"விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது"
'வேத மந்திரம்..." பற்றி-பெரியவா உபதேசம்.
காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம் பத்து மணிக்கு சாப்பாடு.
மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப்- புடைவையுமாக, நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!
மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள்?
பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள் பாருங்கோ...."இந்தப் பையனுக்கு என்ன பக்தி... கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே தரிசனத்துக்கு வந்து விட்டானே!
காசி யாத்திரையை நிறுத்திவிட்டு காஞ்சி யாத்திரை வந்திருக்கான்" என்று பாராட்டப் போகிறார்கள்.
அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.
பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்-இவரைத் தவிர.
மனம் தவிக்க ஆரம்பித்தது.
மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட் இருந்தது.
ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால் அழைத்தார்கள் பெரியவாள்.
"இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு போய் தம்பதிகளா உட்கார வச்சு,விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ..."
இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு வந்தார்கள்.பெரியவாள் பிரசாதம் கொடுத்துக் கொண்டே கூறினார்கள்.
"விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்..." பிரசாதம் பெற்றுக் கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.
நேரே வரவேற்பு மேடையில் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். உடை மாற்றிக்கொள்ளக்கூட நேரமில்லை.
பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர்,மற்ற்ப் பணியாளர்கள் புடைசூழ வந்தார். கை குலுக்கினார்.ஓர் உரையாடலைக் கொடுத்தார்.
"சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா" என்றார் ஒரு மூத்த எழுத்தர்.'மொத்த மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்' என்று அலட்சியமாகப் பிரித்தான்.
கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.