Breaking News :

Tuesday, April 15
.

"அவர் ஈஸ்வர அவதாரம், அவரை விட்டுப் போகாதே" - காஞ்சி மகான் மகா பெரியவா


சபரிமலை மேல் சாந்தி அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு,

தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு.

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்ஒரு பகுதி.

ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர்.

ஒரு சமயம்,மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப்படுவதைக் கண்ணுற்ற பாலு.அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார்.

எனவே சபரிமலை சென்றுவர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார்.

கேலியான புன்னகையுடன், "என்னடா உன் அப்பா,தாத்தா யாராவது சபரிமலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.

"அவா யாரும் போனதில்லே பெரியவா.பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை வேண்டிண்டேன்.அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு.

பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது - பிறகு சொன்னார்.

"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம் - நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக் கட்டிக்கோ. வெறும் கையோட போகாதே. தேங்காயும், நெய்யும் கொண்டுபோ" என்று அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு ஐயப்ப பக்தர் மாலை போட்டுக் கொள்ளும்போதும்,இருமுடி கட்டிக் கொள்ளும்போதும் நடக்கும் சம்பிரதாயங்களை ஸ்ரீமகாபெரியவாளே அனுக்கிரகித்தார்.

பாலு சபரிமலையை அடைந்து ஐயப்ப தரிசனத்திற்குச் சென்றபோது சன்னதியில் இருந்த மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் இவரை எந்த ஊர் என்று விசாரித்தார். இவர் தான் காஞ்சி மடத்தில் இருந்து வருவதாகச் சொன்னவுடன், "அங்கே பெரிய திருமேனி எப்படி இருக்கார்?" என்று மகாபெரியவாளைப் பற்றி விசாரித்தார்.

இவர் பெரியவாளுக்காக வேண்டிக்கொள்ளவே வந்ததாகச் சொன்னார். உடனே மேல் சாந்தி சொன்னார்.

"அந்தப் பெரிய திருமேனியாலேதான் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமே நாடே சுபீட்சமா இருக்கு.என்னோட 24 நமஸ்காரங்களைச் சொல்லு. நீ அந்தத் திருமேனியை விடாதே. அந்த சன்னிதானத்திலேயே இரு.அவர் ஈஸ்வரன் அவதாரம். அவரை விட்டுப் காதே. போகமாட்டேன்னு சத்யம் செய்துகொடு. அப்பத்தான் பிரசாதம் கொடுத்து அனுப்புவேன்."

மகாபெரியவாளின் உடல் உபாதைக்காக மனசு விசாரத்தோடு சன்னதிக்கு வந்த ஸ்ரீமடம் பாலு, அந்த ஐயப்பன் சன்னதியில் இருந்தே,"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"என்னும் தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் அவருக்கு உணர்ச்சிப் பெருக்கினால் கண்களிலிருந்து நீர் பெருகியது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.