என் வாழ்க்கையில்...காணாமல் போனவர் …
சிறு வயதில் விட்டுப்போன..தந்தையை..தான் தந்தையானதும்..தேடும்..இளைஞனின்.வார்த்தைகள் வாசிக்க..
என் வாழ்க்கையில்
காணாமல் போனவர்
நான் இதுவரையும்..
தேடுகையில் மறைந்து போனவர்
நான் தேடும்
நேரங்களில்
தொலைந்து போனவர்..
கைரேகை தேய்ந்து போன
நேரங்களில்..
கவலையானவர்
விரல் வழி தேடி
விழித்த நேரங்களில் ..
கண்ணீரானவர்..
விழி வலியோடு
விடியல் தேடிய நேரங்களில்..
வாய்ப்பை கெடுத்தவர்..
கண்ணீரும் வரும் பலகணம்
காரணம் பல கண்டு..நான்
கலங்கி நிற்கையிலே
கைதேடி கண்துடைக்க
கானலாய் போனவர்.
ஆனாலும் எப்படியும் - என்
பஞ்சு நெஞ்சுக்குள்
பாசப்புகை ஒண்ணு
நெடிகட்டி வீசும்..
கனவிலாவது வருவாருன்னு
நான் காத்திருக்க..
கனவிலும் காலமாகிப் போய்
சுடலை வாசம் பேசும். ..
ஆனாலும்
ஏதோ ஒரு ஏக்கம்
என் நெஞ்சுக்குள்..
வழியில்.. விழி நோக்கி
என் மனசு துக்கத்தில்
அடைக்கும் போது
வாழ்க்கை வழியின்றி
வறுக்கும்போது
வாசனைகள் வயிற்றை
கரிக்கும் போது..
வாலிபத்தில்
நான் கண் கலங்கிய போது..
கால் வயிற்றுப்பசிக்கு
கையில் வலியை தாங்க முடியாமல்
நான் கட்டாந்தரையில் சாய்ந்த போது..
ஏனையாநீ..எங்கிருந்தே
நான் பிறக்க காரணமான நீ - ஏன் என்னை நினைக்கல..
என் கண்ணை நினைக்கல..
என் கையை புடிக்கல..
ஏன் என்னை விட்டு நீ போன
உனக்கும் உன்னவளுக்கும்
உடைக்குள் தகராறு
உடை தாண்டியும்
இருதயமாய் நான் இருந்தேன்
இளம்பிஞ்சாய் நானிருந்தேன்
உதிரமாய் நான் இருந்தேன்
நீ ஏன் உதறித்தள்ளிப் போனாய்.
எனக்கும் ஆசைடா
உன் கை பிடித்து நடக்க வேணும்
உன் கை காட்டும் திசையில்
நான் காலம் நடந்து போக வேணும் ..
கட்டாந்தரை ஒன்னு வாங்கி
அதில் கட்டில் ஒன்னு போட வேணும்..
காலாட்டி நீ பாட்டுப்பாட
என் கவலையெல்லாம்
மறக்க வேணும்
காலத்துக்கும் - உனக்கும்
கருணையோடு கஞ்சி வைச்சு - நீ அதை உண்ண
நானும் கண்ணோடு தின்ன
அந்த கடவுளும்
அதைப் பார்க்க வேணும்..
அவனும் என் அன்புக்காய்
ஏங்கிச் சாக வேணும்..
காலம் கடக்கையில்
காலை விழிக்கையில்
கண்கலங்கி என் இரத்தம்
தாத்தாவென உன்ன கூவ..
என் பேரனை ஏனடா..அடிச்சேயின்னு என்னெப் பார்த்து நீ கேட்க - அந்த
சந்தோசத்தில் அவனும் பூக்க..
மறுநொடி நானும் கேட்க
அவனை மார்போடு
முத்தமிட்டு நீ தூக்க
அந்த சந்தோசம்
அந்த நொடி சந்தோசம்..
அத்தனை சந்தோசம்ஏன்
எனக்கு இப்போ கிடைக்கல
நான் என்ன பாவம் செஞ்சேனோ
உன் கூட வாழ கொடுத்து வைக்கல
இதுக்காக
நான் பலநாள் அழுதிட்டேன்..
அம்மா முந்தானையில் மட்டும்
கண்ணீர் தொடச்சு
கலங்கி இருக்கேன்.
ஊரெல்லாம் பாக்குறப்போ
எனக்கும் ஒரு சந்தேகம்.
ஏதோ ஒருநாளு
நான் வழிதவறிப் போகுறப்போ..
உன் கைரேகை காரணமாய்
என் முதுகுலயும் பட்டிருந்தா
என் வாழ்க்கை
நேரா போயிருக்குமோஇன்னும்
என் வார்த்தையில்
வளமும் கூடியிருக்குமோ.
தெரியலைய்யேதெய்வமேநான்
தெருவிளக்கில் தானே..
வாழ்க்கை படிச்சேன்
தேடினேன் நானும்..
வயிற்றுப் பசிக்கு பல நாளு
வாழ்க்கை பசிக்கும் சில நாளு
வாலிபத்தில் சில நாளு
வறுமையிலும் சில நாளு
நான் உன்னைத்தானே தேடினேன்..
