பெரியவா, முக்திக்கு முன்னும், பின்னும் நடந்த இரு சம்பவங்கள்.
பெரியவா மீது வைக்கும் நம்பிக்கை வீண் போவதே இல்லை.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1983 ம் வருடம் குல்பர்கா நகரில் இருந்த மஹாகாம் என்ற இடத்தில் பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம். அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு, பெரியவா சென்று வருவது வழக்கம்.இதே ஊரில்தான் பாப்பு தீட்சிதருக்கும் அருள் பாலித்தார்.
அந்தக் கோவிலில் ஒரு பெரிய ஸ்தலவிருட்சம். அநேகமாக பட்டுப்போன நிலை. எப்போது வெட்டுவது என்று கோவிலைச் சேர்ந்தவர்கள் யோசித்துக் கொண்டிருந்த சமயம் அது. ஒன்றுக்குமே உதவாத மரத்தை வைத்துக்கொண்டு இருந்து என்ன பயன்?
பெரியவா அங்கு வந்த பிறகு, அந்த மரம் இருந்த மேடையில்தான் அமர்வது வழக்கம்.மரத்தின் நிலை அவருக்குத் தெரியாதா? அவ்வப்போது, தன் அருகில் வைக்கப்படும் தீர்த்தத்தை, மரத்தின் மீது தெளிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டு இருந்தார். பட்ட மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. பெரியவா அந்த ஊரை விட்டுப் போகும் முன் மரத்தில் இலைகளும், பூக்களும் துளிர்த்தன.பட்ட மரம் துளிர்த்த கதை, பெரியவா உயிரோடு இருந்தபோது நடந்தது.
பெரியவா முக்தி அடைந்தபின் சமீபத்தில் நடந்த இரண்டாவது சம்பவம்.
அந்த வீட்டில் ஒரு பெரிய பூச்செடி. ஏறக்குறைய வாடிப்போய் பிடுங்கி எறிய வேண்டிய நிலை. அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் கல்லூரியில் படிப்பவள். மகாபெரியவா கிரகத்திற்கு அவ்வப்போது வந்து சிறு சிறு பணிவிடைகள் செய்துவிட்டுப் போவது வழக்கம்.
இந்தச் செடியை எப்படியாவது, பிழைக்க வைத்துவிட வேண்டும். அதில் வரும் பூக்களை, இங்கே பெரியவா கிரகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பது அவளது எண்ணம். தண்ணீர் விட்டும்.எரு போட்டும் ஒரு பயனுமில்லை. செடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, வேறு செடியை நடலாம் என்று, அப்பெண்ணுக்கு யோசனை சொன்னார்கள்.
அப்பெண் சோர்ந்து விடவில்லை.இந்தச் செடி பூக்கும் பூக்கள் பெரியவாளுக்கு அர்ப்பணம் செய்யப்படும் என்று மனதில் திடமான வைராக்கியத்தைச் செய்துகொண்டு,ஒரு சிறு காகிதத்தில், "பெரியவா சரணம்" என்று எழுதி அச்செடியில் கட்டிவிட்டாள்.
ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு என்று மற்றவர்களுக்கு இது தோன்றியிருக்கக் கூடும். ஆனால் அந்தப் பெண்ணின் செயலுக்குப் பின்னால் இருந்த நம்பிக்கையும், வைராக்கியமும் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.
மகான் புன்னகை பூத்தார். செடியும் துளிர்க்க ஆரம்பித்தது. இப்போது அதில் கிடைக்கும் பூக்கள், மகா பெரியவா கிரகத்திற்குப் போகின்றன. அவர் மீது வைக்கும் அளவற்ற நம்பிக்கை வீண் போவதே இல்லை.