பொன்னுத்தாயிமகன் டவுனுல இருந்தான் அவன் சின்னப்புள்ளையா இருக்குறப்பயே அவனோட அப்பாபோயிட்டாரு. பொன்னுத்தாயிதான் அவன நாலுவீட்டுல வேலசெஞ்சி வளத்தா . எப்பயுமே தண்ணில நின்னு பாத்திரபண்டம் தேய்க்கிறது னாலயும்துணிதொவைக்கிறது வீடு கழுவுறதுன்னு தண்ணிலயே கெடக்குற துனால காலெல்லாம் சேத்துப்புண்ணா இருக்கும். வீட்டுல வந்து ராத்திரி அதுக்கெல்லாம் எண்ண போடுவா செலநேரம் அதுவுமிருக்காது கைவிரல் களும் அப்புடித்தான் புண்ணா இருக்கும் ஆனா அதெல்லாம் அவ மகன்கிட்ட காட்டிக்க மாட்டா நம்ம கஸ்டம் நம்மலோட இருக்கட்டும் புள்ளைக்கித் தெரிஞ்சா வருத்தப்படுமுன்னு சொல்லமாட்டா.
அவன கஸ்ட்டப்பட்டு சக்திக்கு முடிஞ்சவரைக்கும் படிக்கவைச்சா அவனும் சும்மாசொல்லப்படாது நல்லாவே படிச்சான் பெருசா படிக்கலன்னாலும் அவன் நேரம் அவன் படிச்சதுக்கு தக்க வேலை அதுவும் கவருமெண்டு வேலை கெடச்சிச்சி. ஆனா என்ன வேல சென்னையில கெடச்சிச்சி அவஙக ஊரு மதுரப்பக்கம் அவன் வேலைக்கிப்போனப்ப மகனப்பிரியுரமேன்னு கண்கலங்கி அனுப்பிவைச்சா. தான் வேலபாக்குற வீடுகல்ல அட்வான்ஸ் கைல கால்ல உழுந்து வாங்கி அனுப்பிவைச்சா. அவனும் சென்னைக்கிபோயி வேலையில சேந்து வேலை செஞ்சிக்கிட்டே மேலபடிச்சி ஒரு நல்ல நெலமைக்கி வந்துட்டான்.
இவ அவனுக்கு பொண்ணு பாத்தா அவ சக்திக்கேத்தமாதிரி அது எட்டாங்கிளாஸ் படிச்சிருந்துச்சு புரோக்கர்ட்ட சொல்லி போட்டோ அனுப்பிச்சா. அவன் அதப்பாத்துட்டு போன் ப்ண்ணி அம்மவத்திட்டுனான் இப்புடி ஒரு பட்டிக்காட்டுப்பொண்ண தலைல கட்ட எப்புடிமனசுவந்துச்சுன்னு அதோட அவ அவனுக்குப்பொண்ணுபாக்குறத விட்டுட்டா.
அடுத்த தடவ ஊருக்கு வந்தப்ப அவநெனச்சா மகன் நல்ல நெலமையில இருக்கான் நம்மள கூடவந்து இருக்கச்சொல்லுவான்னு ஆனா அவன் அந்தப்பேச்சே எடுக்கல சாடமாடயாப்பேசிப்பாத்தா. அவன் புடிகுடுக்கல . வாயத்தொறந்து கேட்டும்பாத்தா. அவன் அதெல்லாம் ஒனக்கு சரிப்படாது நீ வேலைக்கிப்போகவேணாம் நான் பணம் அனுப்புறேன் நீ இங்கயே இருந்துக் கன்னான். அதுக்குமேல இவளால பேசமுடியல.
அப்புறம் ஒருநா சொன்னான் கூடவேலசெய்யிற பொண்ண கலியாணம் பண்ணிக்கிட்டதா. தன்னோட கலியாணத்துக்குக்குக்கூட அம்மாவ கூப்புடனும்கேக்கனும்ன்னு அவனுக்குத்தோணலையேன்னு அவளுக்கு அழுக அழுகயாவந்துச்சு.
