Breaking News :

Friday, April 11
.

சலவைக்குறி - சிறுகதை


அந்த ஊரில பொன்னம்மாதான் சலவைத்தொழில் செய்யிறவங்கள்ல எல்லாருக்கும் பிடிச்சவங்க. நாளைஞ்சு பேர் அந்ததொழில்ல இருந்தாலும் அவளுக்குத் தனி மவுசுதான்.  

துணிகளை எண்ணி அதை சலவைக்கணக்கு நோட்டில எழுதிக்கிட்டு அப்புறம் மூட்டையா கட்டி எடுத்துட்டுப்போய் அதுல சலவைக் குறிபோட்டு  ரகம் பிரிச்சி ஒவர் மண்ண போட்டு பெரிய தாழில வெள்ளாவி வைச்சி அப்புறம் அதைக்கழுதைமேல ஏத்தி கொண்டுபோய் கம்மாயில போட்டுத் தொவைச்சி காயப்போட்டு அப்புறம் அதை திரும்ப கழுதையில ஏத்தியாந்து  இஸ்த்திரி போட்டு திரும்ப வீடு வாரியா பிரிச்சி அடுக்கிக்கொண்டாந்து நல்ல வாசனையோட வீடு வீடாக்குடுத்துட்டு அதுக்கு காசோ இல்ல வருசத்துக்கு நெல்லோ இல்ல அன்னன்னக்கி அவங்க குடுக்குற கஞ்சி கூழோ அதை வாங்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தவதான் அவ
மீனாச்சியம்மாவுக்கும் அவளுக்கும் அப்புடி ஒரு நட்பு. அப்ப அப்ப பொன்னம்மா சொல்றமாதிரி அம்மா குடுக்குற கஞ்சிக்கும் பழைய கொழம்புக்கும் பத்து தலை மொறைக்கி துணி தொவைக்கலாம். இதுபோக நல்லது கெட்டதுக்குத் தணியா எடுத்துக்குடுக்குற பொடவைய ஆசையா வாங்கிக்கட்டிக்குவா. அப்ப அப்ப செலவுக்குக்காசு வாங்கிட்டு அதை  சலவைக்கணக்குல கழிச்சிக்க சொல்லுவா

மீனாச்சியம்மாபடிச்சதோ அஞ்சாப்பு. அத வைச்சிக் கிட்டு சலவை நோட்டில பவாடை 5 சீலை 10  சாட்டை 8 வெட்டி 6 ந்னு தப்பும் தவறுமா அம்மா எழுதியிருந்தாலும் வாசிக்கும் போது சரியா வாசிக்கும் . மீனாச்சியம்மாஎதுவுமே படிக்காக கணக்கு வைச்சி சலவைக்குறி மூலமா அடையாளம் வைச்சி ( அது சோழர் காலக் கல் வெட்டு போல இருக்கும்)  துணிமாறாமக் கொண்டாந்து குடுக்குறது பொன்னம்மா சாமார்த்தியம்.

காலமாத்தத்தில பலபேர் வாசிங்மிசினுக்கு தாவிட்டு தேய்க்கிறது மாத்திரம் பொன்னம்மாகிட்ட வர கழுதைக்கும் வெள்ளாவிப்பானைக்கும் சலவைக்குறிக்கும் வேலை இல்லாமப்போச்சு. அதுமட்டுமா அவளுக்கு எல்லார் கூட இருந்த அந்த குடும்ப நெருக்கம் கொறைஞ்சு போச்சு... எல்லாம் காசுக்காகன்னு ஆயிப்போச்சு.

ஆனா  மீனாச்சியம்மாமாத்திரம் அந்த வாசிங்மிசின் வாங்க ஒத்துக்கல. அம்ம பொன்னம்மாவும் நானுமிருக்குறவரை அவதான் துணி எடுப்பா தொவைப்பான்னு தீர்மானமா சொல்லிட்டாக. அதேபோல பொன்னம்மாவும் அம்மா கிட்ட மாத்திரம் அதைத்தொடர்ந்துச்சு. மத்தவங்க செலர் அதுமாதிரி எங்க வீட்டுலயும் துணி எடுத்துட்டுபோம்மான்னு சொன்னப்ப அதை முடியாதுன்னு தீர்மானமா சொல்லிடுச்சு பொன்னம்மா.

