பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர் கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா.
ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.
அப்பல்லாம் விவசாயிகள் நெல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா. மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக் கூடாது’ம்பார் பெரியவா!
டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார்.
அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.
அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?
நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிடுத்து. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!
பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம். ஆனாலும், பண விஷயத்துல பெரியவா ரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்ப கூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!
பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!
அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயொரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா.
‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப *ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவ் (இன்று அவர் பிறந்த தினம்)* பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமிதமான மரியாதை!
உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!
என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்னார் பட்டாபி சார்.