அவன் குடுத்த நம்பர்ல போன் பண்ணிப்பாத்தா அவன் சம்சாரம் போல இருக்கு யாருன்னு கேட்டுச்சு அவனோட அம்மான்னு சொன்னதும் அது சொல்லிச்சி யோரோ ஒரு அம்மா போன்ல உன்னக்கூப்புடுதுன்னு அவன் வந்து பேசினான் என்னா பணம் எதுவும் வேணுமான்னான் அப்ப ஒருகொழந்த அழுகுறசத்தம் கேட்டுச்சு. அது யாரு கொழந்த அழுகுதேன்னு கேட்டா
அதுக்கு அவன் சொன்னான் அதுவா என்மகந்தான் உசுறஎடுக்குறான்னான்.
இவளுக்கு சந்தோசமா இருந்துச்சு எனக்கு பேரன் பொறந்திருக்கானா சொல்லவே இல்லன்னா. அதுக்கு அவன் சொல்லி என்னா பண்ணப்போறன்னு சொல்லிட்டு சரி பணம் அனுப்புறேன்ன்னுசொல்லிட்டு போன கட் பண்ண்ணிட்டான்
இவளுக்கு ஒருபக்கம் சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம் அழுகையா வந்துச்சு. இப்புடி பேரன் பொறந்ததையும் சொல்லாம இருக்கானேன்னு மறுநா அவனுக்குப்போன போட்டா.
யப்பா ராசா என் பேரன ஒருவாட்டி நான் பாத்துட்டு வந்துறனே ஆசையா இருக்குப்பான்னா அவன் அதுக்கு சரிவான்னான். அட்ரஸ் சொல்லுப்பான்னா அவன் அதை மெசேஜ்ல அனுப்புறேன்னான் அதெல்லாம் எனக்கு படிக்கத் தெரியாதேன்னா கோயாம் பேடுல எறங்கி.
வடபழனி போற பஸ் எதுன்னு கேட்டு ஏறி வடபழனில எறங்கிட்டு போன் ப்ண்ணு வந்து கூட்டிட்டுப்போறேன்னான்
இவளுக்குசந்தோசமாயிடுச்சு இவளும் பேரனுக்கு வேண்டி குலதெய்வக்கோயில்ல போயி சாமிகும்புட்டு துண்ணூரு வாங்கி முடிஞ்சிக்கிட்டு கெளம்புனா
மறுநாகாலையில கோயாம்பேடுல எறங்கி வடபழனி பஸ்ஸ விசாரிச்சிஏறி வந்து வடபழனில எறங்கிட்டா. எறங்கிட்டு மயனுக்குப்போன் போட்டா போன் போகல என்னா பண்ணுறதுன்னுதெரியல.
பக்கத்துல இருந்த பேக்கரிகடையில பாத்தா அவங்க ஊரு ஆளுமாதிரி தெரிஞ்சிச்சு அவருக்கிட்ட விசயத்தச்சொன்னா அவரு வாங்கி போன போட்டுப்பாத்துட்டு அது சுச்சாப்புன்னு வருதேம்மான்னாரு. எந்த ஊரூ என்ன வெவரமுன்னு விசாரிச்சாரு சொன்னா
அவரு டீயும் வடையும் குடுத்துசாப்புடச் சொன்னாரு பசில வாங்கிச்சாப்புட்டா காசு குடுக்க பையத்தேடுனப்ப வேணாந்தாயி
எங்கம்மாவுக்கு குடுத்ததா நெனச்சிக்கிறேன்னாரு இவ கண்ணு கலங்குச்சு நம்மபுள்ளையமிருக்கானேன்னு அப்ப அவரு செல்போன வாங்கிப்பாத்துட்டு.
வேற எதுவும் ஒங்கபுள்ள சொன்னானான்னு கேட்டாரு. அட்ரஸ் மெசேஜ் அனுப்புறீன் னான் எனக்கு பாக்கத் தெரியலன்னா
அவன் வாங்கிப்பாத்துட்டு ஆமா இருக்குன்னு அதை ஒருபேப்பருல எழுதி அவ்ருக்குத்தெரிஞ்ச ஆட்டோக்காரரக் கூப்புட்டு இந்தம்மாவ இந்த அட்ரஸில கொண்டுபோய்விடுன்னாரு . அவனும் ஏத்திட்டுப்போயி சொன்ன அட்ரஸில எறக்கிவிட்டான்அவ காச எடுக்க அவன் சொன்னான் காசுவாங்குனா அண்ணன் கோவிச்சிக்குவாருவேணா முன்னான்.
