Breaking News :

Sunday, May 04
.

வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்?


என் வெளிநாட்டு காதல் கணவனே....!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!

என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடினாய்....!

பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனை போல...

மடியில் படுத்துக்கொண்டு எழ மறுத்தாய்.....!

இவை போன்ற எல்லா சொர்கத்தையும்
மூன்றே மாதம் தந்துவிட்டு...

எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...!
என் வெளிநாட்டு கணவா!ٌ

கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு மூன்று மாதம்,கனவுகளோடு எத்தனை மாதம்?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...!
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....!
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...!
2 வருடமொருமுறை கணவன் ...!

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ
இது வரமா ..? சாபமா..?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா...!
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…..!

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு.....!

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்....!

மூன்று மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு, உல்லாச பயணம்..!

பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?

விரைவுத்தபாலில் காசோலை வரும்,காதல் வருமா..?
பணத்தை தரும் பாரத வங்கி ! பாசம் தருமா..?

நீ இழுத்து சென்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்....,அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

உன் வெளிநாட்டு தேடுதலில்,தொலைந்து போனது - நம் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த பாஸ்போர்ட் நமக்கு வேண்டாம்,கிழித்துவிடு!

விசா ரத்து செய்துவிட்டு வா,என் காதல் கணவனே,இல்லையென்றால் விவாக ரத்து செய்து விட்டு போ.!

நீ தொலைபேசியில் கொடுத்த அனைத்து முத்தத்ததையும் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறேன்.

என்றாவது ஒரு நாள் அதையெல்லாம் உனக்கு நேரில் தரவேண்டும் என்ற ஏக்கத்தோடு........!!

கனவுகளோடும்,அதைவிட ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளோடும்...!!

#என்றும்உன்னவள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.