(ஹார்லிக்ஸ் கேட்டுப் பெற்ற மர்மம்)
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கூடியிருந்த அடியார்களிடம் அதிசயமாக ஒன்று கேட்டார் ஸ்ரீசரணர்;
"எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக் குடுப்பேளா?"
யாராவதாவது? அத்தனை பேருமே இப்படியொரு பாக்கியமா என்று ஓடிப் போய் ஹார்லிக்ஸ் வாங்கி வந்தார்கள்.
பத்து பாட்டில்கள் சேர்ந்தவுடன், "போறும், போறும்! எவ்வளவு நாளுக்கு எவ்வளவு ஹார்லிக்ஸ் சாப்டறது!" என்று பெரியவாள் கூறி நிறுத்தி விட்டார்.
அந்த பக்தர்களுக்குப் பிரஸாதம் கொடுத்தனுப்பினார்.
ஊனினை உருக்குவதே காரியமாக இருந்த துறவி, கடும் ஆசார சீலர், ஹார்லிக்ஸ் கேட்டுப் பெற்ற மர்மம் என்ன?
கிங்கரர் ஒருவரின் தகப்பனார் மிகவும் நோய்வாய்ப்பட்டு பெரியவாள் அனுக்ரஹத்தால் பிழைத்தெழுந்திருந்தார்.
நோயில் நொய்ந்த அவருடைய உடம்பு தேறத்தான் ஹார்லிக்ஸ் சேகரித்தார் ஸ்ரீசரணர்.
மருந்து, பானவகை முதலானவற்றின் ஃபார்முலாக்கள் கசடறத் தெரிந்து கொண்டிருந்த பெரியவாள் எளிதில் செரிக்கும் உணவு கொண்டே ஊட்டம் பெற வேண்டியவர்களுக்கு ஹார்லிக்ஸ் அனுமதித்து வந்தார்.