பொன்னம்மா பிள்ளைகளும் அவகிட்ட ஏன் அங்க மட்டும் எடுக்கிற நமக்கு இனிமே அந்த தொழில் வேணாம். எங்களுக்கு கஸ்ட்டமா இருக்குக்குன்னு சொன்னப்ப பொன்னம்மா சொல்லிடுச்சு மக்கா நாம பசியும் பட்டிணியுமா கெடந்தப்ப வயித்துக்கு கஞ்சி ஊத்துனது அந்தத் தாயிதான். அந்த விசுவாசம் உங்களுக்கு இல்லாட்டினாலும் எனக்கு இருக்குது . நான் உசிறோட இருக்குறவரை நான் அந்தத் தாயிக்கு செய்யிவேன் எனக்கப்புறம் ஒங்கவிருப்பம்னு சொல்லிட்டு அதை தொடர்ந்துச்சு.

திடீருன்னு ஒருவாரமா பொன்னம்மாவக் காணாம். அம்மா ஆளுககிட்ட விசாரிச்சிச்சி அவளுக்கு கீழவிழுந்ததுல கால்ல அடிபட்டுக் கட்டுப்போட்டு படுத்துருக்காம்னு கேள்விப் பட்டு நேரயே விசாரிக்கப்போயிடுச்சு . மீனாச்சியம்மா பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு  போய் பாத்து ஆறுதல் சொல்லிட்டு கொஞ்சக்காசும் செலவுக்குக்குடுத்துட்டு வந்துச்சு. பொன்னம்மா வோட பிள்ளைக கூட இல்ல. அதுனால அப்ப அப்ப பக்கத்துல இருந்த ஒரு பிள்ளைக்கிட்ட கஞ்சி குடுத்து விட்டுச்சு அம்மா

கொஞ்சநாள்ல சரியாகி பொன்னம்மா நொண்டி நொண்டி நடந்துக்கிட்டு மீனாச்சியம்மா வீட்டுக்கு வந்துச்சு. தாயி எப்புடி இந்தக்கடனை அடைக்கப்போறம்னு கண்ணீர் விட்டுச்சு.அப்ப  மீனாச்சியம்மா சொல்லிச்சி மனசனுக்கு மனசன் ஒதவுறதுக்கு கடன்ற பேரெல்லாம் கெடையாது அது ஒரு மனசு அம்புட்டுத்தேன்னு சொல்லிசிரிச்சது.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழைய நெலமைக்குத்திரும்பி மறுபடி துணி எடுத்துட்டுப்போக ஆரம்பிச்சா பொன்னம்மா.இப்ப மீனாச்சியம்மாகு ஒடம்பு முடியாமப்போயிடுச்சு. படுத்த படுக்கை ஆயிருச்சி. தினம் மூத்திரம் போறது எல்லாம் படுக்கையிலன்னு ஆயிப்போச்சு.  மீனாச்சியம்மாவோட மகன் அதைப்பாக்க ஒரு அம்மாவ சம்பளத்துக்கு வைச்சான். ஆனா மூத்திரத்துல நனைஞ்ச துணிய என்னா பண்ணுறதுன்னு தெரியல.

அப்ப பொன்னம்மா வந்து பாத்துப்புட்டு சொன்னா  அய்யா நான் எடுத்துட்டுப்போய் அலசிக்கொண்டாருறேன்னு சொல்லி தினம் எடுத்துட்டுப்போய் அலசி தொவச்சி தேய்ச்சி கொண்டாந்து குடுத்தா. அதைப்பாத்துட்டு மீனாச்சியம்மாக்குக் கண்கலங்கிடுச்சு. பெத்த புள்ளைக தொட அருவருக்குற மூத்திரத்துணிகளை நீ அலசுறீயே இதுக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு அழுதுச்சு. அப்ப பொன்னம்மா சொல்லிச்சி எங்க ஆத்தா இப்புடி இருந்தா நான் பாக்க மாட்டனா நு சொல்லிடுச்சு

நாளுக்கு நாள்  மீனாச்சியம்மாஒடம்பு மோசமாயிடுச்சு. ஒன்னு ரெண்டு எல்லாமே பெட்டுலன்னு ஆயிப்போக  பொன்னம்மாவுக்கு வேலை சொமை கூடிப்போச்சு. அப்ப மீனாச்சியம்மாவோட மகன் சொன்னான் எங்களுக்கே கஸ்ட்டமா இருக்கு. அதுனால கடையில இதுக்குன்னு பேடு விக்கிது அதை வாங்கி மாட்டிவிட்டுருறோம். இனிமே நீ அதை தொவைக்க வேண்டிய அவசியமில்லன்னு சொன்னான்.

