காமத்தைக் கடந்த
கண்களின் உறவு
காதலைத் தாண்டியும்
பெண்களின் உணர்வு
அற்புதம்.. மிக அழகு. அவள்.
பெண் ஒரு திறக்கப்படாத
புதுப்புத்தகம்
முதல் அட்டை மட்டும் காண
முகம் மட்டுமே தெரியும்..
முழுவரியும் நேசிக்க
முழுமையாக உனக்குப் புரியும்..
புரிதல்கள் அன்பாய் பூக்கும்
புது உலகம் புதிதாய் புலரும்
உன் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும்,பத்தியும்
ஒவ்வொரு மணியும்,வார்த்தையும்
உன்னோடு வளரும்
அவள் பாசம் மண்ணோடும் மலரும்.
காதலிக்கும் கண்களுக்கு
ரோஜா முட்கள் தெரியாது
முள் தாங்கும் பிரிவின் வலி
காதலர் கை விரல்கள் அறியாது
காற்றோடு தலையாட்டி
தலைகோதி விரல் நீட்டி
விண்ணோடும் மண்ணோடும்
முட்களின் காதல்
முடிவு வரும் வரை தொடருமென்பது
பூக்களுக்கு புரியாது.
பூவுலக ஆண் வாழ்க்கைக்கு முட்களாய்
பெண் பூக்கள்..
முள்ளாய் மூடிய அவள்
நெஞ்சோர வேதனைகள்
நிழல்களுக்கு கசக்காது -அவள்
நினைவோடு வந்த கனவுகள்
கண்ணீரிலும் கரிக்காது..
பூக்களை சுமக்கும்
அவள் மனதுக்குள் ஆயிரம் ஆசைகள்
ஆயினும் என்ன அரை சாண்
மஞ்சள் கயிற்றுக்குள் நெறிக்கப்படும்
அவள் கனவுகள்.
கத்திக் கதறும் அவள்
கனவுகள் கண்ணீரோடு
இன்னொரு மனதோடு பயணப்படும்
மணல் மேடுகளும்
புல் தரைகளும்
மாமரத்தோப்புகளும் சிலநேரங்களில்
கிடைக்கும்..ஆனாலும் பலநேரம்
சிலந்திக் கூடுகளாய் கல்யாணம்
அவள்
சிரங்களை சிறை பிடிக்கும்.
உடைத்தெறிந்து வெளியே வர
வலுவிருக்கும் அவள் கைகளுக்கு
வலிமை மட்டும்
கை விரல் கட்டுக்குள்
அத்தனைக்கும் காரணம்
பாசம் என்பாள்..
கடல் கடந்த மணற்கரைக்கும்
அவள்
கருணையாவாள்
கனவுகளைத் தொலைத்தே
பெண் கடவுளாய் வாழ்வாள்
அவளை நாம் காதலை மறந்து நேசிப்போம்
நேற்றைய அவள் கனவுகளை
நனவாக்க முயற்சிப்போம்.
நாளைய கனவுகளுக்கு
வழி விட யோசிப்போம்.
.. இயலிசம்..