நெஞ்சத்தை துளைத்த வரலாறு ...அதில் தோன்றிய காதல்...யாரும் அதிகமாகக் கண்டிராத காதல்...அதிகமாகப் பேசப்படாத காதல் ... எதையும் எதிர்பாராத காதல். இவளின் காதல், ஏக்கம் ,அன்பு அதிகமாக கண்டுகொள்ளப்படவில்லை அவளுடைய காதல் கணவனால் ... அவளை வென்றவனால். ஆனால் அவள் என்ன நினைத்தாலும் செய்ய அவளுடைய மற்றொரு அவன் தயாராகவே இருந்தான்...அவளது கடைசி மூச்சு வரை.
வரலாற்றில் எத்தனையோ காதல் கதைகளை கேள்விப் பட்டிருப்போம். இதுவும் அதில் ஒன்று. இவளின் அதீதமான அன்பை அறியாதது போல் இருந்த ஒருவன், அவன் அருச்சுனன். இவளின் அன்புக்காக துடிக்கும் இன்னொருவன் ...ஆம் நான் கூறுவது பீமனைப் பற்றியே .
முதன் முதலாக திரௌபதியின் சுயம் வரத்தின் போது அனைத்து மன்னர்களும் எதிர்த்த போது, பீமன் ஒரு தூணை பிடிங்கி, கட்டிடத்தை இடித்து, திரௌபதியை காப்பாற்றினான் .
அவள் பகடை ஆட்டத்தின் போது,துச்சாதனன் மற்றும் துரியோதனனால் வேதனைக்குள்ளாகும்போது அனைவர் முன்னிலையிலும் வீர சபதம் மேற்கொண்டு வெகுண்டு எழுந்தான். அவளது மானத்தைக் காப்பாற்ற முடியாத போது அந்த மாவீரன் தேம்பி தேம்பி அழுதான், கொண்ட காதலின் காரணமாக.
பன்னிரெண்டு வருட வனவாசத்தின் போது தரையை தொடாத அவளது பாதங்கள் சிவந்த குங்குமம் ஆயிற்று . சில மலைப்பாங்கான இடங்களில் நடக்கும்போது பீமன் அவளை தூக்கிச் சுமந்தான் .சவுகந்திக மலர்களை காட்டி வேண்டும் போது பீமன் அவளுக்காக தொலை தூரம் சென்று அஞ்சனை புத்திரனால் பரீட்ச்சிக்கப்பட்டு மலர்களை கொண்டு வந்தான் .அப்போதும் அவள் அவனின் காதலை உணரவில்லையோ?
பதின்மூன்றாவது வருடம் அஞ்ஞாத வாசத்தின் போது கீசகனை வதம் செய்தான் அவளுக்காக . கீசகனின் உறவினர்களை வதம் செய்தான் மீண்டும் அவளுக்காக.
குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் துச்சாதனனின் மார்பைக் பிளந்து ரத்தத்தைக் குடித்து ,பதிமூன்று ஆண்டுகளாக முடியப்படாத அவளின் கூந்தலில் தடவினான். துரியோதனனின் தொடையை அடித்துக் கொன்றான்.நூறு கௌரவர்களை கொன்றான். எல்லாம் அவளுக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழி வாங்கத்தான்.
அவளின் ஐந்து புதல்வர்களை கொன்ற போது அஸ்வத்தாமனின் நெற்றியில் உள்ள முத்தை பறித்து கொண்டு வந்து அவளிடம் சமர்ப்பித்தான். அவள் அழும்போதெல்லாம் இரக்கம் கொண்டான் . கடைசியாக மேரு மலையின் வழியாக கைலாயத்திற்கு செல்லும் போது மலையில் இருந்து கீழே விழுந்தாள். கை கொடுக்க பீமன் வந்தான். முடியவில்லை . அவள் விழுந்துவிட்டாள். ஓடிச்சென்றான் அவளைக் காண. அவளது கடைசி மூச்சு அது .
பீமன் அவளிடம்,
"என்னவளே ! உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? உன் கடைசி மூச்சு வரை நான் உன்னோடிருப்பேன். கவலை கொள்ளாதே " என்றான். அவளோ "என்னவர் வாயு புத்திர பீமரே, என்னுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தீர். என் அவமானத்திற்கு பழி தீர்த்தீர். என்னை பாதுகாத்தீர் ஒவ்வொரு நிமிடமும். ஆனால் நானோ அர்ஜுனர் மீதே இன்னும் அதிகமான காதல் கொண்டிருந்தேன் .
என்னவரே!அடுத்த ஜென்மத்தில் குடும்பத்தின் மூத்த மகனாக பிறப்பீர் !!! "என்று கூறி விட்டு கைலாயம் புகுந்தாள் யோஜனகாந்தா.இந்த வரிகள் மாத்திரம் வியாச பாரதத்தில் இல்லை. இணையத்தில் வாசித்துத் தெரிந்து கொண்டது. கற்பனைக் கதை ஆகும்.
உயிர் பிரியும் நேரத்தில் பீமனின் எதையும் எதிர் பாராத காதல் அவளுக்கு புரிந்தது . பொதுவாக மகாபாரதத்தின் பீமன் என்றவுடன் நம் அனைவரின் நினைவில் வருவது , அடி, தடி, உதை தான். துச்சாதனின் தோலை உரித்து ரத்தை குடிக்கும் போது ஒரு விலங்காகத் தோன்றினான். அவனை ஒரு நேசமிகு மனிதனாகக் காட்டியது ,அவன் பாஞ்சாலியின் மீது கொண்டிருந்த காதலே .