அப்பப்பாத்தா வீடு பூட்டிக்கெடந்துச்சு இவளுக்கு அழுகையே வந்துருச்சு கண்கலங்கி வாசல்லயே ஒக்காந்துட்டா.திரும்பபோன் போட்டா போகல அதப்பாத்துக்கிட்டு இருந்த ஆட்டோக்காரரு சொன்னாரு இங்க பக்கத்துல எங்கயாவது போயிருப்பாங்கம்மா வந்துருவாகன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு நேரமாயிட்டே இருந்துச்சு அவன் வாரமாதிரி தெரியல மத்தியானமாச்சு பசியும் கெரக்கமும் அமுக்குச்சு மயங்கிட்டா.
அவள யோரோ எழுப்புறமாதிரி இருந்துச்சு கண்ண முழிச்சிப்பாத்தா மகன் நிக்கிறான்.
எப்ப வந்தன்னு கேட்டான் சொன்னா நீ வாறேன்னு போன் பண்ணலயேம்மா வாரேன்னு சொல்லிருந்தா வீட்டுல இருந்திருப்போம் அவளும் வேலைக்கிப்போறதுனால புள்ளய காப்பகத்துல விட்டுருவோம் அவங்க உள்ள இருக்காங்க வான்னு கூட்டிட்டுப்போனான் இவளுக்கும் போன் பண்ணாதது நம்ம தப்புத்தான்னு தோணுச்சு பாவம் புள்ள என்னபண்ணுவான்னு கோவமெல்லாம் போயிடுச்சு. அப்ப வன் சம்சாரம் வந்தா வாங்கம்மா இவரு எல்லாம் சொல்லிருக்காரு குளிச்சிட்டு வாங்க சாப்புடலாம்னுசொன்னா கொழந்த கட்டில்ல இருந்தான் ஆவலாத்தூக்கப்போனா மொதல்ல குளிச்சிட்டு வாங்க அப்புறம் பாக்கலாமுன்னு சொன்னான் அதுவும் சரிதான்னு குளிக்கப்போனா.
குளிச்சிட்டு வந்தவன்ன புள்ளைய மருமக குடுத்தா. அவ வாங்கிப்பாத்துட்டு கொண்டாந்த துண்ணூறப்பூசிவிட்டா
மருமக சிரிச்சா. அப்ப அவசொன்னா இவரப்போல ஒரு நல்லவரைப்பாக்க முடியாதுங்க அவரு வீட்டுல வேலசெஞ்ச ஒங்களையே இப்புடி மதிக்கிறார்ன்னா அவங்க அம்மா இருந்துருந்தா கோயிலே கட்டிருப்பாருன்னா,பாவம் சின்ன வயசுல போயிட்டாகளாம்ன்னா
இவளுக்குத்தூக்கிவாரிப்போட்டது வேலைக்காரியான்னு நெனச்சதும் அழுக பொத்துட்டு வந்துச்சு. அவன் அந்தப்பக்கம் திரும்பிகிட்டான் . அவ பேசிட்டே போனா இவளுக்கு எதுவும் காதுல விழுகல கண்ணீர் மால மாலயா ஊத்துச்சு. அப்ப மருமக சொன்னா பாருங்க நீங்க யாரோ நாங்க யாரோ ஒங்களை நான் பாத்ததுகூட இல்ல ஆனாலும் நாங்க நல்லா இருக்குறதப் பாத்து ஆனந்தக்கண்ணீர் விடுறீங்கபாருங்க ஒங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னா,
அப்ப இவ அழுதுட்டே சொன்னா ஆமா நான் வேலக்காரிதான் நான் வேலசெஞ்ச பத்துவீட்டுல இவரு வீடும் ஒண்ணு அத ஞாவகம் வச்சி என்ன தன்னோட மகனப்பாத்து ஆசீர்வாதம் பண்ண வரச்சொன்னரு வந்தேன் பாத்துட்டேன் போயிட்டு வாறேன்னா. சாப்புடுங்கம்மா ன்னா மருமக அப்ப இவ சொன்னா கொழந்தயப்பாத்தவன்னே மனசும் வயிறும் நெறஞ்சிடுச்சு. என்னோட மகனுக்குகாக விரதமிருக்கிறேன் இன்னிக்கி சாப்புடமாட்டேன்மான்னா கண்ணுல நீர் வழிய அப்பமருமக சொன்னா பாவம் ஒங்களுக்கு ஒங்க மகன்மேல எம்புட்டுப்பிரியம் அவரு குடுத்துவைச்சவருன்னா. ஆமாம்மா அவரு குடுத்துவைச்சவருதான் ஒன்னபோல நல்ல பொண்டாட்டிதான் அவனுக்கும்ன்னா அவன் இந்தப்பக்கம் திரும்பவே இல்ல.
