Breaking News :

Sunday, May 11
.

மகா பெரியவாள் ஜெயந்தி இன்று 24 மே 2024


மகா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 131வது ஜெயந்தி தினம் அதாவது அந்த மகா பெரியவா அவதரித்த தினம் இன்று பெரியவா பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மஹா பெரியவர் என்ற சொல்லிற்குத் தகுதியானவர் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி. வைகாசி அனுசத்தில் அவதரித்த மகான். இன்றைய தினம் அவரது 131வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றியவர். 1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி வைகாசி அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்த அவர் 87 ஆண்டுகள் இறைப்பணி செய்திருக்கிறார். தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்திருக்கிறார்.

மஹா பெரியவா அற்புதங்கள்:

ஒரு சமயம் ஸ்ரீமடத்தில் ஸஹஸ்ர போஜனம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஒரே நாளில் 1000 அந்தணர்களுக்கு போஜனமளிக்க வேண்டும். ஒரே நாளில் அவ்வளவு பேர் கிடைக்காவிடில் பல நாட்களில் கிடைக்கும் அந்தணர்களை வைத்து அன்னமிட்டு 1000 எண்ணிக்கையை நிறைவு செய்வதுண்டு. ஆனால் போஜனத்திற்கு வரிக்கப்படும் அந்தணர்கள் கட்டாயம் வேதவித்துக்களாகவும், ஆசார, அனுஷ்டானம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.

அப்படி நெறி வழுவாமல் நடக்கும் ஸஹஸ்ரபோஜனத்திற்கு ஒருநாள் போதிய அந்தணர்கள் கிடைக்கவில்லை. அதனால் ஸ்ரீமடம் மேனேஜர் மஹாபெரியவாளை அணுகி விபரம் தெரிவிக்க, நிலைமையை உணர்ந்த மஹான் ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்பவர்களில் சிலரை உபயோகித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார். அதன்படி மேனேஜர் மடத்தில் உள்ள சிலரை அழைத்து மறுநாள் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். மறுநாள் குறிப்பிட்ட அனைவரும் ஸ்நானம் செய்து ஆசாரத்துடன் பெரியவாள் பூஜைக்கு வந்தனர். பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பெரியவாள் அபிஷேக தீர்த்தம் தருவார்.

ஒரு திரைக்கு பின்னால் ஸ்டூலில் பெரியவர் அமர்ந்து கொண்டு தீர்த்தம் தர, திரைக்கு மறுபுறம் வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டு சிறிய துவாரத்தின் வழியாக கையை நீட்டி தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ப்ரசாத விநியோகம் முதலில் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வரிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வந்து கையை நீட்ட, ப்ரசாதம் வழங்கினார் மஹான். இந்த நிகழ்ச்சி நாயகனான தொண்டர் வந்து கையை நீட்ட தீர்த்தத்தை அவர் கையில் விடாத பெரியவர் திரைக்கு உள்பக்கம் தன் அருகிலிருப்பவரிடம் 'கை நீட்டுவது யார்?" என்று வினவி 'அவனை சாப்பிட உட்காரவேண்டாம். பரிமாற சொல்' என்று உத்தரவிட்டு தீர்த்தத்தை கையில் விட்டார். இந்த உத்தரவு தொண்டரை கலங்க வைத்தது.

'மேனேஜர், பெரியவர் சொல்லித்தானே மடத்தில் பணிபுரிபவர்களையே இன்று ஸஹஸ்ர போஜனத்திற்கு நியமித்தார். அதன்படி தானே தனக்கும் இன்று வாய்ப்பு தரப்பட்டது. அப்படி இருக்க, சாப்பிட தயாராக வந்தவர்களில் தன்னைமட்டும் வேண்டாம் என்று பெரியவர் விலக்குவது எதனால்? தனக்கு என்ன தகுத் குறைவு? என்பது போன்ற பல எண்ணங்கள் அவர் மனதில் எழுந்து வாட்ட, மனம் ஒடிந்து கண்ணீர் சொரிய நின்றார்.

 எனினும் தன்னை சாப்பிடவேண்டாம் என்று சொன்னாலும், பரிமாறும் கைங்கர்ய பாக்கியத்தையாவது கொடுத்தாரே என்று மனதைத் தேற்றிக்கொண்டு பணியில் ஈடுபட்டார்.
ஸஹஸ்ர போஜனம் நடந்து முடிந்தது. தொண்டருக்கு மன உளைச்சல் அடங்கவில்லை. கண்ணீரும் வற்றவில்லை. ஒரு ஓரமாய் அமர்ந்து தன் நிலைமையையும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் எண்ணி எண்ணி வருந்தும் பொழுது மஹானின் அழைப்பு வந்தது.

