மராட்டிய அன்பர் 'பவாரின்' பசியைப் போக்கிய பெரியவா.
கல்லினுள் இருக்கும் தேரைக்கும்,கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.-பகவானான ஸ்ரீ பெரியவாளுக்கு சொல்லியா தெரிய வேண்டும்,
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-46
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
அன்று அனுஷ நட்சத்திரம்.
ஒவ்வோர் அனுஷ நட்சத்திரத்துக்கும் செங்கல்பட்டு சிரஸ்தார் ராமநாதய்யர் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்துக்கு வருவது வழக்கம்.அன்றும் வந்திருந்தார்.
ஸ்ரீ பெரியவாள் அருகில் இருந்த சிஷ்யரிடம், "எனக்குப் பசிக்கிறது ப்ரெட் வேணும்.கிடைக்குமா?" என்று கேட்டார்கள். சிஷ்யருக்குப் புரியவில்லை.
பிறகு ஸ்ரீ பெரியவாளே சொன்னார்கள்;
"சிரஸ்தார் ராமநாதய்யரைக்கேள்.ப்ரெட் இருக்கா என்று" ராமனாதய்யர் வெளியில் சாப்பிடுவதில்லை. ஆசார சீலர்.கையில் சப்பாத்தி எடுத்து வந்திருந்தார். ஸ்ரீ பெரியவாள் கேட்டதும் தம்மிடம் சப்பாத்தி இருப்பதாகச் சொன்னார்.
ஸ்ரீ பெரியவாள், " அவர் சாப்பிட்டது போக மீதியை சங்கர் பவாரிடம் கொடுக்கச் சொல்" என்றார்கள்.
பவார், மகாராஷ்டிர ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ பெரியவாள் முகாமுடன் கூடவே காவலுக்கு வந்து கொண்டிருக்கிறார். அங்கங்கே 'பன்,ப்ரெட்,,ரொட்டி என்று டீக்கடையில் வாங்கிச் சாப்பிடுவார்
அன்று காலையிலிருந்து வழியில் ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. அவர் சுத்தப் பட்டினி. எனவே சோர்ந்து போய், யாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீ பெரியவாள் சொல்படி சிரஸ்தார் ராமநாதய்யர் தம்மிடம் இருந்த சப்பாத்தி,அதற்குத் தொட்டுக் கொள்ள வைத்திருந்த தக்காளி சட்னி எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விட்டார்.
பவாருக்கு நல்ல பசி.அவர் கொடுத்த அத்தனையையும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தார்.அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.தன் பசி பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அதுதான் இன்று வரைக்கும் பவாருக்குப் புரியவில்லை. சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்.
ஸ்ரீபெரியவாள் யார்?படியளுக்கும் பகவான் இல்லையா? அந்தக் காலத்தில் நம் முன்னோர் சொல்வார்கள்;
கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.
ஒவ்வொரு ஜீவராசிக்கும் வேளை தவறாமல் படி அளப்பவன் அவன். பகவானான ஸ்ரீ பெரியவாளுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?