Breaking News :

Tuesday, April 15
.

திருக்குறள் கதைகள் - குறள் 25


"நான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து நன்றாக உழைத்து வியாபாரத்தை அதிகரித்திருக்கிறேன். ஆனால் இது என் மானேஜருக்குப் பொறுக்கவில்லை."

"என்ன செய்கிறார்?"

"முதலில் நான் கொண்டு வந்த சில ஆர்டர்களில் குற்றம் கண்டு பிடித்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். வேறு சில ஆர்டர்களுக்கு ஒழுங்காக சப்ளை செய்யாமல் ஆர்டர் கொடுத்தவர்களிடம் எனக்குக் கெட்ட பெயர் வரச் செய்தார். இப்போது மிகவும் கஷ்டமான ஒரு ஏரியாவுக்கு என்னை மாற்றி இருக்கிறார்."

"நீ முன்னேறி எங்கே அவர் இடத்துக்கு வந்து விடுவாயோ என்று பயம்!"

"அதற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்ன?"

"இது ஒன்றும் புதியதில்லை தம்பி. புராண காலத்திலே கூட இது நடந்திருக்கிறது."
"அப்படியா?"

"ஆமாம். விஸ்வாமித்திரர் தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகையை அனுப்பினான் என்று கதை கேட்டிருப்பாயே?"

"ஆமாம். அவளிடம் மயங்கி விஸ்வாமித்திரர் தன் தவத்தை விட்டு விட்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைதானே சகுந்தலை?"

"இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கிறாயே, இதற்கு பதில் சொல். விஸ்வாமித்திரர் தவத்தை இந்திரன் ஏன் கலைக்க வேண்டும்?"

"தெரியவில்லையே!"

"ஒருவர் புலன்களை அடக்கித் தவம் செய்தால் அவர் ஆற்றலில் தேவர்களுக்கு இணையாகி விடுவார். அப்படிப்பட்டவர்களால் தன் இந்திர பதவிக்கே ஆபத்து வந்து விடுமோ என்று பயந்துதான் இந்திரன் தவம் செய்தவர்களுக்கு இடையூறு செய்கிறான். விஸ்வாமித்திரர் மட்டும் இல்லாமல் வேறு சிலரின் தவத்தைக் கலைக்கவும் முயற்சி செய்திருக்கிறான் இந்திரன். உன் மானேஜர் செய்வதும் இப்படித்தான்."

"புலன்களை அடக்கித் தவம் செய்வது இத்தனை வலிமை வாய்ந்த செயலா? வியப்பாக இருக்கிறது!"

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.

பொருள்:
ஐம்புலன்களை அடக்கிக் கட்டுப்பாட்டோடு வாழ்பவர்களின் ஆற்றல் எத்தகையது என்பதற்கு இந்திரனே போதுமான சாட்சியாக விளங்குகிறான். (பலரின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த இடையூறுகளே ஐம்புலன்களை அடக்கிச் செய்யப்படும் தவத்தின் வலிமையை எடுத்துக்காட்டப் போதுமானவை.)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.