Breaking News :

Tuesday, April 15
.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி 

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

 

பொருள்:

 

உலகம் தோன்றுவதற்கு முன்னாள் தோன்றி முதல்வனாகவும், ஊழி காலத்தில் இந்த உலகம் அழிந்த போது அதற்கு பின்பும் நிலைத்திருப்பவனாகவும் விளங்குபவன் நீ. நடுவில் உள்ள உலகிற்கும் தலைவானாக விளங்குபவன் நீ. பிரம்மாவும், விஷ்ணுவும், தேவாதி தேவர்கள் என எவராலும் அறிய முடியாதவன் நீ. அவர்களாலேயே உன்னை அறிய முடியவில்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களால் உன்னை எவ்வாறு உணர முடியும். நீயும், உன்னுடைய துணையாகிய பார்வதியும் குடிசை முதல் அனைவரின் வீடுகளிலும் எழுந்தருளியவனே. எரிகின்ற நெருப்பினை போல் உடலைக் கொண்ட இறைவனே, திருப்பெருந்துறை கோவிலை எனக்கு காட்டியது மட்டுமின்றி அந்தணரின் வடிவில் வந்து எனக்கு காட்சி கொடுத்தவனே. அமுதை போன்றவனே. அனைவருக்கும் உன்னுடைய அருளை வழங்க துயில் எழ வேண்டும்.

 

இறைவன் எளிமையானவன். அவன் பங்களாவாசிகளுக்கு மட்டுமல்ல, ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்கள் வீட்டுக்கும் பவனியாக வருவான். அவனை வணங்க எதுவுமே வேண்டாம். நல்ல உள்ளம் இருந்தால் மட்டும் போதும் என்பது இப்பாடலின் உட்கருத்து. இறைவன் இங்கு தான் இருப்பார், இங்கெல்லாம் இருக்க மாட்டார் என யாராலும் சொல்லி விட முடியாது. அவருக்கு ஏழை, பணக்காரர் என்ற பேதம் கிடையாது. எங்கும் நிறைந்திருக்கக் கூடியவர். அதே சமயம் இறைவன் எவராலும் முழுமையாக உணர முடியாதவர். அவர் பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாக விளங்கக் கூடியவர் என்பதையும் மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.

 

சிவனை மட்டும் தனித்து குறிப்பிடாமல், சிவனின் உடலில் பாதி பார்வதி என்பதால் எங்கெல்லாம் சிவன் எழுந்தருளி இருக்கிறாரோ, அங்கு எல்லாம் பார்வதி தேவியும் எழுந்தருளி இருப்பார் என்பதையும் இந்த பாடலில் குறிப்பிட்டு, தனக்கு எளிமையான அந்தணன் வடிவில் வந்து இறைவன் காட்சி கொடுத்ததையும் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.