மிகுந்த மனவருத்தத்துடன் வந்து நின்ற தொண்டரைப் பார்த்து 'ரொம்ப அழுதியோ? என்று வினவ அன்பருக்கு மேலும் தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது. 'நீ எங்கிட்ட கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே. நீ நன்னா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா' என்று மஹான் வினவியது அன்பரை மேலும் கரைத்தது. தன்னிடம் கைங்கர்யம் செய்பவர்கள் மட்டுமா, உலகமனைத்துமே நன்றாக இருக்க வேண்டும் என்று அனவரதமும் நினைக்கும் மஹாத்மா அல்லவா மஹாபெரியவர்.

மனவாட்டம் அடங்கும் முன்பே வந்தது அடுத்த வினா. 'நீ கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா பார்த்திருக்கியோ? அதில் எல்லோரும் கூடி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் இல்லையா? அதில் விதவையான சில பாட்டிகளும் கூட வடம் இழுப்பா தெரியுமோ? பொதுவா விதவையானவா எந்த விழாக்களிலும் கலந்துக்க மாட்டா. ஆனா கோயில் ரதோத்ஸவத்தில் மட்டும் கலந்துப்பா. ரத உத்ஸவத்தில் கலந்து கொண்டு யார் தேர் வடம் பிடித்து இழுத்தாலும் அவர்களுக்கு, சொந்த செலவில் ஸ்வாமிக்கு ரதோத்ஸவம் செய்த பலன் வந்துவிடும் என்று தெரியுமோ'? என கேட்க, எதற்கு இந்த கேள்வி நம்மிடம் கேட்க வேண்டும் என்று தொண்டர் திகைக்க நேராக சம்பவ விஷயத்திற்கே வந்தார் பெரியவா.

'மடத்துல கைங்கர்யம் பண்றவாளையே ஸஹஸ்ர போஜனத்திற்கு உட்கார வைக்கும்படி சொன்னேன். உனக்கும் அழைப்பும் வந்தது. ஆனால் நீ தீர்த்தம் வாங்க வந்த பொழுது தான் தோணித்து. ஸஹஸ்ர போஜனத்தில் சாப்பிட உட்காருபவர்கள் கட்டாயம் வேதம் படித்து அனுஷ்டானங்களுடன் இருக்க வேண்டும் என்ற சட்டம்.
 உன்னால் தவறாமல் சந்தியாவந்தனம் கூட செய்ய முடியரதோ இல்லையோ, செய்யக் கூடாதுங்கற எண்ணம் உனக்கில்லை. மடத்து வேலையா நீ வெளியே போக வேண்டி இருப்பதால், சில சமயம் தவறலாம். எனவே நீ சாப்பிட உட்கார்ந்தா உனக்கு தோஷம் வந்துடப் போதேன்னு நினைச்சேன். சும்மா இருந்த உனக்கு என்னால் பாபம் வந்துடக் கூடாதுன்னு ஞாபகம் வந்தது.

 அதனால் தான் உன்னை சாப்பிட உட்கார வேண்டாம் என்றேன். ஆனா சாப்பாடு போடற புண்ணியமாவது உனக்கு வரட்டுமேன்னு தான் உன்னை பரிமாறச் சொன்னேன். ரதோத்ஸ்வத்திற்கு சொன்னது தான் இதுக்கும். நீ ஸஹஸ்ர போஜனம் செய்பவர்களுக்கு பரிமாறினதாலே நீயே செலவழிச்சு ஸஹஸ்ர போஜனம் செய்த பலன் முழுக்க வந்துடுத்து, க்ஷேமமாய் இருப்பே' என்று அருள் வார்த்தை மழையாய் வர்ஷித்தார்.

இதைக் கேட்ட அடியவருக்கு தனக்கு பாபம் வரக் கூடாது என்ற கரிசனத்தோடு பரம புண்ணியமும் பைசா செலவில்லாமல் வரவேண்டும் என்று கருணை கொண்ட பெரியவரின் தாய் மனதை எண்ணி எண்ணி நெகிழ்ந்தார். இவ்வளவு நேரம் அவமானம் என்றெல்லாம் எண்ணி வாடிய மனது எவ்வளவு பெரிய வெகுமானம் அருளியுள்ளார் இந்த மஹாமுனி என எண்ணி மகிழ்ந்தது.

தன்னை சரண் அடைந்த அன்பர்களுக்கு வாரி வாரி அருளை வழங்குவது மட்டும் அவர் குணமல்ல. கடுகளவு பாபமும் அண்ட முடியாதபடி காத்து நிற்கும் அரண்தான்
அந்த ஹரன்.

OM SRI GURUPNAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.