Breaking News :

Tuesday, May 06
.

வளையல் வியாபாரிக்கு உதவிய பெரியவா!


"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம். பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில்  மகா பெரியவா  அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்தான். அவருடைய சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது.  மடத்து ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை  தன் அருகே அழைத்து வரச் செய்தார். மெதுவாக  வியாபாரியை  விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"  போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான். தன்னுடன் வயதான தனது தாயாரும், மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச் சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்"  என்று சொன்னவர், அதற்கேற்ற  விளக்கமும்  தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப் புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!" என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல் எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து வளையல்காரரிடமே  கொடுக்கச் சொல்லுகிறார்.  அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாகஇருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,  புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.
இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"
தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால் தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம் எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!

மனதைத் தொடும் நிகழ்ச்சி
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
தட்டச்சு; வரகூரான் நாராயணன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub