கிருஷ்ண பரமாத்மா பண்ணிய லீலையைப் போல். பெரியவா செய்த லீலை.
பாத்திரங்கள் அட்சய பாத்திரமான விந்தை.
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா.
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவா சதாராவில் இருந்தபோது, பம்பாயிலிருந்து பாலசுப்ரமணியம் என்பவர், ஒரு சிறு கூட்டத்தாருடன் அவரை தரிசிக்க வந்தார்.
அங்கே பெரியவாளுடன் தங்குவதற்கு வசதி இருக்குமோ, இருக்காதோ என்று நினைத்து, கூடவே சமையல் செய்ய, ஆட்களையும் கூட்டிக் கொண்டு வந்தார். வேறோர் இடத்தில் தங்கிக் கொண்டு அவ்வப்போது வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தார்.
அச்சமயம், ஆந்திராவிலிருந்து இரண்டு பஸ் நிறைய பக்தர்கள் வந்து இறங்கினர். கேம்பில் சாப்பாட்டு கடையைக் கட்டியாகிவிட்டது. வந்தவர்கள் யாரும் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. பெரியவா, யாரும் பசித்திருக்கப் பொறுக்க மாட்டார்.
பம்பாயிலிருந்து வந்த பாலசுப்ரமணியம் இருந்த இடத்துக்கு, எல்லோரையும் சாப்பிட்டு வரும்படி அனுப்பி விட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பம்பாய்க்காரர், 'சமையலுக்கான சாமான்கள் போதாதே!' என்று கவலைப்பட்டார்.
பெரியவாளுடன் மானசீகமாகவே பேசினார். 'எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நீங்கள்தான் வழி காட்டணும்!' என்று பிரார்த்தித்தார்.
சமைத்ததில் கொஞ்சம் மீதமிருந்தது. துணிவை வரவழைத்துக் கொண்டு, வந்த எல்லோருக்கும் இலை போட்டு, இருந்ததை நிரவி வைத்தார்.
என்ன ஆச்சரியம்! வந்தவர்கள் அனைவரும் வயிறு நிறைந்து, வாழ்த்திவிட்டுப் போனார்கள். அன்று திரௌபதியின் பாத்திரத்தில் ஒட்டியிருந்த, ஒரு பருக்கையை வாயில் போட்டுக்கொண்டு, கிருஷ்ண பரமாத்மா, துர்வாசரின் பரிவாரம் முழுவதையும் வயிறு நிறைந்து போகும்படிச் செய்யவில்லையா?
வேறொரு விதமாகச் சொல்வதானால், பாலசுப்ரமண்ய ஐயரின் பாத்திரங்களெல்லாம், அன்று அட்சய பாத்திரங்கள் ஆகிவிட்டன.