Breaking News :

Tuesday, April 15
.

எறும்புகள் செய்த புண்ணியம் - காஞ்சி மகா பெரியவா


'உடல் வேறு; ஆன்மா வேறு' என்பது,உபநிஷத் வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்தமட்டில், உபயோகமான வாக்கியம்!
எறும்புகள் அமுதத்தைப் பருகிய களிப்பில் மயங்கிக்கிடந்தன. போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் செய்திருந்தனவோ!

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளின் வலதுகாலில் மேற்புறத்தில் எப்படியோ ஒரு ரத்தக் கசிவு, ஒரு சொட்டு ரத்தம் மாதுளை முத்துப் போல் தெரிந்தது.

சாவகாசமாக உட்கார்ந்து பெரியவாள், ஸ்ரீமடத்துச் சீடரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஓர் எறும்பு வந்து, அந்தக் காயத்தின் மீது ஊர்ந்தது. அந்த எறும்பைப் பின்தொடர்ந்து,  அதன் உற்றார்-உறவினர்கள் கூடிவிட்டார்கள்.
'எறும்புகளைத் தட்டி விடுங்கள்' என்று பெரியவாளிடம் யார் சொல்ல முடியும்?

வெளியே, பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான, செல்வாக்குடைய பக்தர் நின்று கொண்டிருந்தார். அவரை ரகசியமாய் உள்ளே அழைத்து வந்தார்கள்.
"பெரியவா, கால்லே எறும்பு மொய்க்கிறதே" என்று பணிவுடன் கூறினார், அவர்.

ஒரு விநாடி நேரம், அருள் நிறைந்த பார்வை.
"விபீஷணன், ராமச்சந்திரமூர்த்தியை சரணாகதி பண்ணினான் என்று படிக்கிறோம். வாயாலே 'சரணாகதி'ன்னு சொன்னான். ராமன் பாதங்களை இறுகக் கட்டிக்கொள்ளல்லே. அப்படியிருந்தும், ராமன் ரொம்ப இரக்கப்பட்டு விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்தான்.

இந்த ராமாயணம் இப்போது இங்கே எதற்கு?.....
"இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியா பிடிச்சிண்டிருக்கு. அதுகள் என்ன சொல்றதுன்னு கேட்காமல், உதறி விட்டால், அது நியாயமா?"
இந்த சொற்களைக் கேட்டு ரசிப்பதா? இல்லை, பெரியவாளுக்காக இரக்கப்படுவதா?--என்று புரியவில்லை, சீடர்களுக்கு.

'உடல் வேறு; ஆன்மா வேறு' எனபது உபநிஷத் வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்த மட்டில், உபயோகமான வாக்கியம்!

எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில் மயங்கிக்கிடந்தன.

போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் செய்திருந்தனவோ!.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.