Breaking News :

Monday, May 05
.

ரம்பையா ? ஊர்வசியா ? - விக்கிரமாதித்தன்


இப்படி விக்கிரமாதித்தன் ஆட்சி செய்யும் போது தேவர் உலகத்தில் நாட்டியக் கலையில் வல்லவர்களாக ரம்பையும் ஊர்வசியும் இருந்தார்கள் . யார் மிகச் சிறப்பாக நாட்டியம் ஆடுபவர் என்பது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது .

இந்திரனிடம் வந்த அவர்கள், எங்கள் இருவரில் யார் நன்றாக நாட்டியம் ஆடுபவர் என்பதை முடிவு செய்ய வேண்டும் . வெற்றி பெறுகின்றவருக்கு பாரிஜாத மாலை அணிவித்து சிறப்பிக்க வேண்டும் என்றார்கள் .

இந்திரனும் ஒப்புக் கொண்டான் . நாட்டியப் போட்டி தொடங்கியது . இருவரும் பம்பரம் போன்று சுழன்று இலக்கண முறை பிறழாமல் பலவித நாட்டியங்களை ஆடி முடித்தார்கள் . அவையினர் எல்லோரும் தங்களை மறந்து பார்த்து கொண்டு இருந்தனர் .

மகிழ்ந்த இந்திரன் , அருமையான நாட்டியப் போட்டி . இருவருமே ஈடு இணையில்லாமல் ஆடினீர்கள் . யார் வெற்றி பெற்றவர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை . அவையோர்களே உங்களால் முடிகிறதா ? என்று கேட்டான் .

அங்கிருந்த நாரதர் எழுந்தார் . இந்திரனே ! ரம்பையும் ஊர்வசியும் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் . நாட்டியக் கலையை நுணுக்கமாக அறிந்தவர் தான் இந்த போட்டியில் தீர்ப்பு கூறமுடியும் .

அப்படி சொல்லக் கூடிய கூர்மையான அறிவுடையவன் உஜ்ஜயினியை ஆளும் அரசன் விக்கிரமாதித்தனே . அவன் சகல கலைகளிலும் வல்லவன் . அவனை இங்கே அழைத்தால் இருவரில் யார் வெற்றி பெற்றவர் என்று சொல்வான் " என்றார் .

தன் தேரோட்டி மாதலியை அழைத்தான் இந்திரன் . நீ விரைந்து உஜ்ஜயினி நகரம் செல். அரசர் விக்கிரமாதித்தனை நாம் அழைத்து வரச் சொன்னதாக சொல்லி அழைத்து வா " என்றான் .

தேவர் உலகத்திற்கு ஒரு மனிதனை அழைத்து வருவதா என்று தயங்கி நின்றான் மாதலி .
    மாதலி! விக்கிரமாதித்தனை மனிதன் என்று எண்ணாதே .‌ உடனே சென்று அழைத்து வா என்றார் நாரதர்

இந்திரனுடைய பொன் தேரில் ஏறிய மாதலி வான் வழியாக பறந்து உஜ்ஜயினி நகரை அடைந்தான் . விக்கிரமாதித்தனை வணங்கிய அவன்  * இந்திரன் தங்களை தேவர் உலகத்திற்கு அழைத்து வரச் சொன்னார் . தேர் தயாராக உள்ளது " என்றான் .

அருகிலிருந்த பட்டியின் முகத்தை பார்த்தான் விக்கிரமாதித்தன் . குறிப்பு உணர்ந்த பட்டி * அரசே ! தேவர் உலகம் சென்று வாருங்கள் . உங்கள் புகழ் மேலும் சிறக்கும் " என்றான் .

காளி கோயிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அம்மனை வணங்கி விட்டு புறப்பட்டான் .

தேருடன் மாதலி காத்திருந்தான் .  தேரில் வலது காலை எடுத்து வைத்தான் விக்கிரமாதித்தன் . இடது காலை எடுத்து வைக்கவில்லை .

மானுடன் ஒருவன் தேவர் உலகம் வரக்கூடாது . கீழே விழுந்து இறந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் தேரை மிகுந்த வேகத்தில் வானில் செலுத்தினான் மாதலி .

வீரதீர பராக்கிரமம் நிறைந்த விக்கிரமாதித்தன் தன் வலது கால் கட்டை விரலை தேரில் அழுத்திக் கொண்டான் . தேரில் ஆணி அடித்தாற் போன்று அப்படியே ஒட்டிக் கொண்டான் .

விக்கிரமாதித்தனின் ஆற்றலை கண்டு நடுங்கிய மாதலி , * என்னை மன்னியுங்கள்  . அறியாமையால் பிழை செய்து விட்டேன் என்று விக்கிரமாதித்தனை தேரின் பீடத்தில் அமர வைத்தான் . தேர் தேவர் உலகை அடைந்தது .

