"என்னடாது, இத்தனை நேரம் நன்னா (வீணை) வாசிச்சுட்டு, மங்களம் வாசிக்காமப் போயிட்டானே!
ஸ்டேஷனுக்குப் போய் அவனை அழைச்சுண்டு வந்து மங்களம் வாசிச்சுட்டுப் போகச் சொல்லு." - பெரியவா
பரணிதரன் சொன்னது.
காளகஸ்தியில் ஓரிரவு.இளைஞர்வாசு வீணை வாசித்துக்கொண்டிருக்க,பெரியவா ஏகாந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.இரண்டு கீர்த்தனங்கள் முடிந்ததும் பெரியவா படுத்துக்கொண்டுவிட்டார்.
மூன்றாவது கீர்த்தனம் முடியும் தறுவாயில்நன்றாக உறங்கிப் போய்விட்டார்.பெரியவாதான் வாசிப்பதைக் கேட்கவில்லையே என்று, அடுத்துத் தொடங்கிய பாட்டை அவசர அவசரமாக முடித்துவிட்டு வாத்தியத்தை உறையில் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டார். வாசு. அவருக்கு ரயிலுக்கு நேரமாகிவிட்டது.
ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் பெரியவா கண் விழித்தார்.
கண்ணனிடம், 'வாசு எங்கேடா?' என்று வினவினார்.
"பெரியவா தூங்கிப் போயிட்டா,வாசித்து முடிச்சுட்டு ரயிலுக்கு நேரமாறதுன்னு அவசர அவசரமாகப் போய்விட்டான்" என்றார் கண்ணன்.
"என்னடாது, இத்தனை நேரம் நன்னா வாசிச்சுட்டு, மங்களம் வாசிக்காமப் போயிட்டானே! ஸ்டேஷனுக்குப் போய் அவனை அழைச்சுண்டு வந்து மங்களம் வாசிச்சுட்டுப் போகச் சொல்லு."
நாங்கள் இருவரும் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். பிளாட்பாரத்துக்கள் நுழையும் தருணம்,ரயில் புறப்படுவதற்கான பரபரப்பு காணப்பட்டது.
நான் ஒரு பக்கமும்,கண்ணன் ஒரு பக்கமுமாக "வீணை வாசு,வீணை வாசு" என்று பெட்டிப் பெட்டியாகக் கூவியபடி ஓடினோம்.ஒரு பெட்டியிலிருந்து வீணையுடன் வாசு கீழே குதிக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது.
அன்று பெரியவா சந்நிதியில் மங்களம் வாசித்து விட்டு, மறுநாள்தான் சென்னைக்குச் சென்றார் வாசு.