'"இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்"
(மாட்டு இயல்புகளை எந்த கால்நடைக் கல்லூரியில் கற்றுத் தேறினார்கள்.?.)
ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.
பெரியவாள் வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார்கள். பக்தரைப் பார்த்து, "இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அன்று வெள்ளிக்கிழமை.அந்த நல்ல நாளில் வந்திருக்கும் கோமாதாவை "வேண்டாம் என்கிறார்களே பெரியவாள் என்று மனசுக்குச் சஞ்சலம்.
பெரியவாளிடம் மெல்ல வினயமாகச் சொன்னார் மானேஜர்,"இன்னிக்கு வெள்ளிக்கிழமை.பசுமாடு கொண்டு வந்திருப்பவர், ரொம்ப நாளா மடத்து பக்தர், திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு."
"நீங்க சொல்றது சரிதான்.வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஒரு பக்தர் மனப்பூர்வமாகக் கொடுக்கிற பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வதுதான் நியாயம்.."
மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது
""ஆனால்,இந்தக் கன்றுக்கு,இந்த மாடு,தாய் இல்லை"
எப்படி? எப்படி?
"பாருங்கோ..கன்னுக்குட்டி, பசுமாடுகிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது.பசுமாடு கன்னுக்குட்டியை நக்கிக் கொடுக்கல்லே. .தங்கிட்ட சேர்த்துக் கொள்ளல்லே...."
"ஆமாம்..ஆமாம்.கன்றுக்குட்டி,நாலு அடி தள்ளி 'சிவனே'என்று நிற்கிறது.
பக்தர் மாடு வாங்கிய இடத்திற்குப் போய் விசாரித்தார். மாட்டு வியாபாரி உண்மையை ஒப்புக்கொண்டார். ஒரு கன்றின் தாய் இறந்துவிட்டது; ஒரு மாட்டின் கன்று இறந்து விட்டது. இந்தக் கன்றையும் அந்தத் தாயையும் சேர்த்துவிட்டார் மாட்டு வியாபாரி.
குறைகளில்லாத வேறொரு பசு-கன்றை ஓட்டிக் கொண்டு வந்தார் பக்தர்.
பெரியவாள் மாட்டைச் சொறிந்து கொடுத்து, பசு,கன்றை வலம் வந்து ஏற்றுக்கொண்டார்கள்.
மனித இயல்புகள் பெரியவாளுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமில்லை. மாட்டு இயல்புகளை எந்த கால்நடைக் கல்லூரியில் கற்றுத் தேறினார்கள்.?
கட்டுரையாளர்-மடம் பாலு
தொகுத்தவர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.