Breaking News :

Monday, May 05
.

காரைக் கவிழ்த்த காட்டேரி - அதிர்ச்சிக் கதை?


இந்தக் கதை நடந்தது 110 வருடங்களுக்கு முன்னால்...

 சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையும் எத்திராஜ் சாலையும் சேரும் இடத்தில் அந்தக் காலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்திருக்கிறது. அந்த பாலம் ஆண்டர்சன் பாலம் என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பாலத்தில் 1909-ம் வருடம் ஒரு மார்ச் மாத இரவில் ஒரு மோசமான விபத்து நடந்தது.

டபிள்யு.பியர்டெல் என்கிற கார் ஓட்டுவதில் நிபுணரும் பல பரிசுகளை வென்றவருமான ஒரு பிரமுகர் நள்ளிரவு நேரத்தில் அந்தச் சாலையில் காரில் வந்துகொண்டு இருந்தார். கார் என்றால் சாதாரண கார் அல்ல , அது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார். சில்வர் கோஸ்ட் என்கிற மாடலைச் சேர்ந்தது. அந்தக் கார் அன்றிரவு ஆண்டர்சன் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு கூவத்திற்குள் இறங்கிவிட்டது. பியர்டெல்லுக்கு கடுமையான காயம். அவரைப் போன்ற ஒரு சாம்பியன் டிரைவர் ஆளில்லாத பாலத்தில் விபத்துக்கு உள்ளானது எப்படி என்று எல்லோரும் வியந்துகொண்டு இருந்த போது கே.ஜே செட்டி என்பவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய  கடிதத்தில் இந்த விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கே.ஜே செட்டியும் அவரது நண்பர்களும் ஒரு மாட்டு வண்டியில் நுங்கம்பாக்கம் போய்கொண்டு இருந்தார்களாம் ஒரு நள்ளிரவில்.. அதுவரை ஒழுங்காகப் போய்க்கொண்டு இருந்த மாடு ஆண்டர்சன் பாலம் வந்ததும் மிரண்டு தாறுமாறாக ஓடி வண்டியைக் கவிழ்க்க பார்த்ததாம். நானும் நண்பர்களும் வண்டியை விட்டு இறங்கியதால் தப்பித்தோம். இல்லாவிட்டால் அன்று செத்திருப்போம்' என்று செட்டி அந்த கடிதத்தில் சொல்லி இருக்கிறார்.

பிறகு விசாரித்ததில் வண்டிமாடு மிரண்டதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. அந்த இடத்தில் ஒரு காட்டேரி இருக்கிறதாம், நகர எல்லையை கடந்து ஆற்றுப் பாலத்தை கடப்போரை அது தாக்குமாம். உள்ளூர் வண்டிக்காரர்கள் அந்த இடத்தைக் கடக்கும்போது தங்கள் தெய்வத்தை வேண்டிக் கொண்டோ, சத்தமாக பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டோ வருவார்களாம்.

அதனால் அவர்களை அந்த காட்டேரி தாக்காதாம். அது தெரியாமல் சாதாரணமாக வந்ததால் தான் தங்கள் மாட்டு வண்டியையும், பியர்டெல்லிம் காரையும் காட்டேரி தாக்கி விட்டது என்று தனது கடிதத்தில் சொல்லி இருக்கிறார். 110 வருடம் முன்பே சென்னையில் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தது அதிசயம் என்றால், அந்தக் காரை ஒரு காட்டேரி கவிழ்த்தது அதைவிட பெரிய அதிசயம் இல்லையா?.

News Hub