(கெடுதல் என்று அடிக்கடி வலியுறுத்தும் பெரியவா
ஒரு காஃபி அடிமைக்கு வழங்கச் சொன்ன கருணை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-39
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
மயிலாப்பூரிலிருந்து டி.எஸ். ராமஸ்வாமி ஐயர்என்ற பக்தர் பெரியவாளின் தரிசனத்துக்கு வந்தார். அவர் 'பத்மபூஷண்'' என்ற அரசாங்க விருது பெற்ற பெரிய மனிதர்.
அவர் வந்திருப்பது தெரிந்து ஸ்ரீ பெரியவாள், "அவரைக் கூப்பிடு" என்றார்கள்.அவர் வந்ததும் "காலை நன்றாக நீட்டிக்கொண்டு உட்கார்ந்து பேசு" என்றார். அங்கிருந்த மற்றவர்களுக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.
"சின்ன வயதில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. அதனால் அவரால் அதிக நேரம் காலை மடக்கிக் கொண்டு உட்கார முடியாது" என்று அதற்குவிளக்கம் அளித்தார்கள் ஸ்ரீ பெரியவாள்.
இதெல்லாம் ஸ்ரீ பெரியவாளுக்கு எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை.
பிறகு பெரியவா சொன்னார்கள் ஒரு தொண்டரிடம்.
"ராமஸ்வாமி ஐயரை அழைச்சுப் போய் சின்ன காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடம் பக்தர் வீட்டில் நல்ல காஃபி வாங்கிக் கொடு" என்றும் உத்தரவிட்டார்கள். "அவரால் காஃபி சாப்பிடாமல் இருக்க முடியாது" என்றும் தெரிவித்தார்கள்.
உடனே நமக்கு என்ன தோன்றும்?
"பெரியவாளே காஃபி வாங்கிக் கொடுக்கச் சொல்கிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கும்.
காஃபி சாப்பிடுவர்கள் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். அது இல்லா விட்டால் அவர்களுக்கு ஒரு வேலையும் ஓடாது.
அது எவ்வளவு கெடுதல் என்பதையும் பல நேரங்களில் நமக்குச் சுட்டி காட்டுகிறார்கள். அதே சமயம் பெரியவாளின். கருணையும் இச்சம்பவத்தால் வெளிப்படுகிறது.