Breaking News :

Tuesday, April 15
.

திருக்குறள் கதைகள் - குறள் 9


அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

 

"கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவரை வணங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்பார்.

 

அவருக்குத் திருமணம் ஆயிற்று. அவர் மனைவிக்குக் கடவுள் பக்தி உண்டு. அதில் அவர் குறுக்கிடவில்லை.

 

பல ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பிறகு ஒருமுறை அவர் மனைவி அவரிடம் சொன்னாள். "நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவே, அவற்றின் பயன் என்ன என்று சொல்ல முடியுமா?"

 

"பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவனைக் கேட்பதுபோல் கேட்கிறாயே! சரி. படித்தது ஞாபகம் வருகிறதா என்று பார்க்கிறேன். கண் - பார்ப்பதற்கு. காது - கேட்பதற்கு. நா - சுவையை உணர்வதற்கு. நாசி - மணத்தை நுகர்வதற்கு. உடல் - தொடு உணர்ச்சிக்கு. எண்ணிக்கை ஐந்து வந்து விட்டதல்லவா?"

 

"சரி. தலை எதற்கு?"

 

"புதிதாகக் கேட்கிறாயே! மூளையை உள்ளடக்குவதற்கு, முகத்துக்கு மேல் மூடியாக இருந்து உடலுக்குள் நீர், தூசு இதெல்லாம் மேலிருந்து விழாமல் தடுப்பதற்கு!"

 

"அதை விட முக்கியமான ஒரு பணி தலைக்கு உண்டு. இறைவனை வணங்குவது."

 

"ஓ! கோவிலுக்குப் போய் விட்டு வந்தாய் அல்லவா? அங்கே உபன்யாசத்தில் சொன்னார்களாக்கும்?"

 

"கோவிலில் ஒருவரைப் பார்த்தேன். அவருக்கு ஒரு பையன் இருக்கிறானாம். பிறவி முதலே ஐம்புலன்களும் செயலற்றிருக்கின்றனவாம். கண் திறந்திருக்கும் ஆனால் எதையும் பார்க்காது. நாவுக்குச் சுவை தெரியாது. எதைக் கொடுத்தாலும் மென்று விழுங்கும். மூக்குக்கு வாசனை தெரியாது. மல்லிகையின் மணமும் ஒன்றுதான், சாக்கடையின் நாற்றமும் ஒன்றுதான். காது சுத்தமாகக் கேட்காது. உடலில் உணர்ச்சி கிடையாது. கீழே விழுந்தாலும் வலி தெரியாது. நடைப் பிணம் என்று சொல்வார்களே அது மாதிரி என்று சொல்லி வருத்தப்பட்டார்."

 

"மிகவும் பரிதாபமானதுதான். ஐம்புலன்கள் உடலில் உறுப்புக்களாக இருந்தும் அவை பணி செய்யவில்லை என்பது மிகவும் கொடுமை. ஆனால் அதற்கும், கடவுளை வணங்குவதுதான் தலையின் தலையாய பணி என்று நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?"

 

"ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது."

 

"என்ன குறள்?"

 

"கடவுளை வணங்காத தலை செயல்படாத புலன்களைப் போல என்று திருவள்ளுவர் சொல்கிறார்."

 

"திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அப்படித்தான் சொல்லுவார்! என்றாவது எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தால் நானும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வேன்."

 

"ஒருநாள் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

 

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

 

பொருள்:

எட்டு குணங்களை உடைய இறைவனை வணங்காத தலை செயல்படாத புலன்களை போல் பயனற்றது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.