நமது அன்றாட வழக்கத்தில் பல விதிகளை கேட்டிருப்போம். ஆனால், அந்த விதி எதனால் உருவானது என்பதை அறியாமல் இருந்திருப்போம். அப்படி ஒரு விதி தான் “விமானத்தில் பயணிக்கும் போது மொபைல் போனை “ஃபிளைட் மோட்” (Flight Mode) இல் கண்டிப்பாக போட வேண்டும் என்கிற விதி. ஏன் அப்படி செய்ய சொல்கிறார்கள், அப்படி செய்யாவிட்டால் என்னவாகும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
உங்களது மொபைல் கருவிக்கும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு [Cell Phone Tower] இடையே இருக்கக்கூடிய தொடர்பினை துண்டிக்க உதவும் ஒரு ஆப்சன் தான் Flight Mode. விமானத்தில் நாம் பயணிப்பதற்கு பல கட்டுப்பாடுகள், விதிகள் உள்ளன. சீட் பெல்ட் அணிவது கட்டாயம், பிறருக்கு தொந்தரவாக சத்தமாக பேசக்கூடாது, பறக்க தயாராகும் போது எழுவது என பல விதிகள் உண்டு. அதிலே முக்கியமான விதி “உங்கள் மொபைல் போனை Flight Mode இல் வைப்பது”. விமானப் பணியாளர்கள் பயணிகளிடம் உங்களது செல்போன் கருவியை Flight Mode இல் மாற்றுங்கள் என்று சொன்னாலும் கூட சிலர் அதனை செய்வது இல்லை. ஊழியர்களும் கூட ஒரு அறிவுரையாக கூறிவிட்டு அதனை கண்டுகொள்வது இல்லை. ஏன் Flight Mode இல் வைக்க சொல்கிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ரேடியோ குறுக்கீடு (Radio communication interference):
விமானத்திற்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்பது விமானம் வெற்றிகரமாக பறப்பதற்கும் தரை இறங்குவதற்கும் முக்கியமான விசயம். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உரிய நேரத்தில் விமான ஓட்டிகளுக்கு சென்று சேர வேண்டும். முக்கியமான நேரங்களில் ஒரு நொடி தாமதம் அல்லது குறைபாடு கூட பெரும் விபத்தை ஏற்படுத்திவிடும். நாம் மொபைலை Normal Mode இல் வைத்திருந்தால் மொபைல் போன்கள் அனைத்தும் செல்போன் டவருடன் தொடர்பில் இருக்கும். விமானத்தில் இருக்கும் அனைவரது மொபைலும் இப்படியே தான் தொடர்பில் இருக்கும். மேலும் விமானம் புறப்படும் போது அதிவேகத்தில் விமானம் செல்வதனால் ஒவ்வொருவரின் மொபைல் போனும் செல்போன் டவருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முயலும். ஆகவே, விமானத்திற்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பில் தொந்தரவை ஏற்படுத்தலாம். ஆகவே தான் மொபைல் போனை விமானம் மேலேறும் போதும், தரையிறங்கும் போதும் Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இதுவரைக்கும் இப்படி ரேடியோ குறுக்கீட்டினால் விபத்துக்கள் நடந்ததாக தெரியவில்லை. ஆனாலும், ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள்.
நேவிகேஷன் குறைபாடு (interference navigational system)
விமானம் சரியான இலக்கை நோக்கி பறப்பதற்கு சாடிலைட் மற்றும் சில கம்யூனிகேசன் சாதனங்கள் உதவுகின்றன. இவை நேவிகேசன்ஸ் சிஸ்டம்ஸ் என்றழைக்கப்படுகிறது. விமானத்தில் பெரும்பான்மையானோர் மொபைல் போனை பயன்படுத்தும் போது நேவிகேசன்ஸ் சிஸ்டம்ஸ் தொடர்பில் தவறு/ குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படியொரு விசயம் நடந்தது இல்லை என்றாலும், Federal Communications Commission (FCC) விதிப்படி அமெரிக்காவில் விமானத்தில் செல்போனை Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள்.
தற்போது உருவாக்கப்படும் விமானங்களில் இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் ஏற்படாதவண்ணம்தான் அவை தயாரிக்கப்படுகின்றன.
மொபைல் சார்ஜ் குறைதல்:
ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.
பேசிக்கொண்டே நாம் வாகனத்தில் பயணித்துக்கும் பொழுது நமது கைபேசி பேட்டரி விரைவாக முடிவதற்கு இதுவே காரணம்.
ஒவ்வொரு கைபேசியின் தகவல் தொடர்பு (சிக்னல்) துண்டிக்கப்படும்போது, நமது கைபேசி அதன் சமிக்ஞையை அதிகரிக்கும் (boost its signal) இதனால் பேட்டரி சக்தி மேலும் அதிகமாக விரையமாகும்.
இதுவொரு முக்கியமான காரணமாக இல்லாவிட்டாலும் கூட சிலர் இதற்காகவும் மொபைலை Flight Modeஇல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள்.
பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்னவாகும்?
விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது,
விமானம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட இடம் (confined space). இந்தமாதிரி ஒரு குழாயில் நம்மை ஆட்டுமந்தை போல் அடைத்துவைத்து தான் அழைத்துச்செல்கின்றனர்.
வரையறுக்கப்பட்ட ஒரு இடத்தில் சிலருக்கு எவ்வாறுநடந்து கொள்ளவேண்டும் என்று தெரியாது. இன்றும் நாம் பேருந்தில்/ ரயிலில் பயணிக்கையில் அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பரவலாக நம்மால் காணமுடியும்.
விமானம் மேலெழும்பும் போதும், தரையிறங்கும் போதும், கைபேசியை அனைத்துவைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தியும், விமானம் ஓடுபாதையை அடையும் வரை கைபேசியை கீழே வைக்காத சிலரை நாம் இன்றும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
விமானம் தரையிறங்கும் போது, நமது கைபேசிகள் தொடர்பு எல்லைக்கு அந்த பிறகு, நிலுவையில் இருந்த தகவல்கள் அனைவருக்கும் ஒரேசமயத்தில் வந்து சேர, விமானம் சரவெடி போல் அதிரும். அந்த நேரத்தில் ஏதாவது விமானக்கோளாறு ஏற்பட்டால் (பல கோளாறுகள் விமானம் மேல் எழும்பும்போதும், தரை இறங்கும் போதும்தான் நிகழ்கிறது) விமான சிப்பந்திகள் பணிச்சுமை அதிகமாகும், அவர்கள் அறிவுறுத்தும் விஷயங்கள் நமக்கு வந்து சேராது.
அவசரகால வெளியேற்றத்தின் போது, விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தியும் இன்றும் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கும் (பிறரின் உயிரை பற்றி கவலைப்படாத) ஜந்துக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
விமான விதிகளை மதிப்போம்!