"டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"
நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"-பெரியவா தொண்டரிடம்.
(இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.)
எடை அதிகமாகக் கூடிவிட்ட ஒரு பெண்மணி பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள். குனிந்து வந்தனம் செய்ய முடியவில்லை. வெட்கமும் பக்தியும் போட்டியிட கைகளைக் கூப்பிக்கொண்டு நின்றாள்.
"எனக்கு சர்க்கரை வியாதி. வெயிட் குறைக்கணும் என்கிறார் டாக்டர். தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போகச் சொல்கிறார் .என்னால் பத்துநிமிடம் கூட நடக்க முடியல்லே..." என்று முறையிட்டாள்.
கஷ்டமில்லாத ஒரு பரிகாரத்தை சொல்லி, பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்-என்ற ஆதங்கம் தொனித்தது.
"டாக்டர்கள் என்றாலே இப்படித்தான்! மெடிகல் புஸ்தகத்தில் என்ன எழுதியிருக்கோ ,அதை ஒப்பிப்பார்களே தவிர, நடைமுறை சாத்தியமா என்று பார்க்கமாட்டார்கள்....."
பெண்மணிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.
"ஆகா! என்ன அதிருஷ்டம்! பெரியவா இப்போ ரொம்ப சுலபமான வழியைச் சொல்லப் போகிறார்கள்.
கண்களில் ஆவல் பொங்கிற்று.
"உடம்பு நோய் இல்லாமல் இருக்கணும்- தெய்வக்ருபை வேணும்...."
பெண்மணியின் நெஞ்சு படபடத்தது.
"உன் வீட்டிக்குப் பக்கத்தில் ஏதாவது கோயில் இருக்கோ...?"
"இருக்கு..பெரிய சிவன் கோயில்..."
"நல்லதாப் போச்சு....தினம் காலையும் மாலையும் ஆறு பிரதட்சிணம் பண்ணு..தினம் நூறு அடி தூரம் துடைப்பத்தால் பெருக்கிக் கூட்டி சுத்தம் செய்.."
பெண்மணி,சரி என்று சந்தோஷத்துடன் கூறி பிரசாதம் பெற்றுச் சென்றாள்.
பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிஷ்யர், சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.
".....தப்பா சொல்லிட்டேனோ....!"
"இல்லே,டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"
"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"
இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.