Breaking News :

Thursday, January 02
.

பெண் எப்போது தேவதை ஆகிறாள்?


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாவே மணமுண்டான்னு பாண்டிய மன்னனுக்கு உண்டான சந்தேகம் போல, ஒரு பெண், தன் மனதில் என்ன நினைக்கிறாள் என இன்னொரு மன்னனுக்கு சந்தேகம் உண்டானது.

தன் சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் ஒன்றை தருவதாய் அறிவித்தான். பலபேர் பலவிதமா பதில் சொல்லியும் மன்னன் மனம் சமாதானம் அடையலை.

குடும்பத்தின் வறுமையை போக்க எண்ணிய ஒரு இளைஞன், மன்னனின் சந்தேகம் தீர்க்க வேண்டி பதிலுக்காய் நாடு நகரமென சுற்றி ஒரு சூனியக்கார கிழவியிடம் சென்றான்.  எனக்கு பதில் தெரியும் பதில் சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும் எனக்கு என்ன கிடைக்குமென கேட்டாள் கிழவி.

நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என அந்த இளைஞன் வாக்களித்தான். (பாவம்! பொண்ணுங்களை பத்தி தெரியாம வாக்கு கொடுத்துடுச்சு பயபுள்ள) . டீலுக்கு ஓகே சொன்ன சூனியக்காரி கிழவி,  தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே அவளின் ஆழ்மன எண்ணமாகும்” என பதில் சொல்லி அனுப்பினாள்.

இளைஞன் சொன்ன பதில் மன்னனின் சந்தேகத்தினை தீர்த்தது. மன்னன் அறிவிச்சபடி ஒரு நாட்டை இளைஞனுக்கு கொடுத்தான். நாடு கிடைத்ததும் இளைஞனின் வறுமை நீங்கி அவன் குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.

கொடுத்த வாக்கை காப்பாத்துவது ஆண்களுக்கு அழகாச்சுதே, அதனால், சூனியக்காரி கிழவியை பார்க்க இளைஞன் போனான்.  கிழவியிடம், தான் வெற்றிப்பெற்றதை சொல்லி,இப்ப ஒரு நாட்டுக்கு தான் ராஜான்னு சொல்லி, அன்று நான் வாக்களித்தபடி, உனக்கு என்ன வேண்டுமென கேள். செய்ய காத்திருக்கேன் என சொன்னான். தன்னை மணக்க வேண்டுமென சூனியக்காரி கிழவி சொல்லிச்சு. இப்பத்திய ஆளுங்கன்னா ஜெர்க்காகி பேக் அடிச்சிருப்பாங்க.

ஆனா, அந்த இளைஞன் அப்படி செய்யலை. வாக்களித்தபடி அந்தக்கிழவியை மணக்க சம்மதிச்சான். உடனே, கிழவி அழகிய தேவதையாய் மாறிச்சு. அவனை மணக்கனும்னா ஒரு நிபந்தனை விதிச்சுது. அது என்னன்னா,  இருவரும் தனியாக இருக்கும்போது கிழவியாக இருந்தால், வெளியே உன்னுடன் பொது இடங்களுக்கு வரும்போது தேவதையாக இருப்பேன்.

அல்லது தனியாக இருக்கும்போது அழகிய பெண்ணாக – தேவதையாக இருந்தால், வெளியே பொது இடங்களில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன். இதில் உனது விருப்பம் என்ன? என தேவதை கேட்டது.


அந்த இளைஞன் சட்டுன்னு, “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவை நீதான் எடுக்க வேண்டும்” பதில் சொன்னான். அதற்கு அத்தேவதை, “முடிவை என்னிடமே விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்” என பதிலளித்தாள்.

இந்த கதை எதுக்கு சொல்றேன்னா, பெண்ணை அவள் இயல்போடு இருக்க விட்டா பெண்ணாய் இருப்பா. ஆளுக்காள் வளைச்சு ஒடிச்சு வளர்த்தால், அரக்கியா, தாடகியா, சூனியக்காரியாதான் இருப்பா.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.