திருப்புகழ் மணி அய்யரின் மனைவி, காச நோய் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் இருந்த போது, சம்பிரதாயம் மீறி, அம்மையார் படுத்துக் கொண்டிருந்த கட்டில் வரை பல்லக்கிலேயே சென்று தரிசனம் கொடுத்த சம்பவம்.
சில நாட்களுக்குள்ளாவே யம தூதர் வந்தார்கள். 'நான் எப்பவோ ரெடியாயிட்டேனே!' என்று சந்தோஷமாக பதில் சொல்லியிருப்பார், அம்மையார்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்-72
திருப்புகழ் மணி கிருஷ்ணஸ்வாமி அய்யர் என்ற பக்தர் சென்னை, மயிலாப்பூரில் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் பெரியவாளிடம் அபாரமான பக்தி உடையவர்கள்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களைப் பிரபலமாக்கியவர்களில் கிருஷ்ணசாமி அய்யரைக் குறிப்பிட்டு சொல்லலாம்.அவருடைய மனைவிக்குக் காசநோய் வந்து கடுமையாகி விட்டது.ஆந்திர மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி, காச நோய் மருத்துவமனையில் (சானடோரியம்) தங்கி சிகிச்சை பெற்று வந்தாள்.
பெரியவாள் கால்நடையாகக் காசி யாத்திரைக்குப் புறப்பட்டு, மதனப்பள்ளியில் தங்கியிருந்தார்கள்.
இவ்வளவு அருகில் வந்திருக்கிற பெரியவாளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவல் அம்மையாருக்கு. ஆனால், உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. 'தன்னுடைய கடைசி மூச்சு. இந்தப் படுக்கையில்தான்' என்பது அம்மாளுக்குத் தெரிந்தே இருந்தது.
யமன் வருவதற்கு முன், சங்கரரைப் (கால காலனை) பார்த்து விட்டால், எவ்வளவோ ஆறுதலாக இருக்கும். பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாமல் இருக்கிறது. நான் கொடுத்து வைத்தது.. அவ்வளவுதான்!"
திருப்புகழ் மணி அய்யரின் சம்சாரம், மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறாள் என்ற செய்தி, பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக, மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைப் பார்க்கும் சம்பிரதாயம்,ஸ்ரீமடத்தில் இல்லை. ஆனால், இது 'ஸ்பெஷல் கேஸ்!' திருப்புகழைத் தமிழ்நாட்டில் பரப்பிய முருக பக்தரின் சம்சாரம் - சுத்தாத்மா
மருத்துவமனை அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்று, அம்மையார் படுத்துக் கொண்டிருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள்!
இது முன்பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி.
பெரியவாள் தரிசனம் கிடைத்ததில், அம்மையாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "நான் கனவில் கூட இதை நினைத்துப் பார்த்ததில்லை... பெரியவாளே வந்தாளே !" . என்று ஈனஸ்வரத்தில் சொல்லிச் சொல்லி கண்ணீர் மல்கினாள். தரிசனத்துக்கு முந்தைய நிமிஷம் வரை மனம் சோர்ந்திருந்த அம்மையார்,பின்னர் எப்போதும் மனத் தெம்புடன் காணப்பட்டாராம்.
சில நாட்களுக்குள்ளாகவே யம தூதர்கள் வந்தார்கள்.
நான் எப்பவோ ரெடியாயிட்டேனே!' என்று சந்தோஷமாகப் பதில் சொல்லியிருப்பார், அம்மையார்.