Breaking News :

Monday, May 05
.

கனகதாரா பாடச் சொன்ன காஞ்சி மகா பெரியவா.


பொன் மழை பெய்த காஞ்சி ஸ்ரீ மடம் (ஆதி சங்கரர் இல்லை-நம் சங்கரர்)

 

ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள், அன்று பொன் மழை பொழிந்தாள். இன்று பல ஏழைப் பெண்மணிகள், மனதால் ஒன்றுபட்டு அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய சம்பவம்.

 

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா.

புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

காமாட்சி அம்மனுக்கு மேலே, ஒரு காலத்தில் பொன் மயமாக இருந்த விமானம் தங்க ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது. அந்த காலகட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது. அன்பர்களும் பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம் நடந்து கொண்டிருந்தது. பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்க யார் வரப்போகிறார்கள், என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு.

 

சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான், பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்..எனவே, 'விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல்,ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா, மானேஜரைக் கேட்டபோது,  "பண வசதி போதாது"  என்று அவர் தெரிவித்துவிட்டார்.

 

பெரியவா ஆசாரியை வரவழைத்து, எவ்வளவு பவுன் ஆகுமென்று கேட்டார். விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது. பார்த்துவிட்டு ஆசாரி, பல பவுன்கள் வேண்டும் என்றார்.'அதற்கு எங்கே போவது' என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்."பண்ண ஆசையிருக்கு, எப்படி என்றுதான் தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியவா.

 

அந்த சமயம் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார். பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார். அவரிடம் பெரியவா, "எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தைத்  தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கிறது. இவர்களெல்லாம் அது முடியாத காரியம்...பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள்.பெரிய குறையாக இருக்கிறது. ஆனால், உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார் பெரியவா.

 

"சுமாராகத் தெரியும்"என்றார் விஸ்வநாதய்யர்.அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,"எனக்கு தெரியும்" என்று .முன் வந்தனர். எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை முழங்கினார்கள். அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது.

 

அங்கேயிருந்த ஒரு தட்டில், அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர்.

 

"ஆசார்யா ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே!" என்று பெரியவா புளகாங்கிதம் அடைந்தார். அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக்கொடுத்து ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா என்றார். அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது, ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை குறையவுமில்லை  என்று அதிசயப்பட்டார் ஆசாரி.

 

சர்வ வல்லமை படைத்த மகானான பெரியவா ஒன்று நினைத்தால்,அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம் வந்து, கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.

 

ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள், அன்று பொன் மழை பொழிந்தாள். இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு, அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub