பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உதவி செய்த பெரியவா.
பெரியவாள் உள்ளத்துக்கு எப்போதுமே வேலி கிடையாது. அருள் வெள்ளம் வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்துகொண்டே இருக்கும்
கடுமையான கோடை காலம். கிராமப்புறங்களில் நீர்நிலைகள் வற்றிப் போய்விட்டன. பல வீடுகளில் கிணற்றிலும் நீர் இல்லை..கிடைத்த தண்ணீரை நீர்ப்பங்கீட்டு முறையில் கிராம மக்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய கிராமத்தில், மக்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க ஓரிரு மணி நேரம் தங்கி தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் , பெரியவாள்.
கிராமத்திலுள்ள எல்லோரும்...நல்லவர்,கெட்டவர்,ஏழை பணக்காரர், தர்மம் செய்பவர்,கஞ்சர் - தரிசனத்துக்கு வந்தார்கள்.
ரொம்ப முதியவர் ஒருவர் வந்தார். மற்றவர்கள் அவருக்கு ஒரு மரியாதை காட்டுவதைப் போல விலகி நின்றார்கள். கிராமத்தில் குறிப்பிடத்தக்க நபர் என்பது புலனாயிற்று.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்றார் முதியவர்.
பெரியவாள் கேட்டார்கள்.
"உன் வயசு என்ன?"
"..எனக்கா..? ரொம்ப ஆயிடிச்சுங்க சாமி. எண்பத்திரண்டு வயசாகுது.."
"சௌக்கியமா இருக்கியா?"
"ஹூம்...சௌக்கியம் ஏதுங்க..? வீட்டிலே சண்டை தகராறு. யாரும் நான் சொல்றதைக் கேட்கிறதில்லே உடம்பும். சரியில்லே என்னமோ காலத்தை ஓட்டிக் கிட்டிருக்கேன்.."
"ரொம்ப மனக்கஷ்டத்திலே இருக்கே.."
"ஆமாங்க.."
"நீ சந்தோஷமா இருக்க, ஒரு வழி சொல்றேன், கேட்பியா?"
"சொல்லுங்க சாமி.." என்றார், ஆவலுடன்.
"உன் தோட்டத்திலே பம்பு செட்டைச் சுற்றி வேலி போட்டு, வேறு யாரும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட எடுக்க முடியாமல் பண்ணியிருக்கே .சோறு சமைக்கவும்,குடிதண்ணீருக்கும் ஜனங்கள் கஷ்டப்படறா. உன் பம்ப் செட் மூலம் தண்ணீர் எடுத்து, உன் தோட்டத்தை மட்டும் செழிப்பா வைத்துக் கொண்டிருக்கே. உன் சொத்து. உன் குடும்பத்தாலே சந்தோஷம் இல்லை என்கிறே. பம்ப் செட் வேலியை உடைச்சுப்போடு. எல்லா ஜனங்களும் தண்ணீர் எடுத்துக்கொள்ளட்டும். எல்லாரும் உன்னை வாழ்த்துவார்கள். உனக்கு சந்தோஷம் வரும்..."
வயோதிகர் கண்க்களிலிருந்து கரகரவென்று தண்ணீர் வழிந்தது.
பெரியவாளுடைய உத்திரவைக் கேட்டு, மக்கள் அசந்து போய் வாயடைத்து நின்றார்கள்.
'இந்த முதியவர் தோட்டத்தில் பம்ப் செட் இருக்கிறது' என்றோ, 'எவரும் தண்ணீர் எடுக்கமுடியாதபடி வேலி போட்டிருக்கிறார்' என்றோ, 'மீறிச் சென்றால் அடிதடிக்குத் தயங்காதவர்' - என்றோ, யாருமே பெரியவாளிடம் சொல்லவில்லை.
தண்ணீர்ப் பிரச்சினை பெரியவா அருளால் தீர வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அவ்வளவுதான்.
பெரியவாள் அங்கிருந்து புறப்படுகிற சமயத்தில் இரண்டு இளைஞர்கள் ஓடி வந்தார்கள்.
"பம்ப் செட் வேலியைப் பிய்த்துப் போட்டுவிட்டார் கிழவனார்!" - இளைஞர்கள்.
பம்ப் செட்டிலிருந்து குபுகுபுவென்று தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
வேலியைப் பிய்த்தெறிந்து தண்ணீரைப் பொது வுடைமையாக்கிய, பெரியவரின் நெஞ்சத்தில் குபுகுபுவென்று மகிழ்ச்சி
பொங்கிக் கொண்டிருந்தது.(கிழவனார்)
பெரியவாள் உள்ளத்துக்கு, எப்போதுமே வேலி கிடையாது. அருள் வெள்ளம் வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டே இருக்கும்.
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.