Breaking News :

Sunday, May 04
.

இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!


"இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா

(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!")

நன்றி-- குமுதம் லைஃப்-கௌரி சுகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில்,பொறுப்பான பதவியில் இருந்தார். மகாபெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை, ப்ரேமை, அபார பக்தி கொண்டவர் அவர்.

வேலை அஸ்ஸாமில் என்பதால் குடும்பத்தோடு அங்கேயே குடியேறி வசித்தார். காலம் வேகமாக நகர்ந்து அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்தது. அவரது பணித்திறமையை அறிந்த அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய சம்பளத்தோடு அங்கேயே வேலை தருவதாகவும் அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள். ஆனால் அதை ஏற்காமல், அப்படியே  நிராகரித்தார்.

"ஓய்வுக்குப் பிறகும் சம்பாதிப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதை ஏன் மறுக்கிறீர்கள்? என்ன காரணம்? என்று சிலர் கேட்டார்கள்.

"பணம் சம்பாதிச்ச வரை போறும்.இனிமே ஆத்ம திருப்திதான் சம்பாதிக்கணும். அதுக்கு மகா பெரியவா காலடியல என்னோட மிச்ச வாழ்நாளை செலவிடப்போறேன்...!"  தன்னுடைய அசைக்க முடியாத முடிவைச் சொன்னார்.

யாருக்கு வரும்? பணம் சம்பாதித்தது போதுமென்ற மனஸ்?
புறப்பட வேண்டிய நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள் கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக, வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே ஒரு பணியாளும் இருப்பான்.

எல்லாரும் ஊருக்குப் போன ரெண்டு மூணு நாட்களில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் மெட்ராஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ்  செய்திருந்தார்.

முந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை அனுப்பிவிட்டார். இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட்  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நடுராத்திரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை. எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில் ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை! இதயத்துடிப்பே சீரற்றுத் துடித்து கொஞ்சம் கொஞ்சமாக நின்று போய்விடும்போல் தோன்றியது.

திணறினார்,தவித்தார்,உருண்டார்,புரண்டார்...அத்தனை வேதனையிலும் மனசுக்குள் 'ஆபத்பாந்தவா! அனாத ரக்ஷகா!சந்திரசேகரா! காஞ்சி மடத்துக் கருணாகர தெய்வமே! என்று அலறினார்.எப்படியோ தட்டுத் தடுமாறி, எப்போதும் தன்னுடைய தலைமாட்டில் வைத்திருக்கும் மகா பெரியவாளுடைய படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

'பெரியவா எனக்கு என்னவோ பண்றது.நெஞ்சை அடைக்கிறது என்னால மூச்சு விட முடியலை! நீங்கதான் எனக்கு ரக்ஷை! மனசுக்குள் மருகியபடியே பெரியவா படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டபடி, கண்களில் கண்ணீர் வழிய, தாங்க முடியாத வலியோடு தவித்தவர், எப்படியோ அப்படியே தூங்கிப் போனார்!

மறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது. தூங்கி எழுந்தபோது,படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம் அவருக்கு நினைவுக்கே வந்தது.
அன்று ஊருக்குப் போக வேண்டும் என்பதால்,எதற்கும் டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக்கொள்ளலாம் என்று டாக்டரிடம் போனார்.
இ.சி.ஜி. எடுத்து ர்ப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்.

"உங்களுக்கு நேத்திக்கு ராத்திரி ரொம்ப சிவியரா மாசிவ் அட்டாக் வந்திருக்கு! நீங்க என்னடான்னா, ஒண்ணுமே நடக்காத மாதிரி இப்படி ஆஸ்பத்திரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே? ஆச்சரியமா இருக்கு! உண்மையைச் சொல்லணும்னா, நீங்க இந்தக் கடுமையான அட்டாக் வந்த பிறகு பிழைச்சிருக்கீங்கறதே பெரிய விஷயம்! இப்ப இந்த ஸெகண்டே இங்கே அட்மிட் ஆயிடுங்க.ஒரு அடி கூட எடுத்து வைக்கக்கூடாது!"

மிகக் கடுமையான ஹார்ட் அட்டாக்கிலிருந்து அந்த தீனபந்துவைத் தவிர வேறு யார் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்?

பயங்கர வலி வந்ததும்,இவர் நெஞ்சோடு சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்ட மகாபெரியவா, அப்போதே அவரது ஹார்ட்டை சரி செய்ததோடு, வலியால் அவஸ்தைப் பட்ட தன்னை, அணைத்துக்கொண்ட குழந்தையை தூங்கப் பண்ணியும் இருக்கிறார்.

மறுநிமிஷம் உடல் முழுக்க குப்பென்று வியர்த்தது அவருக்கு. தான் பிழைத்தது மறுபிழைப்பு என்று அவருக்குத் தோன்றியது. மகாபெரியவாளை நினைத்துக்கொண்டு,அவர் இருக்கும் திசை நோக்கி கையெடுத்துக் கூப்பி வணங்கினார். கண்ணீரை அடக்க முடியவில்லை அவரால்.தெய்வத்தின், குருவின் துணையிருந்தால் வேறென்ன கவலை?

டாக்டர் அட்மிட் ஆகச் சொன்னதை மறுத்தார். "நான் இன்னிக்கே ஊருக்குப் போயாகணும்! என்ன ஆனாலும் சரி ஆசார்யாளோட காலடியிலயே போய் சரணாகதி அடைஞ்சுடறேன். அவர் என்னைப் பார்த்துப்பார். என்னோட அந்த தெய்வம் என்னைக் காப்பாத்தும்!" அசைக்க முடியாத நம்பிக்கையோடு அன்றே ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பி விட்டார்.

ஹ்ருதயத்தைத்தான் எப்பவோ பரமாசார்யாகிட்டே ஒப்படைச்சாச்சே. அப்புறம் என்னத்துக்கு பயம்? துளிக்கூட வலி இல்லாம வந்து சேர்ந்தார்.
ஊரு வந்ததும்,குடும்பத்தாரிடம் ஏன் மனைவியிடம் கூட, எதுவுமே சொல்லவில்லை. 'முதலில் பெரியவாளை தரிசனம் பண்ண வேண்டும்!புறப்படுங்கோ' அப்படின்னு மட்டும் சொல்லி தரிசனம் பண்றதுக்காக காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆசார்யாளுக்கு முன்பாகச் சென்று அந்த பக்தரின் குடும்பத்தினர் எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும், இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்த பரமாசார்யா, மெல்லிய குரலில் கேட்டார். ."இப்போ ஒடம்பு எப்படியிருக்கு? தேவலையா?

ஆசார்யா அப்படிக் கேட்டதும் அந்த பக்தரின் மனைவியும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.!

"ஏன்? ஒங்க ஒடம்புக்கு என்ன ஆச்சு? பெரியவா ஏன் இப்படிக் கேட்கிறார்?" தவிப்போடு கேட்டார்கள்.

பக்தர் பேசாமல் நிற்க, பெரியவாள் சிரித்துக் கொண்டே "இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா பகவானைக் கூப்டு! போயும், போயும் என்னையா கூப்டுவே? அன்னிக்கு ஒன்னை பகவான்தான் காப்பாத்தியிருக்கார்".-என்று சொன்னார்.
கொஞ்சமும் யோசிக்காமல் அந்த பக்தர் சொன்னார்.

"ஆமாம் பெரியவா! அன்னிக்கு என்னை என்னோட  பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!"

கண்களில் நீர் பெருக்கெடுக்க மகாபெரியவாளை மறுபடியும் நமஸ்கரித்த பக்தர், பெரியவா தந்த பழத்தைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு நகர்ந்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.