அங்கென்ன இருக்கிறது
திரண்ட சதையும்
ஒரு கரும்புள்ளியும்
அதைச்சுற்றி
என்ன எழுதப் போகிறீர்கள்…
பிறகென்ன பிளவுபட்ட இடத்தில்
நாற்றமும் கொஞ்சம் பிசுபிசுப்பும்
அதிலென்ன புனையப் போகிறீர்கள்…
மேற்சொன்ன ஒரு குழியும்
கொஞ்சம் அடர்ந்த சதைப்பகுதிகளும் அதைப்பற்றி
கவிதைகளா கதைக்கப் போகிறீர்கள்..
அவளென்ன பிண்டமா
இல்லை பண்டமா
காதலின்றி
அவளை என்ன செய்யப் போகிறீர்கள்..
தலையில் மயிலிறகு
வைத்துக் கொள்கிறீர்கள்
நீலநிறம் அப்பிக் கொள்கிறீர்கள்
புல்லாங்குழலின் இசையில்
மிதக்கத் தொடங்குகிறீர்கள்
பாமா ருக்மணியோடு
இன்னும் சில கோபியர்களையும்
உடன் சேர்த்துக் கொள்கிறீர்கள்
என் பெயர் கண்ணன் என்றதுமே
இராதைகளின் வீடுகளின் முன்
தர்ணா போராட்டத்தில் இறங்குகிறீர்கள்.
நான் எழுதுகிறேன்
நீங்களென்ன வானத்தில் இருந்தா குதித்தீர்கள்...
காதலும் காமமும் இல்லாமல்
எப்படிப் பிறந்தீர்கள்.
நான் கேள்வி எழுப்புகிறேன்
காதலையும் காமத்தையும் எப்படி பிரிக்கப் போகிறீர்கள்
காதலிக்கிறவர்கள் எல்லாம்
ஒழுக்கங்கெட்டவர்களென
எதைக் கொண்டு தீர்மானிக்கிறீர்கள்..
காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்...
நான் எழுதுகிறேன்
இது கவிதையே இல்லை என்று
கதறுகிறீர்கள்...
.. இயலிசம்…