Breaking News :

Thursday, November 21
.

அம்பாளின் விழிகள் அங்கும் இங்கும் நகர்ந்து காட்சி அளித்த சம்பவம் - காஞ்சி பெரியவா


"அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட அதை தரிசனம் பண்ணிட்டேளா?"- பெரியவா

அம்பாளின் விழிகள் அங்கும் இங்கும் நகர்ந்து, மீனலோசனியாக காட்சி அளித்த சம்பவம்.

(பெரியவா பண்ணின பூஜையின் மகிமை)

பெரியவா, பூஜை பண்ணும் அழகே தனி. அனுபவித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு மலரையும் நம்மைப் போல், அவசர அவசரமாக எறியாமல், அபிநயம் செய்வது போல், இதயத்திடம் கொண்டுபோய்  லாகவமாகச் சுழற்றி எடுத்து, மெள்ள அர்ச்சிப்பார். கண்களிலிருந்து நீர் பெருகும். ஒவ்வொரு நாமத்தையும் ரசித்து, ருசித்து,உருகி உச்சரிப்பார்.

நவராத்திரியில், கணக்கேயில்லாமல் சஹஸ்ர நாமங்களைப் பொழிவார்.சில சமயம் ஒரு சஹஸ்ரநாமத்துடன் முடித்துக் கொண்டு விடுவதும் உண்டு. யாருமே அவர் என்ன செய்வார் என்பதைச் சொல்லிவிட முடியாது. எந்த ஒன்றுக்காகவும் மக்கள் சலித்துக் கொள்ள முடியாத மகா பெரியவா, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் உணரச் செய்வார்.

ஒரு முறை திருப்பதியில், இப்படித்தான் பூஜை செய்தார். சந்தனம் அரைத்து மேருவின் சிரசிலே, உருண்டையாக உருட்டி வைத்தார், பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணினார். அவர்,

மண்டபத்துக்கு பூ அலங்காரம் செய்தால், பார்த்துக்கொண்டே இருக்கலாம். இன்றும் ஓவியர் 'சில்பி' தத்ரூபமாக வரைந்த சித்திரங்கள் நம் கண்ணையும்,கருத்தையும் கவர்வதற்கு இதுவே காரணம்.
அர்ச்சனை தொடர்ந்தது. அம்பாளின் விழிகள், அங்கும்,இங்கும் நகர ஆரம்பித்தன.மீன் போல் சஞ்சரிக்கும் கண்களையுடைய மீனலோசனியாக காட்சி தந்தாள்.

பூஜையை பார்த்துக் கொண்டிருந்த, மூன்று பேருக்கு இந்த அதிசயம் தெரிந்தது.அடக்க முடியாத ஆவலுடன், அன்று இரவு மூவரும் பெரியவாளை தேடிப் போய் தாங்கள் கண்டது, கனவா அல்லது நனவா என்று கேட்டு நின்றார்கள்.

உடனே பெரியவா, "அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட  அதை தரிசனம் பண்ணிட்டேளா?" என்று கேட்டாராம்.

அன்று, தரிசனம் பண்ணின மூவரில் ஒருவரான, நாராயணன் இன்றும் நம்முடன் இருக்கிறார். இது போன்ற நிகழ்ச்சிகள், எதுவுமே கற்பனையல்ல; மிகைப்பட எழுதப்பட்டவையுமில்லை; சத்தியம் என்பதற்கு இவர்களெல்லாம் சாட்சி!

(கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு-2008)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.