக்க நீ
தயாரென்றால்
அவள் இந்நேரம் உனக்கும் தாயாகி இருப்பதையும்
நீ புரிந்து கொள்ள வேண்டும் பரவாயில்லையா…தொடங்கு.
உன் வருகைக்கு முன்பொரு நாள் அவள் கனவுகள் பல கண்டிருந்தால் அத்தனைகளிலும்
நீ தான் வந்தாய் உருவம்தான் வெவ்வேறு
உன் வருகைக்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே அவள்
அத்தனை கனவுகளுக்கும் அடிமைப்பட்டிருந்தால் அவ்வளவிலும்
நீதான் அடிமைப்படுத்தினாய்
உன் வருகைக்கு முன்பிருந்தே
அவள் உன்னை காதலிக்கத் தொடங்கி விட்டாள்
வருவது யாராக இருந்தாலும்
காதலிப்பதென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே
அவள் இரவுகளில் அதிக நேரம் விழித்திருந்தாள்
உன்னோடு பேச நிறையவே ஒத்திகை பார்ப்பதும் முக்கியமென்று..
உன் வருகைக்கு முன்பிருந்தே
அவள் கடவுள்களை
நம்பத் தொடங்கி விட்டால்
உன் மீதான பக்தியோடிருக்க வேண்டுமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே அவள் தன்னை பெண்ணாக
உருவப் படுத்திக் கொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருந்தாள்
உனக்கு பெண்மை பிடிக்குமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே
அவள் மறைப்பாகவே குளிக்க
பழகிக் கொண்டிருந்தாள்
நீ மட்டுமே பார்க்க வேண்டுமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே அதிகாலையில் எழுவதை குறைத்திருந்தால்
அவளுக்குத் தெரியும்
அவளது இரவுகள் எவ்வளவு இனிமையானதென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே வயிற்றைக் குறைப்பதில்
அவ்வளவு கவனமாகவே இருந்தால் அவளுக்குத் தெரியும்
தன் வயிற்றின் அழகு
உனக்கு எவ்வளவு பிடிக்குமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே அவள் அழுவதை நிறுத்தியிருந்தால் அவளுக்குத் தெரியும்
உனக்கென அழுவது
அவளுக்கு அவ்வளவு பிடிக்குமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே அவள் சமையல் செய்ய
கற்றுக் கொண்டால்
அவளுக்குத் தெரியும்
கை கால்களில் எண்ணெய் பட்டால் எவ்வளவு வலிக்கும் என்று தெரிந்தும் பொறுத்துக் கொண்டாள்
பொரித்த உணவுகள் உனக்கு அவ்வளவு பிடிக்குமென்று
உன் வருகைக்கு முன்பிருந்தே
அவள் கனவு மட்டுமே தான்
கண்டிருந்தாள்
உன் வருகைக்குப் பிறகும்
கனவோடு தான் இருக்கிறாள்..
நீ என்றாவது
உன் கனவு என்னவென்று
நீயாகவே கேட்பாய் என்று காத்திருக்கிறாள்
இன்றாவது
அவளிடம் கேள்
நாளைக்கென தள்ளிப்போடாதே.
( பட்டியல் நீளலாம்
நான் சொன்னது கொஞ்சம் தான்)
.. இயலிசம்…