Breaking News :

Tuesday, April 15
.

திருக்குறள் கதைகள் - குறள் 31


வேணுகோபால் தொழில்  தொடங்கியபோது  அவர் போட்ட மூலதனம் நூறு ரூபாய்தான். ஆனால் முப்பது வருடங்களில் அவர் தொழில் பெரிதாக வளர்ந்து வேணுகோபால் குழுமம் என்று அகில இந்தியப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

வேணுகோபாலிடம் ஒரு பலவீனம்(!) உண்டு. அவர் லஞ்சம் கொடுப்பதில்லை. வரி ஏய்ப்புச் செய்வதில்லை. பில் இல்லாமல் எந்தப் பொருளும் வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை.

இந்தக் கொள்கையினால் அவர் பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார். ஆயினும் அதிக வாய்ப்புள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்து அந்தத் துறைகளில் முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தினாலும், சிறப்பான சேவையாலும் வேகமான வளர்ச்சியை எட்டுவது என்ற அவரது அணுகுமுறை அவருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தது. ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின், லஞ்சம் கொடுக்காமலேயே தமக்கு வேண்டிய அரசு அங்கீகாரங்களை அவரால் உரிமையோடு கேட்டுப் பெற முடிந்தது.

தமது குழுமம் பெரிதும் வளர்ச்சி பெற்றபின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் தொழில் நுட்ப உதவியுடன் பெரிய அளவில் ஒரு ரசாயன உற்பத்தி நிறுவனத்தைத் துவங்க விரும்பினார் வேணுகோபால். அவருக்குத் தொழில் நுட்ப உதவி அளிக்க முன் வந்த வெளிநாட்டு நிறுவனம் உலக அளவில் புகழ் பெற்றது. இந்தத் தொழிலில் அவருடன் இணைந்து முதலீடு செய்ய  வர்மா என்ற ஒரு பெரிய தொழில் அதிபர்  முன் வந்தார். ஆயினும் வெளி நாட்டு நிறுவனத்திலிருந்து தொழில் நுட்ப உதவி பெற அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது.

இந்த அனுமதியைத் தரும் அதிகாரம் பெற்ற அமைச்சர் ஒரு பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டார். வேணுகோபால் பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்போது வர்மா வேணுகோபாலை நேரில் சந்தித்து லஞ்சத்  தொகையைத் தானே கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

"உங்கள் கொள்கைக்கு ஒரு ஊறும் வராது. இந்தப் பணத்தை நாங்கள் வேறு வகையில் ஏற்பாடு செய்து கொள்வோம்.உங்களைப் பொறுத்த வரை நீங்கள் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை!" என்றார் வர்மா.

வேணுகோபால் இதற்கு இணங்கவில்லை. "நீங்கள் கொடுத்தால் என்ன, நான் கொடுத்தால் என்ன, லஞ்சம் லஞ்சம்தானே?" என்றார்.

வேணுகோபாலின் பிடிவாதத்தால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. சில மாதங்களுக்குப் பிறகு வேணுகோபாலுடன் இணைந்து முதலீடு செய்வதாகச் சொன்ன வர்மா அதே வெளி நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தத் தொழிற்சாலையை வேறொரு மாநிலத்தில் துவங்கி விட்டார். அரசு அங்கீகாரம் அவருக்கு எப்படிக் கிடைத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை!

வேணுகோபலுக்கு இது ஒரு பெரிய  ஏமாற்றம். இந்தத் தொழிலைத் துவங்கி இருந்தால் அகில இந்திய அளவில் அவர் ஒரு மிகப் பெரிய தொழில் அதிபராக வளர்ந்திருப்பார்.

இப்போது அவர் வயது எண்பது. அவர் தொழில் துவங்கி ஐம்பது வருடங்கள் ஆகி விட்டன. அவரது பெரிய தொழில் முயற்சி தோல்வி அடைந்த இந்த இருபது வருடங்களில் அவர் எவ்வளவோ வளர்ச்சி கண்டிருந்தாலும் தோல்வியின் வலி அவருக்கு இருந்து  கொண்டே இருந்தது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக வாழ்ந்தது தவறோ என்று  சில சமயம் தோன்றும்.

அன்று மத்திய அரசின் தொழில்துறைச் செயலாளரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து தொழில் அதிபர்களில் வேணுகோபாலும் ஒருவர் என்ற செய்தியைச் சொன்னார் அவர்.

தன்னை விடப் பெரிய தொழில் அதிபர்கள் எத்தனையோ பேர் இருக்க, தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது வேணுகோபாலுக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. மற்ற ஒன்பது தொழில் அதிபர்கள் யார் என்பதயும் சொன்னார் செயலர். அந்தப் பட்டியலில் வர்மாவின் பெயர் இல்லை. மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கும் சில முறைகேடுகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டதால் அவர் பெயர் பட்டியலில்  இடம் பெற வில்லை என்று வேணுகோபால் பிறகு தெரிந்து கொண்டார்.

குறள் 31:
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பொருள்:
அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும். இவ் வுலகில் வாழும் உயிர்களுக்கு அறத்தை விட அதிக நன்மை அளிக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.