Breaking News :

Tuesday, April 15
.

ஆன்மீக கதை : மாயை


மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது.

இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் பற்றிய கதையை பார்ப்போம்.

ஒரு முறை மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார். நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை.

’பரந்தாமா... என்ன இது! நான் பொறி, புலன்களையும், ஆசை, கோபம் போன்ற மாயைகளை வென்றவன்; அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, லட்சுமிதேவி ஏன் வெட்கப்பட்டு மறைய வேண்டும்...’ என்றார்.

நாரதரின் கர்வம் கண்டு, நாராயணன் சிரித்தபடியே, ’நாரதா... மாயையை, யாராலும் வெல்ல முடியாது; வென்றவர்கள், இப்படி வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.

உருவமில்லாத காலமும், மாயைக்கு உருவமாக இருக்கிறது. காலமும், மாயையும் சேர்ந்து செய்யும் விளையாட்டை, அறியவோ, வெல்லவோ முடியாது...’ என்றார்.

நாரதர் விடவில்லை. ’மாயையைப் பற்றி, ஆழமாக அறிய ஆசைப்படுகிறேன்;  மாயையை எனக்குக் காட்டுங்கள்...’ என்றார்.

’சரி, வா...’ என்று கூறி, நாரதரை ஓர் அழகான குளத்திற்கு அழைத்துச் சென்ற மகாவிஷ்ணு, ’புருஷ தீர்த்தம் எனும் குளத்தில் நீராடி விட்டு வா...’ என்றார்.

அதன்படியே, குளித்து, கரையேறிய போது, பெண்ணாக உருமாறியிருந்தார் நாரதர்.

பெண்ணாக மாறியிருந்த நாரதரை, காலத்வஜன் என்ற மன்னன், மணந்து கொண்டான்.

நாரதருக்கு பழைய நினைவுகள் ஏதுவும் நினைவில் இல்லை. இத்தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு வீரவர்மன் என்று பெயர் சூட்டினர். அப்படியே, 12 பிள்ளைகள் பிறக்க, பேரன், பேத்திகள் என, குடும்பம் பெரிதானது.

அரச போகத்துடன், இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தார் நாரதர்.

திடீரென்று போர் மூண்டது; கணவன், பிள்ளைகள், பேரன்கள் என, அனைவரும் மடிந்தனர்.

அப்போது, மகாவிஷ்ணு கிழ வேதியராக வந்து, ’பெண்ணே... இறந்தவர்களுக்கான கர்மாவைச் செய்ய வேண்டும்; அதற்காக, குளத்தில் மூழ்கி எழ வேண்டும்...’ என்று கூறி, பெண்ணாக இருந்த நாரதரை அழைத்துக் கொண்டு, புருஷ தீர்த்தம் எனும் தடாகத்திற்குச் சென்றார்.

அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தவுடன், பழைய உருவத்திற்கு மாறியிருந்தார் நாரதர்.

எதிரில் இருந்த கிழவேதியர் மறைந்து, அங்கே மகாவிஷ்ணு இருந்தார்.

’நாரதா... மாயை குறித்து இப்போது அறிந்து கொண்டாயா...’ என்றார்.

வேத, வேதாந்தங்கள் அறிந்து, பொறி, புலன்களை வென்று, ஆசை, கோபம், மாயைகளை அடக்கியதாகப் பெருமை பாராட்டிய நாரதர், வாய் மூடி, மகா விஷ்ணுவை பின் தொடர்ந்தார்.

உயிர்களின் தோற்றமே மாயை எனும், பிம்பங்களால் ஆனாது; இதில், அனைத்தையும் அறிந்து விட்டோம் என்று நமக்குள் எழும் ஆணவம் கூட, மாயை தான் என்பதை, அறிந்து தெளிய வேண்டும்.

அனைத்தும் மாயையின் சொரூபம் என்பது தெரிந்து விட்டால், நம்மிடம் இருக்கும், ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, சக மனிதரை நேசிக்கும் பண்பு நமக்குள் ஏற்படும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.