பிரசவ வலியில் கண்கள்
அவன் உள்ளே நுழைய முயற்சிக்கிறான்..
பிரசவமாய் அவன் பார்வை
அவன் என்னையே பிரசவிக்கிறான்.
கருக்கொள்கிறது காதல்
நான் காணும் போது அவன்
சட்டைப் பொத்தானை பூட்டுகிறான்
வெட்கம் அள்ளி வீசுகிறான்
கருணை கேட்கிறது காதல்
அவன் சுவாசிக்கிறான்
நான் காற்றுப்பட புண்ணாகிறேன்
உயிர் எரிகிறது
கற்பைக் கேட்கிறது காதல்
நான் கனவு கண்டேன்
அவன் கடத்திச்சென்றான்
கனவு கலைந்து போனது
அவனைக் கேட்கிறது காதல்
நான் அவிழ்கின்றேன்
அவன் இதழ் மொழிகின்றான்
என் பெயர் மொழியாகிறது.
நேற்றுவரை படுக்கையில்
சவமாய் கிடந்த என் மனசு
இன்று மருத்துவத்தை தேடுவது என்ன தினுசோ
வேண்டும் வேண்டுமென்றே கெண்டைக்காலுக்கு மேலே
செல்லச் செல்ல
சேலை மறியலில் ஈடுபடுவது
எந்த வகை அனிச்சைச் செயலோ
போரிட்டு தோற்பேனென்கிற
உறுதியோடு
பூக்களின் காதுகளுக்குள் கிசுகிசுத்து
தோல்வியை ஒப்புக்கொண்டவள்
இப்போது
மல்யுத்தத்திற்கு தயாராவதேனோ
மடித்துப் பூட்டிய நான்கு அறைகளும்
இப்போது வாடகைக்கு தயார் என பதாகைகளை ஏந்துவதேனோ..
வெடித்துச் சிவந்திருந்த இதழும்
இப்போது எச்சிலில் தான்
குளிப்பேன் என அடம்பிடிப்பதுமேனோ
எல்லாம் அவன் செயல் தானோ...
இப்போதும்
அவன் கவனிக்கிறான்
நான் கவனமாகிறேன்
அவன் கனிக்கிறான்
நான் கனிந்திருக்கிறேன்
காதல் காய்த்திருக்கிறது
கண்களில் கவனம் தேவை.
..இயலிசம்...