Breaking News :

Tuesday, April 15
.

திருப்பாவை பாசுரம் 27


கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா ! உன்றன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

 

பொருள் :

 

எதிரிகள் எத்தனை வல்லவராக இருந்தாலும் அவர்களை அழித்து, எதிர்ப்பதற்கு யாருமே இல்லை என வெற்றிகள் அனைத்தையும் தன் வசமாக வைத்துள்ள வல்லமை கொண்ட கோவிந்தனே! உன்னை போற்றி புகழ்ந்து, உன்னுடைய கருணையை நாங்கள் பெற்ற பிறகு அதை விட மேலான பரிசு எதுவும் எங்களுக்கு இனி வேண்டாம். பாடை நோன்பினை நிறைவு செய்த பிறகு தலைக்கு சூடகம், கழுத்திற்கு நகைகள், வளையல்கள், காதிற்கு தோடு, இடுப்பிற்கு உரிய அணிகலன் என அனைத்தையும் அணிய போகின்றோம்.


 

நன்கு அழகான, கண்களை கவரும் உடைகளை உடுத்திக் கொள்ள போகிறோம். அதற்கு பிறகு, தண்ணீரில் அல்லாது பாலில் சோற்றினை வேக வைத்து, அதோடு வெல்லம் சேர்த்து தித்திப்பான உணவை தயார் செய்ய போகிறோம். அந்த உணவினை ஒருவருக்கு கைகளில் வழங்கினால், அந்த உணவில் சேர்க்கப்பட்ட நெய், வாங்குபவரின் கை வழியாக வழிந்து, முழங்கை வரை வழிந்தோடும். அந்த அளவிற்கு நெய் ஊற்றி சுவையான உணவினை தயார் செய்து, அனைவரும் கூடி உண்டு மகிழ போகிறோம்.

 

விளக்கம் :

 

மார்கழி மாதத்தில் கடைபிடித்து வந்த பாவை நோன்பினை நிறைவு செய்ய போவதன் மகிழ்ச்சியை ஆண்டாள் இந்த பாடலில் வெளிக்காட்டி உள்ளார். இறைவனின் அருளை பெற்ற பிறகு வேறு என்ன இந்த உலகில் வேண்டும். இறைவனின் அருளை தவிர தங்களுக்கு எதுவும் பெரிதல்ல எனக் கூறும் ஆண்டாள், பெண்களுக்கே உரிய இயற்கை குணத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களை எப்படி எல்லாம் பெண்கள் அலங்கரித்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் என்பதை இங்கு விளக்குகிறார். நிறைவாக மார்கழி மாதத்தின் நிறைவாக பால், அரிசி, பருப்பு, வெல்லம் சேர்த்து படைத்து, அனைவரும் ஒன்றாக சேர்ந்து பகிர்ந்து உண்ணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையும் ஆண்டாள் இந்த பாடிலில் குறிப்பிட்டுள்ளார்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.