Breaking News :

Thursday, May 01
.

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி?


இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்
மறக்க முடியாத
மகாகவி நீ.
ஏனெனில் அன்று மரித்தது
வெறும் தேகம்தான்
இன்றும் சுடர்கிறது
எழுத்தில்
நீ வளர்த்த யாகம்தான்.
இன்றைய தமிழின்
முகம் நீ
நவீனத் தமிழின்
அகம் நீ.
எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாத
மகாகவி நீ.
பாட்டரசனே
உன் மீசையின்  ரசிகன் நான்
அது தமிழுக்கு முளைத்த மீசை
தமிழன்னையே முறுக்கிவிட்ட மீசை.
மகன் மீசை முறுக்குவதைப் பார்த்து தாயே மகிழ்ந்தாள் அப்போது.
முண்டாசுக் கவிஞனே
உன் தலைப்பாகை
தமிழுக்கு நீ சூட்டிய
மகுடம் அல்லவா?
நீ அணிந்த கோட்டு உன்னைத் தாக்கிய வறுமைக்கு நீ வைத்த வேட்டல்லவா?
நீ கையில் ஏந்திய தடி
உன் பேனாவின் பிறிதொரு வடிவம் அல்லவா?
அன்னைத் தமிழுக்கு
ஆயிரமாயிரம் ஆண்டு வரலாறு
அதில் ஆயிரம் ஆயிரம் புலவர்கள்
அவர்களில் நீ மட்டும் எப்படி மகாகவி ?
*
ஏனெனில்
எழுதுகோல் எடுத்தவரில்
சிலர் மட்டுமே
சிகரம் தொட்டவர்.
சிகரம் தொட்ட
சில முன்னோரின்
உயரம் தொட்டவன் நீ
சில முன் ஏர்களின்
ஆழம் தொட்டவன் நீ
அதனால் நீ மகாகவி.
*
உயரம் தொட்ட பின்
அங்கேயே  
நின்று கொண்டிருக்கவில்லை நீ .
சிகரம் தாண்டியும்
பாதம் பதிக்க முயன்றாய்   
உனக்குச் சிறகுகள் கொடுத்தாள் தமிழன்னை.
பெற்றுப் புதிய வழியைச் சமைத்து வைத்தாய்.
ஆழம் கண்டபின்
அங்கும் நீ குடியிருக்க
விரும்பவில்லை
விதையாய் உன்னை எழவைத்தாள்
நம் அன்னை.
எழுந்தாய்
மொழியைத்
துளிர்க்க வைத்தாய் புத்தம்புதிதாய்.
அதனால் நீ மகாகவி.
*
உன் நெஞ்சில் எரிந்த கனலை
எத்தனை எத்தனை  வடிவங்களில்  இறக்கி வைத்தாய் நீ?
அமுதினும் இனிய தமிழால்
கண்ணன் பாட்டு
ஆயுதத் தமிழால் பாஞ்சாலி சபதம்
தத்துவத் தமிழால்
குயில் பாட்டு
வீரத் தமிழ் கொண்டு விடுதலைப் பாடல்கள்
புதுமைத் தமிழால்
வசன கவிதை
கனித்தமிழ் கொண்டு கட்டுரை, கதைகள்
பத்திரிக்கை மொழியால் உரைநடைத் தமிழ் என்று
பலப்பல வழிகளில்
தமிழை வளர்த்தாய்.
அனைத்திலும் கலந்தாய் உன்
ஆன்ம சாரத்தை.
அதனால் நீ மகாகவி.
*
பழம் பெருமை பேசுவதில் ஒரு மகிமை இல்லை என்று  
அறை கூவி
உலகின் புதுமை அனைத்தையும்
தமிழர் கண்முன்
கொணர்ந்து நிறுத்தினாய்.
புதுக்கவிதையை இறக்குமதி செய்தாய்
ஹைக்கூ வடிவம் அறிமுகம் தந்தாய்
சிறுகதை செதுக்கி
சிறப்புகள் சேர்த்தாய்
உரைநடை கொண்டு உணர்ச்சிகள் பெருக்கினாய்
பத்திரிகை எழுத்தின் பலம்தனைக் காட்டினாய்
கார்ட்டூன் வரைந்தாய்
சொற்பொழிவாற்றினாய்
எல்லாவற்றிலும்
தமிழின் உயர்வையே
தரிசனம் செய்தாய்.
உலக மேடைகளில்
தமிழை நிறுத்த
அனுதினம் நீ அயராதுழைத்தாய்.
அதனால் நீ மகாகவி.
*
துப்பாக்கி வைத்திருந்தவர்களை விட
எழுதுகோல் வைத்திருந்த உன்னைப் பார்த்துதான் வெள்ளையர் அரசு
உண்மையில் வெருண்டது.
ஏனெனில் துப்பாக்கியை விட
பெரிய பீரங்கி அவர்களிடம் இருந்தது.
ஆனால் உன் எழுதுகோலை விட வலிமை மிக்க
ஆயுதம் எதுவும் அவர்களிடம் இல்லை.
ஆகவே  உன்னை அது விரட்டி விரட்டி
மிரட்டிக் கொண்டிருந்தது
மிரட்டி மிரட்டி
விரட்டிக் கொண்டிருந்தது
அதனால் நீ மகாகவி.
*
சிலகாலம்
பாண்டிச்சேரியில் மையமிட்டுத்
தமிழ்நாட்டை நோக்கிப்
புயலாய் அடித்தாய்.
சிலகாலம்
சுதேசமித்திரனில் பணியாற்றி
அடிமை தேசத்தில்
வெயிலாய் அடித்தாய்.
மெல்லத் தமிழ் இனி சாகும் என்றவரைப்
பேதை என்றே
முகத்தில் அடித்தாய்.
அதனால் நீ மகாகவி.
*
பாட்டுக்கொரு புலவனே
எங்கள் பாட்டனே
உன்னை நினைத்தால்
என் நெஞ்சம் நெகிழ்கிறது
கண்கள் கசிகிறது.
வாழும்போது
உன் வீட்டில் உலை வைக்க வழியில்லை
செத்த பிறகு உனக்குச் சிலை வைக்காத இடமில்லை.
பசியை ருசி பார்த்துக்கொண்டே தமிழுக்குப் பந்தி வைத்த
வள்ளல் அல்லவா நீ .
அதனால் நீ மகாகவி.
*
நூறாண்டுகள் கடந்து
உன் எழுத்துக்களை வாசிக்கிறேன்
ஒவ்வொரு சொல்லிலும் உன் உயிர்ச்சுடர் எரிகிறது
உனக்காக எதையும் நீ   எழுதவில்லை
நாட்டுக்காக எழுதினாய்
உலகுக்காக எழுதினாய்
என்றும் நிலைக்கும்
உண்மைக்காக எழுதினாய்.
அதனால் நீ மகாகவி.
*
ஆயுத எழுத்தை எப்போதாவது பயன்படுத்துபவர்கள் நாங்கள் ...
அதுவும் எழுத்தில்.
நீ எழுதியவை எல்லாமே
ஆயுத எழுத்துதான்
எழுதிய இடமோ
எதிரியின் கழுத்தில்.
அதனால் நீ மகாகவி.
*
பிருந்தா சாரதி
*
நன்றி: மகாகவி இலக்கிய இதழ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub