Breaking News :

Monday, May 05
.

புதைஞ்சு கிடைந்த சிவாலயத்தை கண்டுபிடித்த மகா பெரியவா!


(காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல  ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில்  ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு)

ஒரு சமயம் மடத்துல இருக்கறவாளோட பேசிண்டு இருக்கறச்சே, "இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்ததாமே. உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா? எங்கே இருந்தது, இப்போ எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா? அப்படின்னு கேட்டார் பெரியவா.

எல்லாருமே தெரியாதுன்னு சொன்னதும் பரமாசார்யா ஒரு தீர்மானத்துக்கு வந்தார். மறுநாள் காலம்பறவே புறப்பட்டு குறிப்புகள்ல இருக்கிற அந்த இடத்தைத் தேடிண்டுபோய் பார்க்க முடிவு பண்ணினார்.

அடுத்த நாள் பெரியவாளோடு சுமார் முப்பதுபேர் கிளம்பினா மடத்துக் குறிப்புகள்ல இருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு கோயிலை எதிர்பார்த்துப்போய் நின்னவாளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

ஏன்னா, ஆண்டவன் குடியிருக்கற கோயில் இருக்கும்னு நினைச்சுப் போன இடத்துல ஆட்கள் குடி இருக்கிற வீடுதான் இருந்தது!  பெரியவா அங்கே வந்திருக்காங்கற விஷயம் தெரிஞ்சதும் தெருவே அங்கே கூடிடுத்து.

"அந்த வீட்டுக்கு சொந்தக்காரா யாருன்னு விசாரிங்கோ?" தனக்குப் பக்கத்துல நின்னவா கிட்டே சொன்னார் பெரியவா.

கொஞ்சநாழி கழிச்சு,ஒரு நடுத்தர வயதுக்காரர் பவ்யமாக பெரியவாள் முன் நின்றார்.என்ன விஷயம்னு கேட்டார்.

"இந்த வீட்டை மடத்துக்குத் தரியா?" நெத்தியில அடிச்சாப்புல ரத்ன சுருக்கமா கேட்டார் ஆசார்யா.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த அந்த நபர், "பெரியவா மன்னிச்சுக்கணும். இது எனக்கு ப்ராசீனமா வந்த வீடு..எனக்குன்னு இருக்கிறது இந்த சொத்து மட்டும்தான்.. அதானால...!" தயங்கித் தயங்கி இழுத்தார்.

அங்குள்ள ஜனங்களுக்கு ஒரே வியப்பு! "பெரியவா கேட்டு ஒருத்தர் இல்லைன்னு சொல்றதா என்ன மனுஷன் இவர்?

ஆனா,பெரியவா கொஞ்சம்கூட முகம் மாறலை.

"சரி...அதனால ஒண்ணும் இல்லை.உனக்கு எப்பதாவது தோணித்துன்னா,அப்போ குடுத்தா போதும்!" அப்படின்னு சொல்லிட்டு மளமளன்னு நடந்து மடத்துக்கு வந்துட்டார்.
இந்த சம்பவம் நடந்து கொஞ்சநாளைக்கு அப்புறம், அந்த வீட்டோட சொந்தக்காரர் பெரியவாளை தரிசனம் பண்ண மடத்துக்கு வந்தார்."

பெரியவா, என்னோட  பிள்ளைக்கு ஒடம்புக்கு முடியலை. வைத்தியத்துக்கு நிறைய செலவாகும்கறா.அதனால வீட்டை வித்துடலாம்னு தோணித்து. ஆனாலும் நீங்க கேட்டதால உங்களுக்கே தந்துட்டு, ஊரோட போய் இருந்துடலாம் அங்கேயே ஏதாவது வைத்தியம் பார்த்துக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன் அதான்...!" தயக்கமாகச் சொன்னார்.
"ஒம் புள்ளையாண்டானுக்கு ஒண்ணும் ஆகாது.அவன் தீர்ர்க்காயுசா,ஆரோக்யமா இருப்பான். அவனுக்கு வைத்தியத்துக்கு நானே டாக்டர்கிட்டே சொல்றேன். அதோட உன்னோட கிருஹத்துக்கு  பர்த்தியா (நீ தரும் வீட்டுக்கு பதிலா) உனக்கு ஒரு வீட்டைக் கட்டித்தரச் சொல்றேன்.