சரிம்மா நல்லா இருங்க நான் கெளம்புறேன்னா. அப்ப மருமக கால்ல விழுந்து ஆசீர்வாதம் பண்ணுங்கன்னா இவகண்ணுல தண்ணி வந்துச்சு குலதெயவம் கோயில் துண்ணூறப்பூசி விட்டா கொஞ்சம் அவ கைல குடுத்து ஒன் வீட்டுக்காரருக்கும் குடும்மா சாமி சக்தி வாயந்ததுன்னா.
மருமக ஏங்க இவங்களைக்கொண்டுபோய் பஸ்சேத்தி விட்டுட்டு வாங்கன்னா இல்ல நானே போய்க்கிறேன்ன்னா இவ . இல்ல கொஞ்சம் தூரம் கொண்டுபோய் விடுவாரு இவரு யாரும் கஸ்ட்டப்பட்டா இவருக்குப்புடிக்காதுன்னா
அவனும் வண்டிய எடுத்துட்டு வந்து அவள ஏத்திக்கிட்டு போயி பஸ்ட்டாண்டுல விட்டான். எறக்கிவிட்டுட்டு பர்ஸ எடுத்தான் காசு குடுக்க அப்ப அவ சொன்னா வேணாம்பா ஒன்மகனுக்கு ஏதாவது வாங்கிக்குடு இந்த வேலக்காரி குடுத்ததான்னா. அவன் ஒண்ணும் சொல்லல விருட்டுன்னு போயிட்டான்.
அப்ப பேக்கரிக்கடைவாசல்லதான் இருந்தா அவரு சொன்னாரு எல்லாம் நான் பாத்துட்டுத்தான் இருந்தேன் இவன மாதிரி ஆளுக நாசமாப்போவானுக மனுசன இவன்னாரு.
அப்ப அவசொன்னா வேணாஞ்சாமி அவனப்பழிக்காதீங்க அவன் மேல தப்பில்ல அவன இப்புடி வளத்த எம்மேலதான் தப்பு இருக்கு. அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் யாரோட சாபம் வேணுமானாலும் வாங்கலாம் பெத்த அம்மாவோட சாபம் அவனுக்கு வேணாமுன்னா. அதகேட்ட அவரு அம்மா டீசாப்புடுறீங்களான்னாரு அப்ப இவசொன்ன குடுமக்கா குடு ஒன்னப்பெத்தவ நல்ல மகராசி நீயும் நல்லா இருக்கனுமுன்னா, அவரு கண்ணுல தண்ணி வந்தூச்சு எங்கம்மா நேருல வந்தமாதிரி இருக்குன்னா
கடைக்கி உள்ள பாத்தா அவ அவங்க அம்மா போட்டோ இருந்துச்சு மால போட்டு அவரு சொன்னாரு ஆமா அது எங்கம்மாதான் அவங்கபேரத்தான் கடைக்கி வைச்சிருக் கேன்னாரு கண்ணீர்தளும்ப.
நன்றி; கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்