பொன்னம்மா. மஞ்சள் பூசிய முகத்தில் கண்கள்,மூக்கை விட நெற்றியில் வைத்திருக்கும் குங்கும பொட்டு பெரிதாக இருக்கும். நாலைந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்து,வீடு பெருக்கி சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்துபவள். வீட்டு வேலை தானே செய்கிறோம் என்று கசங்கிய புடவையும், கலைந்த வாராமல் விட்ட தலைமுடியுமாக. இருக்க மாட்டாள் சாதாரண புடவையை தோய்த்து சுத்தமாக உடுத்தி தலையில் சிறிது பூ இல்லாமல் வேலைக்கு போக மாட்டாள்.
இரண்டு பெண்களை ரொம்ப கஷ்டப்பட்டு தன்னால் முடிந்த அளவு கல்யாணம் செய்து பொறுப்பை முடித்தாள்.
பொன்னம்மாவின் கணவர் என்ற கேரக்டர் பெயர் ஆறுமுகம்.நல்ல மனிதன் , அமைதியான குணம், அதிர்ந்து பேசாத சுபாவம். ஆட்டோ ஒட்டி. குடும்பத்தை நடத்தி வந்தவனுக்கு ஐந்து வருடங்கள் முன்பு ஏற்பட்ட விபத்தால் காலும், கையும் செயலற்று போனது.
அது வரை பொன்னம்மா கணவன் கொண்டு வரும் குறைந்த வருமானத்தில் ஏதோ சிக்கனமாக குடும்பத்தை தள்ள முடிந்தது.தீடிரென வாழ்க்கை அந்தரத்தில் ஊசாலாடியது.
அது வரை வீட்டில் இருந்தபடியே. பூக்கட்டி கொடுக்கும் வேலையை செய்தவள் இனி இந்த வருமானத்தில் காலம் தள்ள முடியாது என்று முடிவெடுத்து வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.
ஆறுமுகத்திற்கு மனைவியை பார்க்க கஷ்டமாக இருக்கும் வீட்டிலும் தனது தேவைகளை கவனித்து விட்டு வேலைக்கு ஒடும் அவளை நினைத்து தனியாக இருக்கும் போது வருத்தப்படுவான்.தன் இயலாமையை நினைத்து எதற்கும் லாயக்கு இல்லாமல் ஆகி விட்டோமே என்று மனம் வெறுத்தவனை பொன்னம்மா சமாதானம் செய்து தேற்றுவாள்
இத்தனை வருசமா என்னை ஒக்கார வச்சு சாப்பாடு போட்டே இப்போ கடவுள் எனக்கு ஒரு சந்தர்ப்பம் தந்துருக்கார் உன்னை ஒக்கார வச்சு சாப்பாடு போடுன்னு .
அன்றும் அவசர அவசரமாக வேலைக்கு ஒடிக் கொண்டு இருந்தவள் வழியில் இருக்கும் முத்துமாரி அம்மனுக்கு வெளியே இருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஒடுவாள்.அன்று கல்யாணம் ஆன நாள் என்பதை காலண்டர் கிழிக்கும் போது பார்த்து விட்டு ஒரு வினாடி சந்தோசம் கொண்டு விட்டு வழக்கமான வேலைக்கு கிளம்பி விட்டாள்.
நடந்து வரும்போது கணவனை பற்றியும் கல்யாணம் ஆன நாளை பற்றிய நினைவுகளை அசை போட்டுக் கொண்டு நல்ல மனுசன் பொடவை ,நகை இதெல்லாம் வாங்கி குடுக்க முடியலை என்றாலும் ஒரு முழம் பூ ஏதோ ஒரு இனிப்பு பண்டம் இல்லாம வீட்டுக்கு வரமாட்டாரு மனுசன்.
நினைவுகளை ஒரு குரல் கலைத்தது அம்மா கொஞ்சம் நில்லுங்க என்று கோவில் வாசலில் இளம் தம்பதிகள் நின்று கையில் தட்டில் ஒரு புடவை,பூ, பழம் அம்மா இன்னிக்கு எங்களுக்கு கல்யாண நாள் உறவுன்னு சொல்லிக்க எங்க இரண்டு பேருக்கும் யாரும் இல்லை.வருசா வருசம் இந்த கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வெளியே வரும் போது யார் எதிரில் வந்தாலும் அவங்களுக்கு புடவை வச்சு கொடுப்பது வழக்கம்.இந்தாங்க வாங்கிக் கங்க மா.
பொன்னமாவுக்கு ஒன்னும் புரியல ஏதோ நம்மை பார்த்தவுடன் அவங்களுக்கு குடுங்கன்னு நெனைப்பு வாங்கி கொண்டு அவர்களை மனதார வாழ்த்தி விட்டு கணவனை மனதில் நினைத்துக் கொண்டே தட்டில் இருந்த பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு எதிரில் உள்ள கோவில் சுவற்றில் இருக்கும் அம்பாளை பார்த்து கை கூப்பி வணங்கி என்னிக்கும் என்னை இப்படியே வை ஆத்தா என்று வேண்டிக் கொண்டு நடந்தாள்.