Breaking News :

Thursday, January 02
.

"பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும். புரியறதா?"- மகாபெரியவா


பித்ரு தேவதைகள்,பிண்டத்தை பாரத பூமியில,பரதகண்டத்துல மட்டும்தான் வந்து வாங்கிக்கறதா   சாஸ்திரவிதி  இருக்கு.

ஒரு சமயம் பணக்காரர் ஒருத்தர் தன் குடும்பத்தோட, மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் மடத்துக்கு வந்திருந்தார். இந்தியாவுலேர்ந்து அமெரிக்கா போய் அங்கேயே செட்டில் ஆனவர் அவர். வருஷத்துக்கு ரெண்டு தரமோ மூணு தரமோ இந்தியாவுக்கு வந்துட்டுப் போவார்.

இதெல்லாம் அவர் பேசினதுலேர்ந்து தெரிந்தது. அதுக்கப்புறம் அவர் பேசினதுதான் விஷயம்,

"பெரியவா நான் வெளிநாட்டுலயே இருந்துட்டாலும் நம்ம சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் தவறாம அனுஷ்டிக்கறேன் பெத்தவாளோட ஸ்ராத்த கர்மாவை அங்கேயே பண்ணிடறேன் . அதுக்குத் தேவையான எல்லாத்தையும் இங்கேர்ந்து வரவழைச்சுடறேன்.ஒரு குறையும் வைக்கறதில்லை!" தான் சாஸ்திர சம்பிரதாயத்தை மீறாம நடந்துக்கறதை கொஞ்சம் கர்வமாக சொல்லிண்டார் அவர்.

அவர் சொன்னதைக் கேட்டு மௌனமா சிரிச்சார்  மகாபெரியவா. வந்தவரே தொடர்ந்து பேச ஆரம்பிச்சார்.

"பெரியவா,இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, வெளிநாட்டுக்குப் போயும் ஒருத்தன் இத்தனை சிரத்தையா  இருக்கான்கறதைத் தெரிஞ்சுண்டு, மத்தவாளும் இதே மாதிரி  எதையும் விடாம சிரத்தையா பண்ணணும்தான். நீங்களே சொல்லுங்கோ, நான் நினைக்கறது சரிதானே?"
சுய தம்பட்டம் அடிச்சுண்டு அவர் இப்படிப் பேசினது, அங்கே இருந்த பலருக்கும் பிடிக்கலை. இருந்தாலும் மகாபெரியவா முன்னால அசூயை எதையும் காட்டிக்கக்கூடாதுன்னு  எல்லாரும் அமைதியா இருந்தா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டுண்ட மகாபெரியவா,
"ஸ்ராத்த சாமான்லாம் பெருஞ்செலவு பண்ணி இங்கேர்ந்து  அங்கே வரவழைச்சுக்கறதா சொன்னே..சரி, பண்ணிவைக்க வைதீக பிராமணா வேணுமே, அது எப்படி..?அமைதியாகக் கேட்டார்.

"அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை பெரியவா. எங்க குடும்ப வாத்யார் இங்கே ஒருதரம் சிராத்தம் செஞ்சு வைச்சப்போ சொன்ன மந்திரமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி  வைச்சிருக்கேன். அதைப் போட்டுக் கேட்டுண்டே செஞ்சுடறேன்! இங்கே வந்து வாத்யாரை வைச்சுண்டு செஞ்சுட்டுப் போறதுக்கான நேரமும் செலவும் மிச்சம் பாருங்கோ!" சொன்னார், வந்தவர்.
"வாஸ்தவம்தான், ஆமாம்..நீ இந்தியாவுக்கு எப்போல்லாம் வருவே?" மென்மையாகக் கேட்டார்,ஆசார்யா.

"எத்தனைதரம், எப்போ வருவேன்னு சொல்ல முடியாது பெரியவா,எப்படியும் ரெண்டு மூணுதரம் பிசினஸ் விஷயமா வருவேன்.அப்புறம் நவராத்திரிக்கு கண்டிப்பா குடும்பத்தோட  வருவேன். ஏன்னா, நம்ம பாரம்பரியப் பழக்கத்தை விடமுடியாது பாருங்கோ...!

