உன் மௌனம்
உடைக்கப்படாத...
ஒவ்வொரு பொழுதுகளிலும்
செவியின்............
ஈர்ப்பு விசை கூடிப்போகிறது
வேலையற்ற வேளையொன்றில்
வேவு பார்க்கும் கண்கள்
உன் உதட்டசைவை கூர் நோக்க
மவுனத்தை மொழிபெயர்க்கும் வித்தைக்கு விரைகிறது மூளை
சாமி என்றாயோ...........
சண்டாளன் என்றாயோ.........
சா னா வில் தொடங்குகிறாய்
சாத்தியம் என்றுரைக்கிறது
என்னில்.
போகட்டும் விடு
ஆவதை பார்ப்போம் என
ஆவல்தொற்றிய மனம்
அடிக்கடி சொல்கிறது
நீ எதிர்ப்படும்
ஏதோவொரு தினம்
ஏதோவொரு நொடி
என்னை கடக்கையில்
என் மவுனத்தையும் உடைக்கிறது
உன் கூந்தல் மல்லிகை
அடடா........! என்கிறேன்
நீயோ.........
நடடா.........! என்கிறாய்
அப்போதும்கூட...........
உன் விழி பாஷை தானே தவிர
ஒலி ஓசை இல்லை
உதடுகள் அசையாவிடினும்
உன் கொலுசின்
ஒற்றை சிணுங்கல்
உடைத்தெறிந்து கடக்கிறது
ஒரு கோடி மவுனங்களை.
கா. வெங்கடேஸ்வரன்.
(எனது சொல் விழுங்கும் பறவை
நூலிலிருந்து)