சொன்ன ஆசார்யா, ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கப்புறம் பத்துப் பதினைஞ்சு நாள்ல அந்த வீடு மடத்துக்கு  வந்தது.அந்த நபரோட புள்ளைக்கும் மருத்துவ சிகிச்சைல பூரண குணமாயிடுத்து.மடத்து சார்பாவே ஒரு கிரஹத்தைக் கட்டி அதை அந்த நபருக்குக் கிடைக்கப் பண்ணினார் பெரியவா.

அதுக்கப்புறம் ஒரு நாள். பிரபலமான ஸ்தபதி ஒருத்தரை வரச்சொன்ன பெரியவா தான் கேட்டு வாங்கின வீட்டோட குறிப்பிட்ட திசையில ஒரு இடத்தை முதல்ல தோண்டச் சொன்னார் சொன்ன திசையில் இருந்த அறை ஒரு கழிப்பறை.  பெரியவா உத்தரவை மீற முடியாமல் .அதை இடிச்சுட்டு ஆறு ஏழு அடி தோண்டினதுக்கப்புறம் லேசா லிங்கம் மாதிரி ஏதோ தெரிஞ்சுது.அதை வெளீல எடுக்க முயற்சி செஞ்சார்.

ஊஹூம்! எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. ஏகாம்பரேஸ்வரர் கோயிலோட யானையைக் கூட்டிண்டு வந்து இழுக்க வைச்சுப் பார்த்தா. பிரயோஜனமே இல்லை. லிங்கம் அசையைக்கூட இல்லை.

விஷயம் தெரிந்த பெரியவா,அந்த இடத்துக்குப்போய் கொஞ்சம் கங்காஜலத்தால் லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி வில்வபத்ரத்தைப்  போட்டுட்டு கற்பூர ஆரத்தி காட்டினார்.

"இப்போ எடுங்கோ வரும்" என்று பெரியவா சொன்னதும் அடுத்த முயற்சியில் தாய்ப் பசுவைப் பார்க்க தாவிண்டு வர்ற கன்னுக்குட்டி மாதிரி சட்டுன்னு வெளீல வந்தது சிவலிங்கம். அமைதியா ஒரு  புன்னகையைத் தவழவிட்ட  ஆசார்யா,
"இதோட போதும்னு நிறுத்திட வேண்டாம்.இன்னும் கொஞ்சம் தோண்டுங்கோ!" அப்படின்னார்.

அப்படித் தோண்டும்போது 'டங்குனு' ஒரு சத்தம். அங்கே அனந்த சயனத்துல இருக்கிற ரங்கநாதரோட திருமேனி இருக்கிறது தெரிஞ்சது. அவ்வளவுதான் ஸ்தபதிக்கு கண்ணுல இருந்து ஜலமா பெருகி வழிந்தது.

"பெரியவா இந்த இடத்தைப் போய் தோண்டச் சொல்றேளே இப்படிப்பட்ட இடத்துக்கெல்லாம் வரவேண்டி இருக்கேன்னு மனசுக்குள் நினைச்சேன். ஆனா சாட்சாத் பரமேஸ்வரனும், பெருமாளுமே எல்லாத்தையும் சகிச்சுண்டு இத்தனை காலம் இங்கே புதைஞ்சு கிடந்திருக்கான்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்னு இப்போ புரியறது"தழுதழுத்தார் ஸ்தபதி.

அப்புறம் சின்னதா ஒரு கோயிலமைச்சு அந்த சிவலிங்கத் திருமேனியையும்,ரங்கநாதரையும் அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னார். ஹரியும்,ஹரனும் சேர்ந்து கிடைச்சதால ரெண்டுபேரோட திருநாமத்தையும் இணைச்சு ஸ்ரீ அனந்தபத்மநாபேஸ்வரர்'னு  திருப்பெயர் சூட்டினார் மகாபெரியவா.

காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல  ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு.

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-14-01--2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub