Breaking News :

Tuesday, April 15
.

உன் தலைமுடி கூட உன் கட்டுப்பாட்டில் இல்லை - காஞ்சி மகான் பெரியவா


(எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,  அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள்.)
(வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சிப் பெரியவர்)

வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், "என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே' என்று கதறுவார்கள். சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர் சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.  அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே! உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க  முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது... உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.... இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!

நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ! உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள். நாராயணா... நாராயணா...!

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சிப் பெரியவர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.