Breaking News :

Thursday, May 08
.

"என்ன பாண்டுரங்க தரிசனம் ஸ்பெஷலா ஆச்சா?" - மகா பெரியவா


(மகாபெரியவா சிரிச்சுண்டே கேட்க அப்போதான் அந்த பக்தருக்கு மகாபெரியவாளோட  லீலைதான் அதுன்னு புரிஞ்சுது.)  

1982-அல்லது 1983- சதாரா மஹாகாவ்ல முகாம்.

ஒரு நாள் அங்கே மகாபெரியவாளை தரிசிக்க  வந்திருந்த பக்தர்கள் வரிசையில் நின்னுண்டு இருந்தது ஒரு குடும்பம். அவாளோட முகத்தைப் பார்த்தாலே அந்த  ஊர்க்காரா இல்லைங்கறது அப்பட்டமா தெரிஞ்சுது. எல்லாரும் அமைதியா வரிசையில நின்னுண்டு இருக்கறச்சே,  அந்தக் குடும்பத் தலைவரோட முகத்துல லேசான படபடப்பும்,சீக்கிரமா மகாபெரியவாளை தரிசிச்சுட்டு புறப்பட்டா தேவலைங்கற மாதிரியான ஒரு அவசரமும் தெரிஞ்சுது

வரிசையில அந்த ஊர் சுத்துவட்டாரத்துல இருந்தவா, வேறவேற ஊர்கள்ல இருந்து வந்தவாள்னு பலரும் கலந்து இருந்ததால், ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் இல்லாதவாளாகவே இருந்தா. அதனால, மத்தவாளைப் பத்தி யோசிக்காம அவா அவாகூட வந்தவாளோட மட்டும் பேசிண்டும்,ஹரஹர சங்கரன்னு சொல்லிண்டும் இருந்தா.

கூட்டம் நகர்ந்து நகர்ந்து அந்த பக்தர் குடும்பம் மகாபெரியவாளை தரிசிக்கற முறை வந்தது.

 மகாபெரியவாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார், அந்தக் குடும்பத் தலைவர்.

"பெரியவா..! அப்படின்னு ஏதோ சொல்ல வாயைத் திறந்தவர் என்ன நினைச்சாரோ, எதுவும் பேசாம பிரசாதத்துக்கு கையை நீட்டினார்.

"ஏதோ சொல்லவந்தியே என்ன?" கேட்டார்   பரமாசார்யா.

"ஓண்ணுமில்லை பெரியவா!"..இப்பவும் தயங்கினார் அவர்.

"ஏதுவுமில்லைன்னு சொல்றே,ஆனா ஒன்னோட முகத்துல ஏதோ ஒரு குறை தெரியறதே.யாரையோ பார்க்கணும்னு நினைச்சு பார்க்க முடியாதோன்னு ஏமாத்தம் வந்துட்ட மாதிரி தோண்றதே!"

மகாபெரியவா கேட்டதும், அதுக்குமேலே உண்மையை மறைக்க முடியாம விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சார் அவர்.

"பெரியவா நாங்க சென்னைலேர்ந்து வந்திருக்கோம்.இங்கே சுத்துவட்டாரத்துல இருக்கற க்ஷேத்ரத்துக்கெல்லாம் போகறதா ப்ளான். எங்க திட்டப்படி அடுத்ததா, பண்டரிபுரம்போய் பாண்டுரங்கனை தரிசிக்கலாம்னு இருந்தோம். ஆனா இங்கேயே இவ்வளவு நேரம் ஆயிடுத்து.

எனக்கு லீவு நாளன்னைக்கு வரைக்கும் தான் இருக்கு. அதனால அங்கே போறதுக்கு சாத்தியப்படாதுன்னு தோணித்து. அதான்...!"
"ஓ .என்னை தரிசிக்க வந்து தாமதமானாதால அங்கே போகமுடியாமப் போயிடுத்துன்னு கொறைப்பட்டுக்கறயா?"

ஆசார்யா கேட்க அதிர்ந்து போனார் அந்த பக்தர்.

"மன்னிக்கணும் பெரியவா...நான் அப்படியெல்லாம் நினைக்கலை. உங்களை தரிசனம் பண்ணினது சாட்சாத் மகேஸ்வரனயே பார்த்ததுக்கு சமம்.பண்டரிநாதரைப் பார்க்க நேரம் இல்லைங்கறது ஏக்கம் அவ்வளவுதான்!" என்றார்.

"நீ ஒண்ணு  பண்ணு. நாளைக்குக் கார்த்தால சீக்கிரமா பண்டரிபுரத்துக்குப் போ. ஒம் மனசுபோல தரிசனம் கிடைக்கும். பண்டரிநாதரைப் பார்த்துட்டே ஊருக்குப் பொறப்படு. எல்லாம் சரியா இருக்கும். என்ன புரியறதா?" சொன்ன மகாபெரியவா கல்கண்டு,குங்கும பிரசாதம் குடுத்து அவரை ஆசிர்வதிச்சு அனுப்பினார்.

