மாம்பலத்திலிருந்த ஜெயராமய்யர் மாம்பலம் சங்கரமடத்தைப் பெரியவாளுக்கே அர்ப்பணம் பண்ணிய உத்தமர். அவர் குடும்பத்தாருடன் ஒரு முறை ஆந்திரா சென்றார். அங்கு ஒரு தோட்டத்தில் பெரியவா உட்கார்ந்து தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
ஜெயராமய்யர் பேரன் பெரியவாளிடம் சென்றான். அவன் கையில் ஒரு கல்கண்டைக் கொடுத்தார். வாங்கிக் கொண்ட குழந்தை குதித்துக் கொண்டே தோட்டத்துக்குள் நுழைந்தது. அதன் பின் காணவே இல்லை.
அங்கே ஒரு பெரிய கிணறும் இருந்ததால், குழந்தையின் பெற்றோரும் மற்றவர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி,ஒடித் தேடினார்கள். குழந்தை அந்த கிணற்றில் விழுந்துவிட்டது என்று தெரிந்தது. அதில் படிக்கட்டுகள் இருந்தன.
நல்லவேளையாக ஒரு படிக்கட்டைப் பிடித்துக்கொண்டு குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது.ஒருவர் மளமளவென்று இறங்கிக் குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்.
ஜெயராமய்யர் குடும்பம் உடனே குழந்தையுடன் பெரியவாளிடம் சென்று,அழுதுகொண்டே நடந்ததைச்சொல்லி, பெரியவாதான் இந்தக் குழந்தையைக்காப்பாற்றினார் என்று மீண்டும்,மீண்டும் வணங்கினார்கள்.
உடனே பெரியவா," இந்தக் குழந்தையின் கையில் என்னஇருக்கிறது பாருங்கள்" என்று சொன்னார்.
பார்த்தால் அவர் கொடுத்த கல்கண்டு அப்படியே இருந்தது.
"அம்பாள் பிரசாதம் அது;அவள்தான் காப்பாற்றினாள்!" என்றார். அவர் கொடுக்கும் பிரசாதமே நம்மைக் காக்கவல்லது என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது.
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்