ஆனால்
நீ ஏன் என்ன - என் அண்ணன்
தோளில்கட்டினே
அவன் வாழ்க்கைக்குள்
என்னையும் ஒட்டினே
அவனே..எங்கள்.. ஆதி சிவனே..
அறியா வயசுல
அஞ்சுவிரல் நெஞ்சுல
பத்துமே பொத்துப்போக
பாரம் குறைச்சு - எங்க வயித்தை கட்டிப்போட
எச்சில் குவளைக்குள்
குடல் தின்ன வாடிப்போனான்..
என்னையும் அவன்
ஏக்கத்தோடு
ஏட்டெடுத்து படிக்கவைச்சு
ஏணியில ஏத்தி விட்டான்..
ஏத்திவிட்டவனோ
ஏணி தாங்கி கீழ நின்னான்
ஏற மறுத்து காத்து நின்னான்..
ஆனாலும் காலம் கடக்கையில
கழனி காஞ்சு கருகையில..
காடெல்லாம் கழனியாக்கி
ஆத்தாவுக்கு கஞ்சி ஊத்த கூடலப்பா.. - இங்க ஒண்ணும் சரியா இல்லியப்பா..
நாங்க கட்டிணது மூணுக்கும்
கறிக்கஞ்சி ஆறாக்கட்டி
கழுத்தோடு அணிகள் பூட்டி
அழகா அழுது திரியிறோம்
ஆனாலும் என்ன சொல்ல
உன் பொண்டாட்டி
பசியை மட்டும் ஆறப்போட்டு
அவதியோடு ஓடுறோம்
அரைமனசோட
அலையுறோம்
ஆவியின்றி கூடா திரியிறோம்..
அங்கம் சுருங்கச்சுருங்க
அன்பையும் குறைக்கிறோம்..
ஆழ்கடல் போல அவ மனசு..
அன்பால் நிறைஞ்சிருக்கு..
அப்பப்போ..
அடிக்கிது நெஞ்சுக்குள்ள - அன்பு
அலையொன்னு கண்ணுக்குள்ள..- அவ
ஆனாலும் இன்னும் உன்னைத் தேடலை
அவள் இப்பவும் வாடலை
அவள் அன்பில்
வாழையிலை அல்ல..மரம்
அவள்..மனம்தினம்
மயானம் வரைக்கும்
உன் துரோகம் கனம்
அவள் வலி..இல்லற இலக்கணம்
இந்த
கருத்தெல்லாம் எனக்குள் மங்கிப்போக
என் கருத்த மனசுக்குள்ளும்
வெள்ளையா பூ பூத்திருக்கு..அது
தாடையோரம் ஒதுங்கியும்
என்னை தாத்தானு கூப்பிட
காத்திருக்கு..
கண்ணுல ஒருதரம்
உன்முகத்தே பாக்கணுமே..
கண்ணா நீ வாடான்னு என்னை
நீ ஒரு தடவை
கையழைச்சு கூப்பிட கூடணுமே
இப்பயும் பாவமய்யா நானு
பாசநீருமில்லா மீனு..
படுக்கையில பல நாளு
உனக்காக அழுதிருக்கேன்..
என் அம்மா பேச்சில்
உன்னைப் பாத்து அரைகுறையா
பேசி சிரிச்சிருக்கேன்..
போகட்டும் விடு
இதுதான் என் விதியோன்னு
நாளும் கிழமையும் வாழ்ந்திருக்கேன்..
நான் என் மகனுக்கு அப்பனா
இங்கிருக்கேன்..
உருக்குலைஞ்சு போனாலும்
உன் உமையாள் இன்னும்
கருக்குலைஞ்சு போகலைய்யா..
காளைக்கன்னு நாங்க
மூணு இருக்க
கழுத்தில் கயிறு மட்டும் தொங்குது
ஆனால்..
கட்டின உன்ன இன்னும் தேடலைய்யா..
அவ பலநாள் அழுதிருக்கா
பாவிமக்கான்னு திட்டிருக்கா..
அந்த நாவு இன்னுமே பிறழவில்ல
இப்பிறவி தீரு மட்டும்
உன் பெயரை பேச்சோடு
சொல்லவுமில்லை
உனக்கும் பெயரை வைச்சதாரோ
நல்லதம்பின்னு - அது
நாகப்பாம்பாட்டம் கொத்திருச்சு
எங்க நெஞ்சுக்குள்ள
பலநாள் உருண்டோடி
பகலிரவு மாறிப்போயி
பதவியும் பட்டமும் வாடிப்போயி
பாறையும் மண்ணோடு மக்கிப்போயி
மண்ணுக்குள்ள மண் புழுவாட்டம்
எங்க வாழ்க்கை நெளியிதய்யா
பாதி உசிரோட
எங்களை விட்டுப்போன நீ
உருக்குலைஞ்சே போயிருந்தாலும்
உன்னே..இப்போ
காப்பாத்தத் தான் மனசு ஏங்குதய்யா..
காணாமல் போனவரே..
காத்திருக்கேன்..நான் மட்டும்..
கண்ணோரம் நீரைத் தேக்கி..
நீர்த்தேரை நீ போட்ட
கடைக்குட்டி..
கண்ணன்
... இயலிசம்....
.
என் வாழ்க்கையில்...காணாமல் போனவர் …

.