மகாபெரியவாளே உத்தரவு தந்துட்டார்ங்கற சந்தோஷத்தோட மறுநாள் கார்த்தால பண்டரிபுரத்துக்குப் போன அந்த பக்தருக்கு அங்கே இருந்த கூட்டத்தைப்  பார்த்ததும் ஒரே அதிர்ச்சி.

கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டருக்கு பக்தர்கள் க்யூ,அவ்வளவு கார்த்தாலேயே நின்னுண்டு இருந்தது
'போச்சு' இந்த வரிசையில போய் பாண்டுரங்கனைப் பார்க்கணும்னா குறைஞ்சது நாலைஞ்சு மணி நேரமாவது  ஆகிடும்.

அதுக்கப்புறம் இன்னிக்கு எங்கே  புறப்படறது? இப்படியெல்லாம் மனசுக்குள் எண்ணம் ஓட ஆரம்பிச்சுது அந்த பக்தருக்கு, இருந்தாலும் மகாபெரியவா சொல்லி இருக்கார். அதனால என்னதான் ஆகறதுன்னு பார்க்கலாம்!' அப்படின்னு நினைச்சு வரிசையில் போய் நின்னுண்டார்.

ஒரு பத்து நிமிஷம் வரிசை நகர்ந்திருக்கும். அதுக்குள்ளே பலப்பல எண்ணங்கள் அந்த பக்தரோட மனசுக்குள்ளே..அந்த சமயத்துல கோயில் பண்டா ஒருத்தர் அந்த பக்கமா வந்தார். அந்த பக்தரையும் அவர் குடும்பத்தையும் ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தார்..

"விட்டோபா தர்ஷன் ஜல்தி ஜானாக்யா" (விட்டோபாவை சீக்கிரம் தரிசனம் பண்ணணுமா?)  அப்படின்னு இந்தியிலே கேட்டார்.

அவர் கேட்டதோட அர்த்தம் புரியாம இவர் விழிக்க,ஜாடையா கேட்டிருக்கார் அந்த பாண்டா. ஏதோ புரிஞ்சவரா அந்த பக்தர், "ஆமாம்!"ங்கற  மாதிரி தலையை ஆட்டினார்.

அடுத்த நிமிஷம் நடந்ததுதான் ஆச்சரியம். கூட்டத்துல இருந்து நகர்ந்து வேற ஒரு வழியா தன்கூட வரச்சொல்லி அந்த பக்தரையும் அவர் குடும்பத்தையும் கூட்டிண்டு போனார் அந்தப் பாண்டா.

விவரம் எதுவுமே புரியாம அவர் பின்னால நடந்த  அந்த பக்தர்,அடுத்த அஞ்சாவது நிமிஷம் பாண்டுரங்கர் சன்னதி முன்னால நின்னார்.

பாண்டுரங்கனோட பரம பவித்ரமான தரிசனத்தை கண்குளிரப் பார்த்த பக்தர், இது எப்படி இந்த அதிசயம் நடந்துதுன்னு புரியாம திகைத்தார். பக்தர் கூட்டம் வேகமா நகர்ந்துண்டே இருக்கும்படி அங்கே இருந்த சிலர் சொல்லிண்டு இருக்க, இவாளை மட்டும் யாரும் எதுவும் சொல்லலை.

பத்து நிமிஷத்துக்கும் மேலா ஆனந்தமா தரிசனம்  பண்ணினார். தன்னை அதுவரைக்கும் உள்ளே கூட்டிண்டு வந்த பண்டாவுக்கு நன்றி சொல்லிட்டு வெளியே வந்தார்.

ஊருக்குத் திரும்பற வரைக்கும் யோசிச்சும், அந்த பாண்டா எப்படி,யார் சொல்லி வந்து தன் குடும்பத்தை மட்டும் அழைச்சுண்டுபோய் ஸ்பெஷல் தரிசனம் செய்து வைச்சார்ங்கறது அந்தப் பக்தருக்கு புரியவே இல்லை.

மகாபெரியவா ஸ்ரீமடத்துக்குத் திரும்பின அப்புறம், ஒருநாள் அவரை தரிசிக்க வந்த அந்த பக்தர்கிட்டே ,"என்ன பாண்டுரங்க தரிசனம் ஸ்பெஷலா ஆச்சா?" அப்படின்னு மகாபெரியவா சிரிச்சுண்டே கேட்க அப்போதான் அந்த பக்தருக்கு மகாபெரியவாளோட  லீலைதான் அதுன்னு புரிஞ்சுது.

கண்ணுல ஜலம் பெருக்கெடுக்க,"ஓங்க ஆசிர்வாதத்துல நல்லபடியா நடந்தது பெரியவா" தழுதழுக்கச் சொன்ன  பக்தர், பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்தார்.

அப்புறம்,மஹாகாவ்ல மகாபெரியவா நடத்தின லீலையை இங்கே உள்ளவாகிட்டே அவர் சொல்ல, நடமாடும் தெய்வத்தோட  அந்த திருவிளையாடலை நினைச்சு சிலிர்த்துப்போனா எல்லாரும்.

(நடமாடும் தெய்வத்தோட   திருவிளையாடல்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.