Breaking News :

Thursday, May 08
.

"பெரியவா படிப்பிலே 'மக்கு'ன்னு நீ நெனச்சியோ?" - மகா பெரியவா


(என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே 'மக்கு'ன்னு நீ நெனச்சியோ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவா)

(இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன் என்ற உண்மையைச் சொன்னேன்- வருகைப் பதிவேடு பார்த்த பரணீதரன்)

(அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.)

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் 'சுவாமிநாதன்' என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், 'வருகை பதிவேடு' காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சிரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, 'என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே 'மக்கு' ன்னு நீ நெனச்சியோ?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

'இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்' என்ற உண்மையை சொன்னேன்.

'என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு' என்று விளக்கம் தந்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.