கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது.
"இப்படியே மானத்தைப் பாத்துக்கிட்டிருந்தீங்கன்னா தலையே மேல திரும்பிடப் போவுது!" என்று அவன் மனைவி அன்னம் சில சமயம் சொன்னாலும் அவனது கவலையில் அவளுக்கும் பங்கு உண்டு. மழை பெய்யாதது அவளையும்தானே பாதித்திருக்கிறது!
"டி வியில மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா?" என்றான் கோவிந்தன், என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.
"சொன்னாங்க. பம்பாயில கொட்டு கொட்டுன்னு கொட்டுதாம். ஆனா நம்ம ஊருக்கு வர இருந்த புயல் ஆந்திராவுக்குப் போயிடுச்சாம்!" என்றாள் அன்னம் ஆற்றாமையுடன்.
மழை பொய்ப்பது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டு. விவசாயத்தையே நம்பி இருக்கும் அவனைப் போன்றவர்களுக்கு வானம் பொய்த்து விட்டால் வாழ்க்கையே இல்லையே!
"சாப்பிட வாங்க" என்று மனைவி அழைத்தபோது கோவிந்தனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தன் வயலில் தானே உழுது, பயிர் செய்து, அறுவடை செய்த நெல்லில் பெரும்பகுதியை விற்று விட்டு, தனக்கென்று வைத்துக்கொண்ட நெல்லைக் குதிரில் சேமித்து அவ்வப்போது அரிசி மில்லில் அரைத்து அந்த அரிசியில் உண்ட காலம் போய், டவுனுக்குப் போய் அரிசிக்கடையில் அரிசி வாங்கி, பேருந்தில் ஊருக்குக் கொண்டு வந்து அந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிடும் கொடுமை!
அவன் வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அன்னம் சொன்னாள் "உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? நெலத்தைத்தான் ரியல் எஸ்டேட்காரங்க நல்ல வெலைக்குக் கேக்கிறாங்களே? பேசாம நெலத்தை வித்துட்டுப் பணத்தை பாங்கில போட்டுட்டு வர வட்டியில நம்ம ரெண்டு பேரும் காலத்தை ஓட்ட முடியாதா? பையன் வேற கொஞ்சம் பணம் அனுப்பறான்."
"உழவன் நெலத்தை வித்துட்டு வட்டிப் பணத்துல சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சா உலகம் என்னத்துக்கு ஆகும்?"
"ஆமாம்! நீங்க ஒத்தர்தான் உழவரா? நம்ம ஊரிலேயே வெவசாயம் பண்ணறவங்க எவ்வளவோ பேரு நெலத்தை வித்துட்டு நிம்மதியா இருக்காங்க!"
கோவிந்தன் பேசாமல் சாப்பிட்டு முடித்தான். சாப்பாடு இறங்குவதே கஷ்டமாக இருந்தது.
சாப்பிட்டு விட்டுக் கை கழுவும்போது ஒரு எண்ணம் தோன்றியது. நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!
கை கழுவியபின் அன்னத்திடம் சொன்னான் "மறுபடி அந்த ரியல் எஸ்டேட்காரங்க வந்தா நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்."
அன்னம் நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள்.
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள்:
உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும் மழை வளம் குறைந்து விட்டால், உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.