சொன்னவர்,மகாபெரியவா கேட்காமலே மேலும் சில விஷயத்தைச் சொன்னார். "நான் பணத்தை லட்சியம் பண்றதில்லை. எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல தான்  வருவேன். ஏன்னா, சாதரண  க்ளாஸ்ல வர்றவாள்ளாம் மட்டரகமா இருப்பா!"

பொறுமையாகக் கேட்டுண்டு இருந்த மகாபெரியவா பேச ஆரம்பிச்சார்,
 " நீ சொல்றதெல்லாம் உன் வரைக்கும் சரிதான். ஆனா, அதெல்லாம் வாஸ்தவத்துல சரியான்னு நினைச்சுப்பார்த்தியோ? நெறைய பணம் இருக்கிறதால,மத்தவாளை மட்டரகம்னு சொல்றே.இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போய் அங்கேயே பித்ரு கார்யம் பண்றதா சொல்றே...! ஆனா, பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமியிலே எப்படி வந்து பிண்டம் வாங்கிக்குவா?  எனக்குத் தெரிஞ்ச பித்ருக்களெல்லாம் அமாவாசை, மாச தர்ப்பணம்,மஹாளய தர்ப்பணம்,ஸ்ராத்த திதி இதுலே எல்லாம், இந்த பாரத பூமியில, பரத கண்டத்துல மட்டும் தான் வந்து வாங்கிக்கறதா சாஸ்திரவிதி இருக்கு. அது தெரியாம பாவம், நீ கடல் கடந்துபோய் எங்கேயோ இருந்துண்டு, டேப்ரெக்கார்டர்ல கேட்கறதை வைச்சுண்டு பித்ரு கார்யம் பண்ண்றதா சொல்றேஅவாள்ளாம் இங்கே வந்து பார்த்து நீ பிண்டம் தரலைன்னு நினைச்சு பட்னியோட, உன்னை சபிச்சுட்டுன்னா போயிண்டு இருப்பா?"

பெரியவா சொன்னதைக் கேட்டு பதறிப் போனார், அந்தப் பணக்காரர். "பெரியவா மன்னிகணும்...செய்யறது தப்புன்னே தெரியாம இருந்துட்டேன்..!" குரல் நடுங்க சொன்னார்.

"நவராத்திரிக்கு வர்றேன்னு சொல்ற ஒனக்கு, பித்ரு கார்யம் பண்ண அந்த திதியிலே இங்கே வர மனசில்லையே! உன் தோப்பனார்,தாயார் மேலே உண்மையா பக்தி இருந்தா இத்தனை வருஷம் பண்ணின தப்புக்கு ப்ராயச்சித்தமா உன் குடும்ப வாத்யார்கள்கிட்டே கலந்து பேசி, அவா சொல்ற திதியில பித்ரு கர்மாக்களைப் பண்ணிட்டு வா....அப்புறம் ஆசிர்வாதம் பண்றேன்...பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான்  மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"

அந்தப் பணக்காரர் அப்படியே ஆடிப்போய்ட்டார். கண்லேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது!

"தெய்வமே,என் கண்ணைத் திறாந்துட்டேள். முட்டாள்  நான் தப்பு பண்ணிட்டேன்.இப்பவே போய் எல்லாத்தையும் பூரணமா செஞ்சுட்டு, அப்புறம் உங்க சன்னதிக்கு வரேன்!"  சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டார்.

கொஞ்சநாள் கழிச்சு, குடும்பத்தோடு வந்து  பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார் அந்தப் பணக்காரர்.

"ஸ்ராத்தம்,பரிகாரம் எல்லாம் திவ்யமா பண்ணி முடிச்சியா? இப்போ என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமா உண்டு"ன்னு சொல்லி, ஒரு தாம்பாளத்துல கல்கண்டு,  பழம், வில்வம், விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சுக் குடுத்து அவா எல்லாரையும் ஆசிர்வதித்தார் மகாபெரியவா.

நன்றி- குமுதம் லைஃப்
தொகுப்பு-ஸ்ரீகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.