அதுக்கு பொன்னம்மா சொன்னா அம்மா வோட துணிமணி குடுங்க தெனமும் போடுற அந்த கெவுனக்குடுங்க தொவைச்சி கொண்டாருறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போய் தொவைச்சிக் கொண்டாந்து குடுத்தா.

ஒருநா பொன்னம்மா வை  மீனாச்சியம்மா கூப்புட்டுச்சு எந்த சென்மத்துல புண்ணியம் செஞ்சனோ என்ன மகமாதிரி நெனச்சி எல்லாம் பண்ணுற எனக்குப்புடிச்ச சேலை ஒன்னு இருக்கு அதை நீ தொவைச்சி கொண்டாந்து மகன் கிட்ட குடுத்துறு. சீக்கிரமே நான் ஆருக்கும் தொந்தர வில்லாமப்போகப்போறேன்.  எனக்கு எல்லாரும் செத்தபின்னாடி சேலை கொண்டாந்து போடுவாக. ஆனா கடைசில என்ன எரிக்கும்போது  நீ சலவை பண்ணிக் குடுத்த எனக்குப்புடிச்சமான அந்த சேலையத் தான் எனக்குப்போட்டுவிடனும்னு கண்ணீ ரோட சொல்லிச்சி . அதை மகன் கிட்டயும் சொல்லிருச்சு.

அதேமாதிரி அந்த மஞ்சள் சேலைய வாங்கிட்டுப்போய் நல்லா தொவச்சி இஸ்திரி எல்லாம் போட்டுக்கொண்டாந்து குடுத்தா பொன்னம்மா. அவ கொண்டாந்து குடுத்த மறுநாள்  மீனாச்சியம்மாகண்ண மூடிருச்சு. சொன்னது மாதிரி எல்லாரும் சேலை வாங்கியாந்து போட்டாக.  கடைசியா எல்லாச்சேலையும் எடுத்துட்டு அந்த மஞ்சச்சேலைய கடைசியா போத்துனாங்க அம்மாவுக்கு. அதைப் பாத்துட்டு ஒரு ஓரத்துல நின்னு பொன்னம்மா குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டு இருந்தா.

அப்ப அம்மாவோட மகன் அவளைக்கூப்புட்டு ஒரு பட்டுசேலைய குடுத்தான் அம்மா குடுக்கச்சொன்னதா. அதைப்பாத்துட்டு அம்மாவோட மொகத்தப்பாத்துட்டு பொன்னம்மா தாங்க முடியாம அழுதா... அம்மாவத்தூக்கிட்டுப்போகும் போது அந்தசேலையில முந்தானையில சலவைக்குறி தெரிஞ்சது.... அது X மார்க். போட்டு கண்கள் படம் போட்டுருந்துச்சு.

அந்த X மார்க ரயில்ல கடைசிப்பெட்டில போட்டுருக்குமே இதுதான் கடைசின்னு அதை நாவகப்படுத்துச்சு.... அந்தப்படத்துல இருந்த கண்ணுல இருந்து எப்பயோ பட்ட ஒரு துளி கண்ணீர் சொட்டுச்சு அதைப்பாத்துட்டு பொன்னம்மா வாயப்பொத்தி அழுதா கண்ணீரோட.... அப்ப தானே பேசிக்கிட்டா... எல்லாம் முடிஞ்சி போச்சி இனிமே எனக்குன்னு ஒருத்தருமில்லன்னு பொலம்பிக்கிட்டே வெறிச்சிப்பாத்தா...... தூரத்துல அம்மா போய்கிட்டு இருந்தா.... திரும்பாத எடத்துக்கு...

நன்றி அ.முத்துவிஜயன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.