தன்னை வணங்கிய விக்கிரமாதித்தனை வரவேற்றான் இந்திரன் . தனக்கு இணையான இன்னொரு இருக்கையில் அவனை அமர வைத்தான் .

 விக்கிரமாதித்தனே ! ரம்பைக்கும் ஊர்வசிக்கும் இங்கே நாட்டியப் போட்டி நடந்தது . இருவரில் யார் நாட்டியத்தில் சிறந்தவர் என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை . அதற்காகவே உன்னை இங்கு வரவழைத்தேன் " என்றான் இந்திரன் .

சிந்தனையில் ஆழ்ந்த விக்கிரமாதித்தன்   * நாளை அவர்கள் இருவரையும் இங்கே நாட்டியம் ஆடச் சொல்லுங்கள் . யார் சிறந்தவர் என்பதை கண்டு பிடிக்கிறேன் " என்றான் .

அங்கிருந்த சோலைக்குள் புகுந்த அவன் , முல்லை , இருவாட்சி , செண்பகம் போன்ற மலர்களை பறித்தான் அவற்றை இரண்டு பூச்செண்டுகளாக கட்டினான் . அதற்குள் தேள் வண்டு ஆகியவற்றை வைத்தான் .

மறுநாள் தேவர் அவை கூடியது . இசைக் கருவிகள் இன்னிசை எழுப்ப ரம்பையும் ஊர்வசியும் நாட்டியம் ஆடத் தொடங்கினார்கள் . இருவரும் வலமும் இடமுமாக சுழன்று சுழன்று அழகாக நாட்டியம் ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

இருவரில் யார் சிறப்பாக நாட்டியம் ஆடுகின்றவர் என்பதை விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்க முடியவில்லை .

நாட்டியத்தை நிறுத்திய அவன் ரம்பையையும் ஊர்வசியையும் தன் அருகில் அழைத்தான் . இருவரிடமும் பூச்செண்டை தந்தான் . * இந்த பூச்செண்டை பிடித்தபடி நாட்டியம் ஆடுங்கள் " என்றான் .

இருவரும் பூச்செண்டை கையில் பிடித்தபடி நாட்டியம் ஆடத் தொடங்கினார்கள் . நீண்ட நேரம் நாட்டியம் நடந்தது .

திடீரென்று ரம்பை பூச்செண்டை கீழே எறிந்தாள் . தாளம் தப்பி ஆடத் தொடங்கினாள் . ஊர்வசியோ இலக்கண முறை பிறழாமல் ஆடிக் கொண்டிருந்தாள் .

நாட்டியத்தை நிறுத்திய அவன் * ஊர்வசியே நாட்டியத்தில் சிறந்தவள் " என்றான் .

எதனால் அப்படி தீர்ப்பு வழங்கினாயா ? என்று வியப்புடன் கேட்டான் இந்திரன் .

அவையினர் முன் இரண்டு பூச்செண்டுகளையும் பிரித்து காட்டினான் அவன் . அதற்குள் தேளும் வண்டுகளும் இருந்தன .

நாட்டியம் ஆடுபவர் மென்மையாக ஆட வேண்டும் என்று நாட்டிய இலக்கணம் கூறுகிறது . அப்படி ஆடியவள் ஊர்வசி தான் .

ரம்பை இந்த பூச்செண்டை முரட்டுத்தனமாக பிடித்துக்கொண்டு ஆடினாள் . அதனால் இதற்குள் இருந்த தேள் வெளியே வந்து அவளை கொட்டியது . அவளும் தாளம் தப்பி ஆடினாள் " என்று நடந்ததை விளக்கினான் அவன் .

மகிழ்ச்சி அடைந்த இந்திரன் * விக்கிரமாதித்தனே ! உன் அறிவுக் கூர்மையை மெச்சினேன் . கைலாயத்தில் இருந்த சிம்மாசனம் ஒன்றை சிவபெருமான் எனக்கு பரிசாக அளித்தார் .

முப்பத்திரண்டு பதுமைகளை உடைய அழகான சிம்மாசனம் அது . என் அன்பு பரிசாக அதை உனக்கு வழங்குகிறேன் . அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து நீ ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்ய வரமும் தந்தேன் " என்றான் .

இந்திரனை வணங்கி விடை பெற்றான் விக்கிரமாதித்தன் . விக்கிரமாதித்தனையும் முப்பத்திரண்டு பதுமைகள் உடைய சிம்மாசனத்தையும் தேரில் ஏற்றிக் கொண்டு உஜ்ஜயினி வந்து சேர்ந்தான் மாதலி .

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub